ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா...?' பி.எச். பாண்டியன் VS பண்ருட்டி ராமச்சந்திரன்!
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போது முதல்வராக பதவியேற்க தமிழக கவர்னரின் வருகைக்காக காத்திருக்கிறார் சசிகலா. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானதே செல்லாது, அப்புறம் எப்படி அவர் முதல்வராக முடியும் என்று கேள்வி எழுப்பி, சட்டப் போராட்டத்திற்கு தயராகி வருகிறார் அ.தி.மு,க முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகருமான பி.ஹெச்.பாண்டியன். அவருடைய மகனும், முன்னாள் எம்.பி-யுமான மனோஜ் பாண்டியனும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நாள்தோறும் அப்போலோவிற்கு விசிட் செய்து வந்தவர் பி.ஹெச். பாண்டியன். ஜெயலலிதா மரணம் அடைந்து, இறுதிச்சடங்கு நடைபெற்றபோது பி.ஹெச். பாண்டியன் அங்கு இருந்தார். ஆனால், அதன் பிறகு தொடர்ந்து அமைதிகாத்து வந்தார். குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யபட்டதும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், முக்கியப் பிரமுகர்களும் சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போதிலும் இவர் அமைதியாகவே இருந்து வந்தார். சசிகலாவிற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போர்க்கொடி உயர்த்தி வருவதன் பின்னணியில் பி.ஹெச்.பாண்டியன் இருந்து வருவதாகக் கூறப்பட்டது.
ஆனால், கடந்த இரண்டு மாதமாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் ஒதுங்கி இருந்தவர் திடீரென இன்றுகாலை சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் பி.ஹெச்.பாண்டியன். அவருடன் மகன் மனோஜ் பாண்டியனும் இருந்தார். முதலில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஹெச். பாண்டியன், “அ.தி.மு.க என்ற இயக்கம் ஆரம்பித்து, அதன் சட்ட திட்டங்களை வகுக்க அமைக்கபட்ட குழுவில் நானும் இருந்தேன். அதில் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து நாங்கள் ஆலோசனை செய்து ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்றும், இந்தச் சட்டத்தை மாற்றவோ, நீக்கவோ முடியாத வகையில்தான் சட்ட விதிகளை இயற்றினோம்.
ஆனால், இப்போது சசிகலா அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வாகியிருப்பது தவறு. சட்டம் தெரியாமல் அவர்கள் உள்ளார்கள். அப்போலோவில் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, சசிகலா ஒருசொட்டு கண்ணீர்கூட விடவில்லை. ஜேம்ஸ்பாண்ட் கோட்டை போட்டுக்கொண்டு அங்கும், இங்கும் நடந்து கொண்டுதான் இருந்தார். ஜெயலலிதா வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார்.
மனோஜ் பாண்டியன் பேசும்போது, "2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போயஸ்கார்டனில் ஜெயலலிதா என்னிடம் அவரைக் கொல்ல ஒரு கும்பல் பெங்களூருவில் சதி செய்கிறது. அவர்களை நான் கட்சியை விட்டே நீக்கப் போகிறேன்" என்றார். அதன் பிறகுதான் சசிகலா உட்பட அவருடைய குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதன் பிறகு சில மாதங்களில் மீண்டும் சசிகலா கார்டனுக்குள் வந்தார். அதன் பிறகு என்னிடமும், மறைந்த பத்திரிகையாளர் சோ-விடமும் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது 'எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு பாய்சன் வைத்துக் கொன்று விடுவார்களோ என்ற பயம் உள்ளது' என்று தெரிவித்தார்” என்றார் அதிரடியாக.
பி.ஹெச். பாண்டியனின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை கூட்டி எதிர்வினை செய்து விட்டார்கள். அ.தி.மு.க தலைமைக்கழகத்திற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டார்கள், அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்று பி.ஹெச்.பாண்டியனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், "பொதுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவைத் தேர்வு செய்துள்ளார்கள். இனி, அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் அவர் தேர்வு செய்யப்படுவார். இப்போது தேர்வு செய்யப்பட்டிருப்பது இடைக்கால ஏற்பாடுதான். இப்படி செய்யக்கூடாது என்று கட்சியின் சட்ட திட்ட விதிகளில் சொல்லப்படவில்லை. பொதுச் செயலாளர் பதவிக்கு முறையான தேர்தல் நடக்கும்வரை சசிகலா நியமனம் செல்லும். எம்.ஜி.ஆருடன் இருந்தவன் நான். கட்சியின் சட்ட திட்ட விதிகள் பற்றி பி. ஹெச். பாண்டியனை விட எனக்கு நன்றாகத் தெரியும். துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு அபாண்டமாக பழி சுமத்துகிறார். கட்சி, ஆட்சி நிர்வாகம் ஆகிய இரண்டும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அதுதான் நல்லது. யாரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது கட்சியின் நிர்வாகிகளாகிய எங்கள் உரிமை. எங்களுக்குள் யாரை மாற்றிக் கொள்கிறோம் என்பது எங்கள் உரிமை. அதன் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேட மத்திய அரசு, முயற்சி செய்யவில்லை. பி.ஜே.பி மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எந்தக் குழப்பத்தையும் மத்திய அரசு ஏற்படுத்தவில்லை. சசிகலாவுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக நாங்கள் கருதவில்லை. அ.தி.மு.க ஒற்றுமையுடன் இருக்கிறது" என்றார்.
செங்கோட்டையன் கூறுகையில், “எம்.ஜி.ஆர் இறந்தபோதே கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் பி.ஹெச்.பாண்டியன். அம்மா மீது வழக்குத் தொடர இவர்தான் காரணமாக இருந்தார். கட்சியினால் இவரது குடும்பம் அனுபவித்தது ஏராளம். ஆனால், கட்சிக்காக இவர் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போட்டதில்லை. துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு கைக்கூலி வேலையை பார்க்கிறார். 'என் அம்மாவின் மறைவுக்குப் பின், எனக்கு அம்மாவாக இருப்பவர் சசிகலாதான்' என்று புரட்சித்தலைவி அம்மாவே சொல்லியிருக்கிறார். 'விஷம் கொடுத்தார்' என்று புழுகுகிறார்கள். சின்னம்மா குடும்பத்தினர் அதிகார மையமாக இருக்கிறார்கள் என்று குறைசொல்லி வரும் கூட்டத்திற்கு நான் பதில் சொல்லமுடியாது. சசிகலாவின் திறமையை நாங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். அ.தி.மு.க-வில் பிளவை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைப்பது ஒரு போதும் நடக்காது" என்றார்.
இந்த பேட்டிமுடிந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்தார். ''ஆரம்பத்தில் இருந்தே அத்தைக்கு அளித்த சிகிச்சை விவரங்களை நான் கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் சொல்லவில்லை. அத்தை ஜெயலலிதா மரணம் அடைந்து, 2 மாதம் கழித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதிலும் ஏராளமான குழப்பங்கள். மருத்துவர்கள் அளித்த விளக்கம் மேலும் மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. முதல்வராக சசிகலா தேர்வானதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன். அத்தையின் லட்சியத்தை வென்றெடுப்பேன். தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். ஒருவருடன் 33 வருடங்கள் இருந்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கான தகுதி ஆகி விடாது" என்று தீபா தெரிவித்தார்.
- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்
No comments:
Post a Comment