Tuesday, February 7, 2017


நேற்று பரபரப்பு..! இன்று களையிழந்தது..! வெறிச்சோடியது சென்னை பல்கலை. வளாகம்



அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதை ஊதர்ஜிதப்படுத்தும் விதமாக சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நேற்று பிற்பகலில் இருந்தே வேலைகள் ஆரம்பித்தன. இதையடுத்து, அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

சசிகலாவை, வரவேற்க சாலையின் இருஓரங்களிலும் தடுப்புவேலி அமைக்கப்பட்டது. மேலும், சாலையில் உள்ள மின்கம்பங்களில் புதிதாக விளக்குகள் பொருத்தப்பட்டன. இதனால் சென்னைப் பல்கலைக்கழகம் மின்விளக்குகளால் ஜொலித்தது. இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், முதலமைச்சராக சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிப்போனது.



பரபரப்புடன் காணப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக வளாகம் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கம் மூடப்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் வெறும் தடுப்புவேலிகள் மட்டுமே காவல் காக்கின்றன. மூடப்பட்ட பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தைப் படம்பிடிப்பதற்குப் பத்துக்கும் மேற்பட்ட ஊடகங்களின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

- ஆ.முத்துக்குமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024