Monday, February 6, 2017

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வரமா... சாபமா?


முதல்வர் பதவி, ஒ.பன்னீர்செல்வத்துக்கு வரமா? சாபமா? என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகும் சூழல் ஏற்படும் போதெல்லாம் முன்னிறுத்தப்பட்டது இவர் தான். 'பதவியை திரும்பக் கொடு' என்று கேட்டாலும் சிரித்துக் கொண்டே கொடுத்துவிட்டுச் செல்வதும் இவர் தான். 'பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டுப் போன்றது' என்பார் அறிஞர் அண்ணா. அவருடைய இந்த வரி நாவலர் நெடுஞ்செழியனுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்திற்குத்தான் சரியாகப் பொருந்தி போகிறதோ என்று தோன்றுகிறது. தோளில் கிடக்கிற துண்டைத் தொடர்ந்து நழுவ விடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டவர் ஒ.பன்னீர்செல்வம். 2001 - ல் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடி நாயக்கனுர் தொகுதிகளில் வெற்றிப் பெற்று சட்டமன்றத்திற்கு வந்தவர். பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, நிதித் துறை ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

டான்சி வழக்கு தந்த முதல்வர் பதவி

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர் ஒ. பன்னீர்செல்வம் என்று சொல்வார்கள். 2001 - ல் அமைச்சராக பதவி ஏற்றபோது ஒ.பன்னீர்செல்வம் மானியக் கோரிக்கையைச் சரியாக படிக்காத காரணத்தால் அவையில் இருந்தவர்கள் நகைத்தாகவும் அரசியல் ஆர்வலர்கள் சொல்வார்கள். அதே ஆண்டு டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியை, ஜெயலலிதா தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது முதலமைச்சராக பதவி ஏற்றார் ஒ .பன்னீர்செல்வம். 2002 வரை முதல்வராக பதவி வகித்து வந்த ஒ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் வார்த்தையைத் தட்டாமல் கடைமை ஆற்றினார். பின்னர், டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டதும் மீண்டும் முதல்வர் பதவி வேண்டும் என்றார். அப்படியே சிரித்துக் கொண்டே பொறுப்பை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு தந்த முதல்வர் பதவி

இதனைத் தொடர்ந்து 1991 - 96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 2014 - ல் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்தது. அதன் காரணமாக மீண்டும் பதவியில் இருந்து இறங்கினார். சிறையில் இருந்த ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியை ஏற்குமாறு கூறினார். ஜெயலலிதாவின் உத்தரவின்படியே ஒ.பன்னீர்செல்வமும் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் 2015 - ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்தார். குமாராசாமியின் இந்தத் தீர்ப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் வெளியில் வந்த ஜெயலலிதா மீண்டும் முதல்வர் 'பதவியைக் கொடு' என்றதும் சிரித்துக் கொண்டே பதவியைக் கொடுத்தார். இந்த நிலையில் (2016 மே மாதம் ) கடந்த ஆண்டு தமிழநாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

கண்ணீரில் வந்த முதல்வர் பதவி

அ.தி.மு.க இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22 - ம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கைகள் சொல்லின. 70 நாட்கள் சிகிச்சைப்பெற்று வந்தவருக்கு தீடீரென ஏற்பட்ட மாரடைப்பால் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து விட்டார் என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரண அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா அறிமுகபடுத்தியவர் என்பதால் பன்னீர்செல்வத்தை முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். முதலமைச்சராக ஒ. பன்னீர் செல்வம் இருந்தாலும் அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக சசிகலா நடராஜன்தான் செயல்பட்டு வருகிறார் சொல்லபட்டது.

அதனை உறுதிபடுத்தும் விதமாக கடந்த டிசம்பர் 31 - ம் தேதி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் பதவி ஏற்று காண்பித்தார். இந்த நிலையில் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் என்று தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் ஒ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது சிரிப்பையே பதிலாக தந்தார். அவருடைய இந்தச் சிரிப்புக்கு பின்னால் மறைந்த உண்மை இதுதான் என்று தற்போது உறுதியாகிட்டது. அதேபோன்று முதல்வர் பதவிக்கான காய்களை சசிகலா நகர்த்தியது உண்மையாகி விட்டது.

ராயப்பேட்டையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் (5.2.2017 ) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அ.தி.மு.க.,வின் எம். எல். ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் முதல்வராக சசிகலா - நடராஜன் பதவி ஏற்பது உறுதியாகி விட்டது. பதவியை இப்போதும் சிரித்துக் கொண்டே விட்டுகொடுத்துள்ளார் ஒ.பன்னீர்செல்வம். ஆனால், இந்தச் சிரிப்புக்கு பின்னால் உள்ள அர்த்தம்தான் என்ன என்பது புரியவில்லை. ஜெயலலிதாவுக்காக விட்டுக்கொடுத்த சிரிப்புக்கும் சசிகலாவுக்காக விட்டுக்கொடுக்கும் சிரிப்பும் நிச்சயம் வித்தியாசம் இருக்கக்கூடும்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்


- கே.புவனேஸ்வரி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024