Tuesday, February 7, 2017


நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? - என்ன சொல்கிறார்கள் மாணவ மாணவிகள்?





மருத்துவப் படிப்பில் மாணவர்கள் நுழைவதற்கு தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் நீட் தகுதித் தேர்வு வேண்டுமா, வேண்டாமா; கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்களே என்பது போன்ற கேள்விகள், சர்ச்சைகள் எழுவது தமிழகத்துக்குப் புதிதில்லை. கடந்த ஆண்டு வரை, அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு பதிலாக மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டனர்.

இந்தாண்டும் தமிழகத்தில் நீட் தேர்வு சர்ச்சை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இந்தக் கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே நடத்தப்பட்டன. தனியார் பள்ளிகள் நீட் நுழைவுத் தேர்வுகளில் உங்கள் குழந்தைகள் வெற்றி பெற கூடுதல் பயிற்சி அளிக்கிறோம் என்பதையே மார்க்கெட்டிங் டெக்னிக்காகப் பயன்படுத்தியுள்ளன. இதற்கெனக் கூடுதல் கட்டணமும் மாணவர்களிடம் பெற்றுள்ளன. நீட் தேர்வு என்பது நடப்புக் கல்வியாண்டில் நன்றாகவே வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் குறைந்தளவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு நன்மை செய்யுமா என்றால் அது கேள்விக்குறியே... தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்கள் படிப்பது என்னவோ தமிழ்நாடு பாடல்நூல் கழகத்தால் தயாரிக்கப்படும் பாடங்கள். ஏணிவைத்தாலும் எட்ட முடியாத ’கல்வி பயிலும்’ வித்தியாசங்களை வைத்துகொண்டு அதுவும் ஒரு மாத கால இடைவெளியில் மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது அபத்தம்.

தமிழக அளவில் இது குறித்து தெளிவான முடிவுகள் எட்டப்படாத நிலையில் மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து வருகிறது. தமிழக அளவில் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வரைவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்டமாக பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

நீட் தேர்வுக்கு வரும் மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ. அழைப்பு விடுத்துள்ளது. தமிழக அளவில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 4ம் தேதி துவங்க உள்ளது. இத்தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்வு முடிந்து நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக 35 நாள் அவகாசம் மட்டுமே உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில் தமிழக பிளஸ் 2 மாணவர்கள் ஒப்புக்காவது நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வைக்கலாமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி மாணவ மாணவிகள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடமே கேட்டோம்.

காமினி, புதுச்சாம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேட்டூர்:


‘‘மத்திய கல்வித் திட்ட பாடங்கள்னு சொல்லப்படுற சி.பி.எஸ்.இ திட்டத்துல இருந்துதான் கேள்விகள் கேட்குறாங்க. நீட் எல்லாரும் எழுதணும்னு சொல்ற மாதிரி, அதுக்கான பாடத்திட்டத்தை பிளஸ் ஒன்ல இருந்து அத்தனை பேரும் படிக்கணும்னு சொன்னா நியாயம். அதைப் பாடத்திட்டமா கொண்டு வந்துட்டா நாங்களும் படிச்சுப்போம். ஆனா அப்படியெல்லாம் இல்லாம எந்தப் பயிற்சியுமே கொடுக்காம திடீர்னு நீட் எழுதுன்னா எப்படிக்கா எழுதுறது? நாங்க படிக்கிறதுக்கு ரெடி. ஆனா எங்களுக்கு வாய்ப்பே கொடுக்காம ஜெயிக்கணும்னா என்ன அர்த்தம், சொல்லுங்க? எங்க டாக்டர் கனவே காணாமப்போயிடுற மாதிரி இருக்குது".

சில்வியா, மெட்ரிக் கல்வித் திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவி:




''மனப்பாடத்தை நம்பிப் படிச்சவங்க மட்டும்தான் நீட் எக்ஸாமைப் பார்த்து பயப்படணும். பிளஸ் 1, பிளஸ் 2 சப்ஜக்ட்ஸை முழுமையா புரிஞ்சு படிச்சவங்களுக்கு நீட் தேர்வு ஈஸிதான்னு எனக்குத் தோணுது. நம்ம தமிழ்நாட்டுல பிளஸ்டூ மார்க்ஸ் அடிப்படையில மெடிக்கலுக்குப் போறவங்க எல்லாம் எப்படியாவது மெடிக்கல் காலேஜ் போயிடணும்னு அதிக மெனக்கெட்டு மனப்பாடம் பண்றாங்க. மார்க்ஸ் அடிப்படையில மெடிக்கல் காலேஜ் டிரை பண்றப்ப மெடிக்கலே ரொம்ப சுமையாகிப்போயிடும்."


சி.பி.எஸ்.இ. மாணவன் இமித்தியாஸ்:


''மார்க்ஸை மட்டுமே நம்பிட்டு இருந்தா தமிழ்நாட்டு அளவுல இருக்கிற மெடிக்கல் காலேஜ்ல மட்டும்தான் படிக்க முடியும். ஆனா ஆல் இந்தியா அளவுல உள்ள கல்லூரிகள்ல படிக்க நீட் அவசியம். நினைச்சுப் பாருங்க, மற்ற மாநிலத்தில் போய்ப் படிக்கிறப்ப அதிகமான ஸ்கோப், கற்றல் பலன், மதிப்பு எல்லாம் கிடைக்கும். மொத்தத்துல அதிக பணம் கொடுத்துப் படிக்க வைக்கிற கஷ்டம் நம்ம அப்பா அம்மாக்களுக்கு இல்லாமப்போகும். அதைவிட வேற ஒரு நிம்மதி இருக்கா என்ன?"

பிரியதர்ஷுகா, மருத்துவக் கல்லூரி, சென்னை: (முதலாம் ஆண்டு)

‘‘பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில படிக்கிறப்ப, பிளஸ் 1 பாடத்தை அப்படியே ஸ்கிப் பண்ணிடுறாங்க. அதனால மனப்பாடம் பண்ணி படிச்சுட்டு வர்றவங்க மெடிக்கல் காலேஜ்ல நடத்தப்படுற முதல் செமஸ்டர்லேயே அரியர்ஸ் வைச்சு, அதனால ஏற்படுற மன அழுத்தம் அவங்களை துவண்டுபோக வைச்சிடும். ஒருதடவை மெடிக்கல் காலேஜ் உள்ள நுழைஞ்சுட்டா அங்க மனப்பாடம் எல்லாம் வேலைக்காகாது. ஆனா, நாம புரிஞ்சு படிச்சு அகில இந்திய அளவுல இருக்கிற அத்தனை காலேஜுக்கும் போற வாய்ப்பைப் பயன்படுத்திக்கிடலாம்.'’

யாழ் ஶ்ரீதேவி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024