Wednesday, February 1, 2017

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை By DIN | Published on : 01st February 2017 02:01 AM


arrest
கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ஹரி நாராயண் ராய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
நாட்டிலேயே முதல்முறையாக கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மதுகோடா தலைமையிலான அரசின் ஆட்சிக் காலத்தில் மாநில சுற்றுலா, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வனத் துறை அமைச்சராக ஹரி நாராயண் ராய் பதவி வகித்தார்.
அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அவருக்கு எதிராக கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
அவர் சுமார் ரூ.3.72 கோடி கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கு விசாரணையின் முடிவில் ஹரி நாராயண் ராய் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
அப்போது, அவருக்கு 7 ஆண்டு கடுங்காவலும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கருப்புப் பண தடுப்புச் சட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ள முதல் நபர் இவர்தான். இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024