Monday, February 6, 2017

முதல்வர் பதவிக்காக ஏன் அவசரப்பட்டார் சசிகலா?!' - ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா பின்னணி  #VikatanExclusive


தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், உறவுகளின் அழுத்தம் தாங்க முடியாமல் அப்போலோ மருத்துவமனையின் எல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ம.நடராசன். மன்னார்குடி உறவுகளின் ஆட்டமும் தொடங்கிவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 60 நாட்கள் நிறைவடைவதற்குள், தமிழக முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்துவிட்டார் சசிகலா. 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். எண்ணூர் அருகே கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யால் ஏற்பட்டுள்ள சீரழிவுகளை ஆய்வு செய்வதற்காக நேற்று காலை சென்றிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அந்தநேரத்தில், 'கார்டனுக்கு வாருங்கள்' என அழைப்பு வந்தது. முன்பே தயாரிக்கப்பட்டு வைத்திருந்த ராஜினாமா கடிதத்தில் அவரைக் கையெழுத்துப் போட வைத்துள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கையெழுத்திட்டார் ஓ.பி.எஸ். அவரிடம் பேசிய சசிகலா, 'உங்கள் மரியாதை காக்கப்படும். எந்தவித தயக்கமும் உங்களுக்குத் தேவையில்லை' எனக் கூறியிருக்கிறார். கார்டன் முடிவை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, நான்கு கையெழுத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. 'அப்போலோவில் ஜெயலலிதா இறந்த அன்று, கையெழுத்து வாங்கினார்கள். இப்போதும் நான்கு இடங்களில் கையெழுத்து போடச் சொன்னார்கள். போட்டோம்' என உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர் சில எம்.எல்.ஏக்கள். கூட்டத்தில், 'என்னை முதல்வராக பதவியேற்குமாறு தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். சகோதரர் பன்னீர்செல்வமும் வலியுறுத்தினார்' என விளக்கம் அளித்தார் சசிகலா. கடந்த 27-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், பன்னீர்செல்வத்தை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்தார் சசிகலா. நேற்று மேடையில் அமர்ந்திருந்தார் ஓ.பி.எஸ். அவர் வழக்கம் போல அமைதியாக இருக்க, எடப்பாடி பழனிச்சாமிதான் பூரிப்பில் இருந்தார்" என விளக்கிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,

"நீலாங்கரையில் உள்ள சசிகலா உறவினர் வீட்டில்தான் அனைத்து ஆலோசனைகளும் நடைபெற்றன. 'பிப்ரவரி 8-ம் தேதி மாலையில் இருந்து தைப்பூச தினமான 9-ம் தேதிக்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும். இந்தமுறை தவறவிட்டால், உங்கள் ஜாதகப்படி, அடுத்த 6 மாதங்களுக்கு நல்ல தேதிகள் இல்லை' என கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். 'சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறதே' என சிலர் எடுத்துச் சொல்லவும், சசிகலாவிடம் பேசிய மன்னார்குடி உறவுகள், 'ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைந்ததால், முதல்வர் பதவி குறித்து சிந்திக்க முடியவில்லை. நாளுக்கு நாள் பன்னீர்செல்வம் செல்வாக்கு கூடிக் கொண்டே போகிறது. குடியரசு தினவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார். 'சட்டசபையில் ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர மாட்டேன்' என்றவர், தற்போது அவருடைய நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். பா.ஜ.க தலைவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் இப்படிச் செயல்படுகிறார். இது தொடர்ந்தால், கட்சியின் கட்டுப்பாடும் நமது கையைவிட்டுப் போய்விடும்.

உளவுத்துறையை அறிக்கையை கவனமாகப் பாருங்கள். 'கட்சியிலும் ஆட்சியிலும் நமக்கு இடைவெளி அதிகமாக இருப்பதாக' சுட்டிக் காட்டியுள்ளது. நடப்பது அ.தி.மு.க ஆட்சியா... பா.ஜ.க ஆட்சியா என்ற சந்தேகத்தை அரசியல் கட்சித் தலைவர்களே எழுப்புகின்றனர். மத்திய அரசை எதிர்த்துப் பேசினாலும், 'கட்சியைப் பற்றிப் பேச இவர்கள் யார்?' என சிலர் கிளம்புகின்றனர். இனியும் நாம் காத்திருக்க வேண்டாம்' என விளக்கிய பிறகே, பதவி ஏற்பு வைபவத்திற்கு சம்மதித்தார் சசிகலா. சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட தகவல், ஊட்டியில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், டெல்லியில் இருந்தும் அவருக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. ஜனநாயகரீதியாக எம்.எல்.ஏக்கள் ஒன்று சேர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்துள்ளனர். இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்" என்றார் விரிவாக.



"அமைச்சரவை மாற்றத்தை கட்சியின் சீனியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். யாருக்கு எந்தப் பதவி என்பது குறித்த விவாதம்தான் தலைதூக்கியுள்ளது. மீண்டும் அவை முன்னவராகவும் நிதியமைச்சராகவும் பன்னீர்செல்வம் தொடர்வதற்கு வாய்ப்பு அதிகம். முதலமைச்சரிடம் உள்ள துறைகளில், காவல்துறையை தவிர்த்து வேறு சில துறைகளை ஓ.பி.எஸ் பக்கம் ஒதுக்குவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் சசிகலா. நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த பிறகு, 'நாங்கள் சொல்லும் நபருக்குத்தான், அமைச்சர் பதவி' என மன்னார்குடி உறவுகள் கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளனர். கூடவே, திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையில் நிலவிவந்த பனிப்போர் உச்சகட்டமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் இருந்து தப்பிப்பதற்காக, ரத்தக் கொதிப்பு எனக் கூறிவிட்டு அப்போலோவில் வி.ஐ.பிக்கள் சிகிச்சை எடுக்கும் எல் வார்டில் அனுமதிக்கப்பட்டார் நடராசன். அவரது இந்தச் செய்கையால், உறவுகளுக்கு கூடுதல் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடராசன் ஆதரவாளர்களோ, 'நாம் எதிர்த்து அரசியல் செய்தால், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க முடியும். பயந்து பின்வாங்கிக் கொண்டிருந்தால் எதையும் சாதிக்க முடியாது. பா.ஜ.கவை எதிர்த்தால்தான் அ.தி.மு.க வளரும்' எனப் பேசி வருகின்றனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் கிளைவிடுவதால், அப்போலோ பிரதாப் ரெட்டியையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டையும் பிரஸ் மீட் வைத்து விளக்குமாறு கூறியுள்ளார் சசிகலா. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து ஜெயலலிதா சிகிச்சை குறித்து விளக்குகிறார் பிரதாப் ரெட்டி. அதிகாரத்தில் அமரும்போது, 'மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும்' என விரும்புகிறார். ஆனால், ஆட்சியை சமாளிப்பதைவிடவும் உறவுகளை சமாளிப்பதுதான் சசிகலா முன்நிற்கும் பெரும் சவாலாக இருக்கிறது" என்கிறார் கார்டன் உதவியாளர் ஒருவர்.

புதிய அமைச்சரவைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது போயஸ் கார்டன். சுபயோக சுப தினத்தில் கோட்டையை நோக்கிப் பயணமாக இருக்கிறார் சசிகலா. அதற்குள், 'சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு' என அதிர வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 'பொதுச் செயலாளருக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும், இன்னொரு முறை தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை அமர வைக்க மாட்டார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024