Monday, February 6, 2017

எண்கணித அடிப்படையில் புதிய அமைச்சர்கள்? - சசிகலா வியூகம்!


தமிழ்நாட்டில் ஒருவழியாக, சசிகலா தலைமையில் புதிய அமைச்சரவை வரும் 9-ம் தேதி பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வசதியாக, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று மாலை சென்னை திரும்புகிறார். சென்னை ஆளுநர் மாளிகையில், இன்று இரவோ அல்லது நாளை காலையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே. சசிகலா ஆகியோர் ஆளுநரைச் சந்திக்க உள்ளனர். அப்போது, ஆளுநரிடம் புதிய அரசு அமைக்க தனக்கு அழைப்பு விடுமாறு சசிகலா கேட்டுக் கொள்வார். ஆளுநர் அழைப்பு விடுத்ததும், பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வழங்கப்படும் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க வெற்றிபெற்று மீண்டும் அவரது தலைமையில் ஆட்சி அமைந்தபோது, ஜெயலலிதா முதல்வராகவும், 32 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆனால், அதன் பின்னர் எஸ்.பி சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக மாஃபா.பாண்டியராஜன் அமைச்சரானார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததும், டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதே அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது என்னென்ன துறைகளை எந்தெந்த அமைச்சர்கள் வகித்து வந்தார்களோ, அவர்கள் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். ஜெயலலிதா வகித்த துறைகளுடன் நிதித்துறையையும் ஓ.பன்னீர் செல்வம் வகித்தார்.

தற்போது சசிகலா தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையிலும் தற்போதுள்ள அனைத்து அமைச்சர்களும் இடம்பெறுவார்கள் என்று கார்டனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

எண்கணித ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட சசி!

சசிகலாவைப் பொறுத்தவரை ஜோதிடம் மற்றும் எண் கணித ஆரூடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு கட்டட பூமி பூஜை என்றாலே கார்டனின் ஆஸ்தான ஜோதிடர்களை வரவழைத்து, அவர்கள் சொல்லும் நாள் மற்றம் நேரத்திலேயே ஆரம்பிப்பாராம். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் இதே நிலைதான். தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், இரண்டு மாதம் கழித்து, முதல்வராக பதவியேற்க இருப்பதும் ஜோதிடர்களின் கணிப்பின் அடிப்படையிலேயே என்கின்றனர் கார்டன் தரப்பினர். மேலும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவர், முந்தைய ஆட்சியின் போது வகித்த நிதித்துறையே மீண்டும் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது எஸ்.பி. வேலுமணி வகித்துவரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையனுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதேபோல் தஞ்சாவூரில் இருந்து அண்மையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரங்கசாமிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தவிர, கரூர் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. அவர், ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர். அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்ப்பதால் தேவையற்ற சர்ச்சை ஏற்படும் என்று சசிகலா கருதுவதாகவும் தெரிகிறது. என்றாலும் எண் கணித அடிப்படையில் செங்கோட்டையன் தவிர மேலும் 2 அல்லது 3 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

இதன்மூலம் சசிகலா தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 36 பேர் இடம்பெறுவார்கள் என்று கார்டனுக்கு நெருக்கமான அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை 9 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற பதவியேற்பு நடைமுறையைப் பின்பற்றி, சசிகலா முதல்வராக முதலில் தனியாகப் பதவியேற்ற பின்னர், அமைச்சர்கள் அனைவரும் இரண்டு அல்லது மூன்று குழுக்களாகச் சேர்ந்து பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அநேகமாக ஆளுநர் மாளிகையில் வரும் 9-ம் தேதி பதவியேற்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-சி. வெங்கட சேது

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024