Wednesday, February 1, 2017

நீட் தேர்வு நிலையை தெளிவுபடுத்துக: மாணவர்களை நட்டாற்றில் விடக்கூடாது- ராமதாஸ் அறிக்கை


நீட் தேர்வுக்கு முன்பாக நீட் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக தமிழக மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை நட்டாற்றில் தள்ளிவிடும் பாவத்தை தமிழக அரசு செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பாதுகாப்பதற்கான இந்த முன்வரைவு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்படுகிறது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (NEET) விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, அத்தேர்வுக்கான அட்டவணையை, தேர்வு நடத்தும் அமைப்பான, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டிருக்கிறது. மே மாதம் 7-ஆம் தேதி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்காக ஜனவரி 31-ஆம் தேதி முதல் மார்ச் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றே தொடங்கி விட்ட நிலையில், தமிழக அரசின் அறிவிப்பை நம்பி விண்ணப்பிக்காமல் இருந்து விடலாமா? அல்லது குறைந்தபட்ச பாதுகாப்பு கருதி இத்தேர்வுக்கு விண்ணப்பித்து வைக்கலாமா? என்ற குழப்பம் 12-ஆம் வகுப்பு மாணவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

ஒருவேளை குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடாக மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்து வைத்தாலும் கூட அது பெயரளவிலான நடவடிக்கையாகவே இருக்கும். ஏனெனில், தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகின்றன. அதுவரை நுழைவுத்தேர்வுக்கு மாணவர்களால் தயாராக முடியாது. பொதுத் தேர்வு முடிவடைந்த பின்னர், நுழைவுத் தேர்வுக்கு 35 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் நுழைவுத் தேர்வுக்கு ஆயத்தமாக முடியாது. எனவே, இன்றைய சூழலில் பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்புவது தான் தீர்வாகும்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும், அது செல்லத்தக்க சட்டமாக மாறுவதற்கு இன்னும் பல படிகளை கடக்க வேண்டும். மருத்துவமும், மருத்துவக் கல்வியும் பொதுப்பட்டியலில் இருப்பதால் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களுக்கு இடையில் முரண்பாடு இருந்தால் மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும். மாநில அரசின் சட்டம் பொருளற்றதாகிவிடும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டம் மத்திய அரசின் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் -1956க்கு எதிராக இருப்பதால், இந்த இரு சட்டங்களில் எது செல்லுபடியாகும் என்ற வினா நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டால் மத்திய அரசின் சட்டத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பளிக்கப்படும். அதேநேரத்தில் தமிழக அரசின் சட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால் அது செல்லத்தக்க மாநில சட்டமாகி விடும்.

அத்தகைய அந்தஸ்தை தமிழக நீட் சட்டம் பெறுவது சாதாரணமான ஒன்றல்ல. மத்திய சுகாதாரத் துறை, சட்டத்துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டால் தான் தமிழக சட்டம் செல்லத்தக்கதாக மாறும். இதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைய கடந்த காலங்களில் பல மாதங்கள் ஆகியிருக்கின்றன. இப்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டால், தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு அழிந்து விடும். அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவசர சட்டத்துக்கு ஒரு நாளிலும், நிரந்தர சட்டத்துக்கு ஒரு வாரத்திலும் ஒப்புதல் வாங்கியதைப் போல, நீட் சட்டத்துக்கும் மத்திய அரசின் ஒப்புதலையும், குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற முடியும். ஆனால், அதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் மிகக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடம் பேச்சு நடத்தி தான் தமிழக அரசு பெற்றது. அதேபோல், நீட் சட்டத்திற்கும் அனுமதி பெறுவதற்காக மத்திய அரசிடம் பேச்சு நடத்தி கொள்கை அடிப்படையில் ஒப்புதல் பெற்றிருக்கிறதா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும். நீட் தேர்வுக்கு முன்பாக நீட் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக தமிழக மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை நட்டாற்றில் தள்ளிவிடும் பாவத்தை தமிழக அரசு செய்யக்கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024