இன்னும் ஒரு வாரத்தில் +2 தேர்வு... பெற்றோர்கள் செய்யவேண்டிய 10 விஷயங்கள்!
+2 தேர்வுகள் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. மாணவர்கள் ஒரு வருடம் படித்தவற்றை தேர்வுகளில் சரியாக முன் வைக்கவேண்டியது அவசியம். ஆசிரியர்கள் தங்களின் பங்களிப்பாக சிறப்பான பயிற்சியை அளித்திருப்பார்கள். இப்போது, தேர்வு வரையிலான படிக்கும் நேரத்தில் அவர்களைச் சரியாக வழிகாட்டவேண்டிய பொறுப்பு, பெற்றோர்களுக்கே இருக்கிறது. இந்த ஒரு வாரத்தை, பிள்ளைகளுக்கு உதவும்விதத்தில் மாற்ற, பெற்றோர்கள் செய்யவேண்டிய 10 விஷயங்களை விளக்குகிறார், விழுப்புரம், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஶ்ரீ.திலீப்.
1. பாஸிட்டிவ் எண்ணங்கள்: முதல் விஷயமாக இதைக் குறிப்பிடுவதற்கு என்ன காரணம் என்றால், இது மிக முக்கியமானது. தன்னால் முடியும் என்ற எண்ணங்களைப் பிள்ளைகளின் மனதில் விதைத்திருப்போம். ஆனால் தேர்வு நெருங்க, நெருங்க யார் மூலமாவது நெகட்டிவ் எண்ணங்கள் நுழைய வாய்ப்பிருக்கிறது. அதனால், கடைசி நேரம் வரை பாஸிட்டிவ் எண்ணங்கள் சூழ்ந்திருக்கும் நிலையை உருவாக்கித் தர வேண்டும்.
2. அமைதி நிலவட்டும்: அமைதி என்றவுடன் டி.வி பார்ப்பதை நிறுத்திக்கொள்வது, அண்டை வீடுகளில் சத்தம் வந்தால், ஏதேனும் செய்தால் அவற்றை நிறுத்தவைப்பது மட்டுமல்ல, குடும்பங்களின் அன்புப் பரிமாற்றம் நடப்பதைப் போலவே முரண்பட்ட கருத்துகளும் நிலவும். அது, சண்டையாகப் போவதற்கும் வாய்ப்புகள் இருக்கும். ஆனால், தேர்வு நெருங்கி வந்துவிட்டதை மனதில் வைத்துக்கொண்டு, பிள்ளைகளுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொடுங்கள்.
3. புத்தகங்கள்: மாணவர்கள், தேர்வுக்குத் தேவையான Guide தேவை என்று பிள்ளைகள் கேட்டால், 'இந்த நேரத்துக்கு எதற்கு?' என்று திட்டாமல் வாங்கித்தாருங்கள். மேலும், ஒரு வருடமாக பாதுகாத்த புத்தகங்களைக் கவனக்குறைவால் தொலைத்திருக்கலாம். உங்களிடம் அதைச் சொல்ல தயக்கமோ பயமோ கொண்டிருக்கலாம். அதனால், தேர்வுக்குத் தேவையான ஸ்டடி மெட்டீரியல் (Study Material) அனைத்தும் இருக்கின்றவா என்று கேளுங்கள். அப்படி ஏதேனும் புத்தகம் இல்லை என்றால், வாங்கித் தர தாமதிக்காதீர்கள்.
4. நினைவூட்டல்: தேர்வுக்கு முந்தைய நாட்களில் (Study Holidays) எப்படி படிப்பது என்பதை ஒவ்வொரு பாடத்திற்கும் ஆலோசனைகள் கூறியிருப்பார்கள். அவற்றை, நீங்களும் பிள்ளையும் இணைந்து பட்டியலிடுங்கள். அதன்படி ரிமைண்டர் வைத்து, தினந்தோறும் படிக்கச்சொல்லுங்கள். அன்றைய தினம் படிக்கவேண்டியதை, முடிக்க முடியவில்லை என்றால், பிள்ளை பதட்டம் அடையாமல் ஊக்கப்படுத்துங்கள்.
5. கவனமா, பதட்டமா? : பப்ளிக் எக்ஸாம் என்பது எல்லோருக்குமே பதட்டத்தை வரவழைக்கக்கூடிய ஒன்றுதான் அதுவும் தேர்வு எழுதப்போகும் பிள்ளைகள், இன்னும் உட்சபட்ச பரபரப்பில் இருப்பார்கள். பதட்டத்தை இன்னும் கூட்டச்செய்யும் வேலைகளில் பெற்றோர்கள் இறங்கிவிடக் கூடாது. பிள்ளைகளின் படிப்பு, உடல்நிலை, மனநிலை ஆகியவற்றில் பெற்றோருக்கு கவனம் இருக்கவேண்டும். பதட்டம் கூடாது. பதட்டம் அதிகரித்தால், அது அருகில் இருப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும்.
6. ஓய்வும் தேவை: படிப்பு படிப்பு என நாள் முழுவதும் படித்துக்கொண்டிருப்பார்கள் பிள்ளைகள். தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் அது தேவையானதும்கூட. ஆனால், அதேநேரம் ஓய்வில்லாமல் படிப்பதும் சரியானது அல்ல. அதனால், இடையிடையே ஐந்து, பத்து நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். அதேபோல, ஆறு மணிநேர தூக்கம் கட்டாயம் தேவை. இரவு 11 மணிக்கு உறங்கி, காலை 5 மணிக்கு எழுந்திருப்பது நல்லது.
7. டிப்ஸ்: பிள்ளைகளின் ஆசிரியர்களோடு நல்ல உறவு இருக்கும்பட்சத்தில் அவர்களோடு உரையாடி, பிள்ளைகளுக்குத் தேவையான டிப்ஸ் பெற்றுத் தரலாம். தேர்வுக்குத் தயாராவதற்கு (exam preparation) எல்லா வகைகளிலும் உதவியாக இருக்க வேண்டும்.
8. மருத்துவம்: தேர்வு எழுதத் தயாராகுபவர்களில் சிலர், தொடர் சிகிச்சையில் இருப்பார்கள். அவர்களுக்கு மருந்துகள் தருவதில் தொய்விருக்கக் கூடாது. பிள்ளைகள் படிக்கும் மும்மரத்தில் மருந்து எடுத்துக்கொள்ள மறந்துவிடுவர். பெற்றோர்கள்தான் சரியான நேரத்திற்கு தேவையான மருந்துகளைத் தர வேண்டும். தவறினால், படிப்பிலும் தேர்வு எழுதுவதிலும் சிக்கல் ஏற்படலாம்.
9. உடன் இருப்பதே பலம்: தேர்வின்போது உடன் இருப்பதைப் போலவே தேர்வுக்குச் செல்லும்போதும் உடன் இருங்கள். பிள்ளைகளை நீங்களே பாதுகாப்போடு பள்ளிக்கு அழைத்துச்சென்று, திரும்ப அழைத்துவாருங்கள். பெற்றோர், தன் மீது தனிக் கவனம் செலுத்துவது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
10. இது இறுதியல்ல: உங்கள் பிள்ளை எழுதப்போகும் தேர்வு குறித்து நன்கு தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை, இந்தத் தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால், சில நாட்களில் திரும்பவும் எழுதலாம் என்கிற விஷயங்களைத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அதனால், பிள்ளைகளின் மேல் அதிக அழுத்தத்தைச் செலுத்தாமல் படிக்கச்செய்யுங்கள். இப்படி இல்லாத பட்சத்தில், தேர்வில் தேர்ச்சி அடையாத சில மாணவர்கள், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கக்கூட இல்லாமல் தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள்.
தேர்வு முடிவு தெரியும் நாளில், எல்லையில்லா மகிழ்ச்சியை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அடைய வாழ்த்துகள்.
No comments:
Post a Comment