Wednesday, February 1, 2017

தமிழர்தம் வீரச் செருக்கு

By நெல்லை சு. முத்து  |   Published on : 01st February 2017 03:02 AM 
மாணவர்கள் தன்னெழுச்சி என்று தொடங்கி, இளைஞர்கள் போராட்டம் என்று அதரவு பெருகி, சமூகவிரோத ஊடுருவல், ஆர்ப்பாட்டம் என்று கலைக்கப்பட்ட நிகழ்வு ஜல்லிக்கட்டு.
அதில் தங்களை ஐக்கியப்படுத்தி கொண்ட திரைத்துறையின் முன்னணி நாயகர்கள் முதல் பின்னணி இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் பலரும் போராட்டத்தை முடித்துவைத்து அறிவித்தனர். கட்சிக் கொடிகள், தலைவர்கள் இல்லை. ஆனாலும் ஒரு சாராரிடையே அரசியல் இல்லாமல் இல்லை. பிரதமர், முதல்வர், கட்சிப் புதுச்செயலாளர், ஆட்சியாளர் அனைவரும் விமர்சனத்திற்கு உள்ளாயினராம்.
விவசாயிகள் தற்கொலை பற்றி கவலைப்படுவோர், விவசாய நிலங்களைப் பட்டா போட்டு விற்றவர்களுக்கும் வலைவிரிக்க வேண்டுமே. கண்மாய்களின் கண்களை கிரானைட் கற்களால் அடைத்தவர்களை விட்டுவிட்டு, வேணான் மாடுகள் பற்றி வீரம் பேசுவானேன்? ஆற்றுமணலை ஆள்வைத்து அள்ளி வழங்கும் வள்ளல்களுக்கும் அணைநீர்த் தாகம் வாழ்வில் வரவே வராதா?
தேசியக் கொடியை அவமதிக்க எத்தனித்த விஷமிகளைத் தாங்களாகவே முன்வந்து சிலரேனும் அப்புறப்படுத்தி இருக்கலாம் அல்லவா?
1960-ஆம் ஆண்டுகளின் இறுதியில் திருநெல்வேலி சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசான் அருணாசலம் ஐயா, மாணவர்களை "ஏய் மாடு' என்றுதான் திட்டுவார். கேட்டால், "மாடு என்றால் செல்வம் என்று பொருள்' என்பார்.
சங்கப் பாடல்களில் ஏறு தழுவுதல் என்பது கலித்தொகையில் காடு சார்ந்த முல்லைக் கலியின் மட்டுமே இடம்பெறுகிறது. மாட்டுச் சந்தையில் (மந்தையாகச் செல்பவை மந்திகள் மட்டும் அல்லவே!) தனியே வளர்க்கப்படும் காளைக்குப் போர்ப் பயிற்சி தரப்படும். இதனை அடக்கியவனுக்கே செல்வப் பெருமக்கள் தங்கள் பெண்மக்களை மணம் செய்விப்பது வழக்கம். இது சுயம்வரப் போட்டிக்கான விளையாட்டு.
பல்லுயிரிப் பெருக்கத்தின் ஆரம்ப அறிவியல் விளையாட்டு. சர் ராபர்ட் பேக்வெல் (1725 - 1795) என்பவர்தான் முதன்முதலில் விலங்குகளின் கலப்பின விருத்திக்கு நவீன அறிவியல் அங்கீகாரம் வழங்கியவர். தமிழர் அதனை ஏறு தழுவல் என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக நடத்தி வந்தனர்.
பின்னாளில் தமிழர் பண்டிகையான பொங்கல் திருவிழாவில் துணிப் பொதியில் கட்டப்பட்ட ஜல்லிக்காசுகளை எடுக்கவும் பொறுக்கவும் ஏறு தழுவினர். இது எருதுகட்டு என்றும் சுட்டப்பெறும். காளை விரட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு என்றும் பல பெயர்கள்.
இங்கு வீர்யம் என்ற சொல் அடிப்படையில் வீரம் பிறந்தது. அதன் உரிசொல் சார்ந்து, வைரம் பாய்ந்த மரம், நெஞ்சுரம் என்று எல்லாம் பேசினோம். ஆனால், தொல்காப்பியம் காட்டும் வீரம் பற்றியும் தமிழ் இளைஞர்கள் அறிந்து கொள்ளலாமே.
"தொல்காப்பியர் ஒவ்வொரு வீரமும் தோன்றுவதற்கு மூலமான பொருள்கள் நன்நான்கு கூறுகின்றார். அவர் வீரம் என்பதைப் பெருமிதம் எனும் சொல்லால் குறிக்கின்றார். யாவரொடும் ஒப்ப நில்லாது மேம்பட்டு நிற்றலின் பெருமிதம் என்னும் சொல்லால் வீரம் குறிக்கப்படுகின்றது.
கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கும் பற்றிப் பெருமிதம் பிறக்கும் என அவர் கூறியுள்ளார். எனவே போர்ச் செயலிற் காட்டும் ஆண்மையை மட்டுமே அவர் வீரம் எனக் கொண்டிலர் என்பது பெறப்படும்' - என்று நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் "வீரச்சுவை' பற்றி எழுதுகின்றார்.
அதிலும், "பேராண்மை என்ப தறுகண்' என்கிறார் வள்ளுவர். பகைவர்க்கு உதவுவதும் வீரம் தானாம். அவ்வாறே, வி-என்று சொன்னதும் பறந்து சென்று வரிசையில் நின்று விருது வாங்குவது வீரம் அல்ல. கொடுத்த விருதுக்கு தான் தகுதி உடையவர்தானா என்று பகுத்தறிந்து பார்த்து அதை மறுத்தலும் தமிழர்தம் வீரச்செருக்கு அல்லவா?
ஜல்லிக்கட்டு விளையாட்டினால் காளைகளின் ஆண்மையும் பெருகுமாம். நூற்றாண்டுக்கு முன்னர் நம் நாட்டில் 130 வகையான பசுக்கள் இருந்தனவாம். இன்றைக்கு வெறும் 37 தான் இருக்கின்றனவாம். சாகித்ய விருதாளர் கலைமாமணி ஆ. மாதவனின் "காளை' என்ற சிறுகதையினை இந்த வகையில் நினைத்துப் பார்க்கலாம்.
கேரளத்தில் ஆண்மை உடைய காளையை வளர்க்க இயலாது. அதனை அறிந்தால் அந்தக் காளைக்கு "காய் அடித்து' மலடு ஆக்கிவிடுவர். இதுதான் அமெரிக்கவாழ் இந்தியக் "காளை'களின் இன்றைய அவல நிலை.
ஜெர்சி முதுகில் இந்திய மாடுகளைப்போல் திமில் கிடையாது. நீண்ட உருளை போன்ற உடல், கழுத்தின் அடியில் தொங்கு சதையும் இல்லை. அமெரிக்காவின் ஜெர்சி கலப்பின மாடு குறுகிய காலத்திற்கு மட்டுமே நிறைய பால் தரும். தொடர்ந்து சில நூறு மாடுகளை உடனடியாக இறக்குமதி செய்ய நேரும். ஆக, அமெரிக்க வியாபாரம் இங்கே அமோகமாக நடக்கும்.
பொதுவாக, பாலில் ஆறு புரதச் சத்துகள் அடங்கி உள்ளன. அவற்றில் முக்கியமாக நான்கு காசீன் புரதங்களும், மோரில் இரண்டு புரதங்களும் அடக்கம். பாஸ்ஃபோ - புரதம் ஆகிய இந்தக் காசீன் புரதம் பசும்பாலில் 80%, தாய்ப்பாலில் 20-45% உள்ளது.
அதிலும் குறிப்பாக, "பீட்டா' காசீன் (இந்த பீட்டா கிரேக்க அகரமுதலியின் இரண்டாம் எழுத்து என்க) பாலில் ஏ1, ஏ2 என்று இரண்டு வகை பால் உண்டு. ஏ2 பால் உடலுக்கு நல்லது. அது 67% புரோலின் என்கிற அமினோ அமிலம் கொண்டது. அதற்குப் பதில் ஹிஸ்டாடின் என்ற அமினோ அமிலம் கொண்ட மனிதனுக்கு தீங்கு தரும் பால்தான் ஏ1 வகை பால்.
வெளிநாட்டு மாட்டுப் பாலில் ஏ1 வகை கூடுதலாக உள்ளது. இது, வயிற்றில் "பீட்டா காúஸாமார்ஃபின்7' (பி.சி.எம்.7) போன்ற பெப்டைடுகளாக உருமாறும். இந்த பி.சி.எம்.7 பிசாசுதான் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். நீரிழிவு நோய், இதயநோய், சிசோஃப்ரெனியா நோய் எனும் மனப்பிரமை (இது உள்ளவர்கள் காதில் இறந்தவர்களின் ஆவி பேசுவது, அவர்கள் கண்முன் பெட்டிகள் நகர்வதுபோல் எல்லாம் பிரமை உண்டாகும்) மற்றும் "ஆட்டிஸம்' என்கிற தன்மனன நோய் (தங்களுக்குள் சுய உலகில் சஞ்சரிக்கும் ஒருவகைப் பித்தம்) போன்ற பல தீமைகள் விளைய வாய்ப்பு உள்ளதாம். ஆனாலும் இத்துறையில் முழுமையான ஆய்வுகள் தேவை என்கின்றனர் உயிரி மருத்துவர்கள்.
இன்கிரீட் நியுகிர்க் என்ற பெண், தனது 31-ஆம் வயதில் ஸ்டீவ் நியுகிர்க் என்ற முதல் கணவனைக் கை விட்டார். அதே ஆண்டு தனக்கு இனி குழந்தைகளே வேண்டாம் என்று கருத்தடையும் செய்து கொண்டார்.
அன்று முதல் விலங்குகளைக் காதலித்தவர், 1980-ஆம் ஆண்டுவாக்கில் அலெக்ஸ் பாச்சியோ என்பவரைச் சந்தித்தார். அவர் "அலெக்ஸ் என்கிற அப்துல்' ஒரு தேவ
தூதன் என்கிறார். அலெக்ஸ், நண்டு தின்னிக் குரங்குகள் வளர்ப்பதில் அலாதி அக்கறை கொண்டவர்.
இருவரும் இணைந்து "பீட்டா' என்றஅமைப்புக்கு வித்திட்டனர். "பீப்பிள்
ஃபார் எத்திக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ்' - பீட்டா. அதாவது விலங்குகளை அறவழியில் கையாளும் மக்கள் இயக்கம்.
2016-ஆம் ஆண்டு பீட்டா அமைப்புத் தலைவருக்குச் சம்பளம் 40,320 டாலர். இந்த அமைப்பின் அசையாச் சொத்துகள் ஏறத்தாழ 100 கோடி ரூபாய். ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்.
"பீட்டா' என்ற அமைப்பு, 1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் நார்ஃபோர்க் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. "விலங்குகள் நாம் உண்பதற்கும், உடுத்துவதற்கும், பரிசோதனை செய்வதற்கும், கேளிக்கைக்கும் மட்டும் அல்ல. வேறு எந்த வகையில் துன்புறுத்தக் கூடாது' என்பது அதன் முத்திரை மொழி.
நல்லவேளை ரஷிய நாட்டு "லைக்கா' நாயும், அமெரிக்க "ஹாம்' மனிதக் குரங்கும் விண்வெளி சென்ற முதல் பிராணிகள் என்ற பெயரை அதற்கு முந்தியே தக்க வைத்துக்கொண்டன.
இன்கிரீட் நியுகிர்க் பெரிய விளம்பரப் பிரியராம். திடீர் கலகக் குரல் கொடுத்து மக்கள் கவனத்தைத் தன்பால் திருப்புவதில் பெயர் பெற்றவர். மாரிலாந்து மாகாணத்தில் ஒரு வினோதப் பரிசோதனை நடந்து வந்தது.
கண் மை, முகப்பூச்சு போன்ற அழகு சாதனப் பொருள்களை நம் பெண்மணிகள் பூசிக் கொண்டால் அரிப்போ, தடிப்போ வருமா என்று அறிவதற்கு குரங்குகள் மீது அந்த பொருள்களை முதலில் பயன்படுத்தி ஆராய்ந்தனர். அதனை எதிர்த்தார் இன்கிரீட்.
இவர் இங்கிலாந்தில் பிறந்து, 7-ஆம் வயதில் புதுதில்லியில் குடியேறியவர். தகப்பனார் அரசாங்கத்திலும், தாயார் அன்னை தெரசாவின் குஷ்டரோகிகள் குடியிருப்பிலும் பணியாற்றி வந்தனர். இமாலயத்தில் கிறித்தவப் பெண் துறவிகள் மடத்தில் தங்கி இருந்த ஒரே ஒரு வெள்ளைக்காரப் பெண் அவர் மட்டும் தானாம். சக துறவிகளால் கொடுமைகளுக்கு ஆளானாராம். அதற்காகவே இந்தியாவைப் பழிவாங்கு
கிறாரோ என்னவோ?
ஏதாயினும், வெர்ஜீனியா வேளாண்மை மற்றும் நுகர்வோர் சேவைகள் துறை
யினர், "பீட்டா' அமைப்பு குறித்து வழங்கிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவை.
1998 - 2015 காலகட்டத்தில் பூனை, நாய், கோழி, ஆடு, மாடு போன்ற 40,438 செல்லப் பிராணிகளை மிருகவதைத் தடுப்புப் பிரிவின்கீழ் காப்பாற்றியதாம் பீட்டா. அவற்றில் வளர்க்கப்பட்டவை 3,323. திரும்ப வழங்கப்பட்டவை 1,713. பீட்டாவினால் கொல்லப்பட்டவை 34,970.
அதாவது, தாம் வளர்த்த விலங்குகளைப்போல 10 மடங்கு விலங்குகளைக் கொன்ற அமைப்பு இது. தமிழரின் ஜல்லிக்கட்டு கொடுமையாம். பாருங்கள், இப்படி ஒரு கொலைகார அமைப்பின் சார்பில் வாதாட, டாலர் விசுவாசமான ஊழியர்கள் இந்தியாவிலும் இருப்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
அமெரிக்காவிலேயே சிகரெட்டினால் இறப்போர் 4,40,000 பேர். சாலை விபத்தில் மரிப்போர் 42,366 பேர். துப்பாக்கிக்கு இரையானோர் 29,338 பேர். காளையினால் இறந்தோர் 3 பேர். இவற்றில் எதற்கு விதிக்கவேண்டும் தடை?
அமெரிக்காவில் மட்டும் 1,600 கோடி செல்லப் பிராணிகள் கொல்லப்படுகின்றன. ஆக, அமெரிக்காவில் வேகாத பீட்டா பருப்பு, கடல் கடந்து இந்தியாவில் வந்து அலங்காநல்லூரில் சுடச்சுட வறுத்து எடுக்கிறது.
ஒருவேளை அந்த அமைப்பின் இந்திய விசுவாசிகளுக்கு அடுத்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024