Monday, February 6, 2017

திங்கள் கிழமையை இப்படியும் எதிர்கொள்ளலாம் பெண்களே!


ஞாயிற்றுக்கிழமை' என்றவுடனே மனம் சந்தோஷப்படுவதுபோலவே திங்கள் கிழமை என்று சொன்னவுடனே சட்டென்று ஒரு சுணக்கம் வந்துவிடும். நேற்று ரிலாக்ஸாக இருந்த உடலை, மனதை மீண்டும் சுறுசுறுப்புக்குக் கொண்டு வருவது எளிதல்ல. பெண்களும் இதில் விதிவிலக்கு இல்லையே. பெண்களுக்கு ஞாயிறன்றும் வீட்டு வேலைகள் அதிகளவிலிருந்தாலும் நம்முடைய கணவருக்கு, நம்முடைய பிள்ளைகளுக்கு என அந்த வேலைகளையும் செய்யும்போது அந்த வேலை சுமையாக தெரிந்திருக்காது. அதனால் பெண்களுக்கும் திங்கள் சோர்வு படர்ந்த பொழுதாகத்தான் விடியும்.

சரி, அதற்காக காலண்டரில் திங்கள் கிழமையே இல்லை என்று அறிவித்துவிட முடியாது அல்லவா. அதனால் அதை எதிர்கொள்வதில் வித்தியாசம் காட்டி அசத்தலாம் பெண்களே!

வாரத்தின் ஒரு நாள்தான்: இன்று திங்கள் கிழமை என்பதை கொஞ்சம் மாற்றி, வாரத்தின் முதல் நாள், எனவே உற்சாகத்தோடு வரவேற்போம் என எண்ணுங்கள். மேலும், திங்கள் கிழமையும் வாரத்தின் ஒரு நாள்தான், செவ்வாய்கிழமை எப்படி புறப்படப் போகிறமோ அதேபோல இன்றைக்கும் என நினையுங்கள். இது நம்மை நாமே பழக்கிக்கொள்ளும் ஒரு வகை மனப் பயிற்சிதான். அதனால், பழகப்பழக இது நம் வசமாகும்.

சோம்பலை அனுமதியுங்கள்: திங்கள் கிழமை என்றதுமே சோம்பலை விரட்ட வேண்டும் என நினைத்து, ரொம்ப சீக்கிரமே எழுந்திருத்தல் தொடங்கி எல்லாவற்றிலும் பரப்பரப்பு காட்டுவீர்கள். அது தேவையற்ற பதற்றத்தைத்தான் தரும். எனவே அதைத் தவிர்த்து, இன்று சோம்பலாகத்தான் இருக்கும் என ஒத்துக்கொள்ளுங்கள். அதைத் தவிர்க்காமல் ஆனாலும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியும் எனும் நம்பிக்கையும் கொள்ளுங்கள்.

புதிய விளையாட்டு: பெண்களுக்கு திங்கள் கிழமையின் பெரும் வேலையே, குழந்தைகளைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதுதான். ஏனென்றால் நேற்று விடுமுறை நாள் என்பதால் இரவில் அதிக நேரம் டிவி பார்த்துகொண்டு, காலையில் எழுந்திருக்க நேரம் கடத்துவார்கள். அதனால், புதிய விளையாட்டுகளை இன்றிலிருந்து தொடங்குங்கள். முதல் நாளே, அந்த விளையாட்டைப் பற்றி சுவாரஸ்யமாக சொல்லி வைத்துவிடுங்கள். காலையில், உறங்கும் பிள்ளைகளின் காதில் மெதுவாக அந்த விளையாட்டின் பெயரைச் சொன்னதும் துள்ளி எழுவார்கள். அப்படிச் செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று நீங்கள் புதிய விளையாட்டுகளைத் தேடித் தெரிந்துகொள்வீர்கள். இரண்டு, நீங்களும் குழந்தைகளுடன் விளையாடி புத்துணர்ச்சியாவீர்கள்.

நேரம் மிச்சமாக்கும் சமையல்: வழக்கமாக பெண்களின் திட்டமிடலைக் காலி செய்வது சமையல்தான். பருப்பு வேகவில்லை. குக்கர் விசில் அடிக்க லேட்டாவது... என ஒவ்வொரு நாளையும் டென்சனாக்குவது சமையல்தான். அதனால், திங்கள் கிழமையில் விரைவாக செய்யும் உணவு வகைகளை மட்டுமே செய்யுங்கள். காலை ஒரு வகையும் மதியத்திற்கு ஒன்றும் எனச் செய்யாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரே வகை உணவைச் சமைக்கலாம். வீட்டினர் கேட்டால், 'Monday Special' என்று சொல்லுங்கள். இரண்டு வாரங்கள் கழித்து, அவர்கள் இதற்கு பழகி விடுவார்கள். அல்லது சமையல் செய்ய உதவிகள் செய்ய முன் வருவார்கள். இரண்டில் எதுவானாலும் நல்லதுதான்.

அலுவலகம் செல்வோர்: அலுவலகம் செல்லும் பெண்களுக்கு, வீட்டினரைத் தயார் செய்வது, தான் புறப்படுவது என இரட்டைச் சுமை. அதனால், அலுவலகத்தில் குவிந்திருக்கும் வேலைகளை வீட்டிலேயே நினைக்காதீர்கள். இதுபோலதானே சனிக்கிழமையும் இருந்தது. சமாளித்துக்கொள்ளலாம் என்று தயாராகுங்கள். அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு சென்றாலே முக்கால் பகுதி டென்சன் குறைந்து விடும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை மட்டும் திட்டமிடுங்கள்.

தித்திக்கும் இனிப்பாகட்டும் திங்கள் கிழமை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024