'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க.
#VikatanExclusive
கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' மத்திய அரசிடம் நெருங்குவதற்கு கார்டன் தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி, இந்த வழக்கில் இருந்து சசிகலாவையும் தினகரனையும் விடுவித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து, மத்திய அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ' வெளிநாட்டில் இருந்து சுசிலா என்பவரது பெயருக்கு வந்த 19 லட்சத்து 91 ஆயிரத்து 610 அமெரிக்க டாலரை, சித்ரா என்பவருக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தில் 3 கோடி 52 லட்சத்தை சசிகலாவுக்கு கடனாக கொடுத்துள்ளார். 25 காசோலைகளில் 2 காசோலைகளை வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கொடுத்துள்ளார். மீதமுள்ள காசோலைகள் எந்த பெயரும் குறிப்பிடாமல் கொடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு வந்துள்ள பெரும் தொகை, முறையான அனுமதியின்றி வந்துள்ளது. எனவே, இவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், தினகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதியரசர் சொக்கலிங்கம், பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிறுவனங்களின் அன்றாட நிர்வாகத்தில் சசிகலா உள்ளிட்டோர் பங்கெடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் சசிகலா, தினகரன் ஆகியோர் அந்நிய செலாவணி வழக்கை எதிர்கொள்ள வேண்டும். சசிகலா தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சசிகலா, தினகரனை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
" நடராசன் மீதான லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கு வேகம் பிடித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இந்த சமயத்தில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடினார் சசிகலா. தினகரன், சுதாகரன் மீதான வழக்குகளும் நெருக்க ஆரம்பித்துவிட்டன. மன்னார்குடி உறவுகளை குறிவைத்து, மத்திய அரசு வலுவாக இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலாவின் கணவர் நடராசன். ' மோடி நல்லவர்' என பகிரங்கமாக பேசினாலும், மத்திய அரசின் பார்வை கார்டன் பக்கம் திரும்பவில்லை" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், " தமிழகத்தில் தாங்கள் நினைத்தப்படி எதுவும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் மன்னார்குடி உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் அலுவலகம் கொடுக்கும் முக்கியத்துவதை அவர்கள் ரசிக்கவில்லை. ' காங்கிரஸ் பக்கம் நாங்கள் செல்லவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம். நீங்கள் சொல்வதைக் கேட்கிறோம்' என டெல்லி லாபி மூலம் பா.ஜ.க தலைமைக்கு வேண்டியவர்களிடம் பேசியுள்ளனர் கார்டன் தரப்பினர். இதற்காக அனுப்பப்பட்ட தூதுவரிடம் பேசிய பா.ஜ.க அகில இந்திய நிர்வாகி ஒருவர், ' குடியரசுத் தலைவர் தேர்தலை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் நிறுத்தும் வேட்பாளரை நீங்கள் எதிர்த்தால், தி.மு.க எங்களுக்கு ஆதரவு கொடுக்கும். உங்களிடம் மொத்தமாக 5 சதவீத வாக்குகள் இருக்கின்றன. தி.மு.கவிடம் ஒன்றரை சதவீத வாக்குகள் உள்ளன. நவீன் பட்நாயக், நிதிஷ் குமார், சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலத்தோடு பா.ஜ.க இருக்கிறது.
பொதுக் கருத்தின் அடிப்படையில்தான் ஜனாதிபதியை தேர்வு செய்வோம். தற்போது எதிரணிகள் ஆளுக்கொன்றாக சிதறிக் கிடக்கிறது. எந்த வகையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள். எங்களுக்குத் தேவை, 2019-ம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதுதான். அதற்குத் தேவை, 1998 மற்றும் 99-ம் ஆண்டில் வாஜ்பாய்க்குக் கிடைத்த வெற்றிக் கூட்டணி, பிரதமர் மோடிக்கும் அமைய வேண்டும். இதையொட்டித்தான் அகில இந்திய தலைமை மாநிலங்களில் அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் எங்களுடைய முதல் தேர்வாக தி.மு.க இருக்கிறது. அதனால்தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கருணாநிதி வரவேற்றதையும் பாராட்டினார் மோடி. அவரது உடல்நிலை குறித்துப் பிரதமர் அக்கறையோடு விசாரிக்கிறார். ஸ்டாலினிடம் நல்ல அணுகுமுறையில் இருக்குமாறு ஆளுநருக்குத் தெரிவித்திருக்கிறோம். அதனால்தான், ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் பொங்கல் வாழ்த்து சொன்னார் ஆளுநர். தி.மு.க ஒரு பலமான கட்சியாக இருக்கிறது.
'சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸால்தான் தி.மு.க தோற்றது' என பா.ஜ.க நிர்வாகிகள் சொன்னதை தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டார்கள். சரக்கு சேவை வரி மசோதாவை அ.தி.மு.க எதிர்த்தபோதும், தி.மு.க எங்களை ஆதரித்தது. 2014 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் அ.தி.மு.க எங்களை ஏமாற்றிவிட்டது. இப்போது நீங்களே பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கிறீர்கள். தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.கவில் எந்த அணிக்கு, நாங்கள் ஆதரவாக செயல்படுவது? உங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். 'நாங்கள்தான் பலத்தோடு இருக்கிறோம்' என்பதைக் காட்டுங்கள். ' உள்ளாட்சி தேர்தலை நீங்கள் புறக்கணிக்கக் காரணமே, தனி அணியாக தீபா நிற்பதால்தான்' என எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது. நீங்கள் இன்னமும் காங்கிரஸைக் கழட்டிவிடவில்லை என்பதைத்தான் நாங்கள் நம்புகிறோம்' என எச்சரிக்கும்விதமாகவே பேசியிருக்கிறார். பிரதமரை நெருங்க வேண்டும் என்ற கார்டனின் முயற்சிகள் கைகூடவில்லை" என விவரித்து முடித்தார் அவர்.
லெக்சஸ் வழக்கு, பெரா வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு என கடந்த காலங்களில் ஆடிய ஆட்டத்திற்கான வினைகளை ஒவ்வொன்றாக அனுபவிக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பதற்றத்தோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா.
-ஆ.விஜயானந்த்
No comments:
Post a Comment