செப்டம்பர் 22ல் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? செங்கோட்டையன் பரபர பேட்டி
செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்ததாக பி.ஹெச்.பாண்டியன் கூறிய குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியானது என்றும், அதனால் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்ன என்பது குறித்த சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் மற்றும் கொள்கைப் பரபரப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில், "ஜெயலலிதாவுக்காக இன்று வக்காலத்து வாங்குகிறார் பி.ஹெச்.பாண்டியன். இவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேரும் பதவியில் இருக்கிறார்கள். எந்த இயக்கத்தில் ஒரு குடும்பத்துக்கு ஐந்து பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஐந்து பதவி கொடுத்த இயக்கம் அ.தி.மு.க.தான். இதற்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. இந்த இயக்கத்துக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்ற கும்பலோடு சேர்ந்திருக்கிறார். அ.தி.மு.க ஒற்றுமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒருமித்த கருத்துகளோடு இருக்கிறோம்.
1990-ம் ஆண்டு ராஜீவ்காந்தி, ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வந்தபோது சசிகலாவை பக்கத்தில் அழைத்து வைத்து, 'எனக்கு நட்பின் இலக்கணமாக இருப்பவர் இவர்தான்' என்று குறிப்பிட்டுக்காட்டினார் ஜெயலலிதா. 1998ல் வாஜ்பாயை சந்தித்து பேசியபோது, 'எனக்கு தாயாக இருக்கும் ஒருவர் இவர்தான்' என்று சசிகலாவை அறிமுகப்படுத்திக் காட்டினார். இதுவே நமக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. துரோகிகளுடன் சேர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பவர்களை பார்த்து நான் கேட்கிறேன். "ஜெயலலிதாவுக்கு இந்த துன்பம், இடர்பாடு யாரால் வந்தது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை (செய்தியாளர்களை) அழைத்து தெரிவித்து இருக்கிறோம். பி.ஹெச்.பாண்டியனை நேரடியாக சந்தித்து பேசவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். துரோகிகளுடன் இணைந்து அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த யார் முயன்றாலும் அது முடியாது. இந்த இயக்கம் எஃகு கோட்டை. அ.தி.மு.க.வை பற்றிப் பேச பி.ஹெச்.பாண்டியனுக்கு என்ன உரிமை இருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருந்தபோது மீட்டெடுக்க உதவாதவர் பி.ஹெச்.பாண்டியன். 1996ல் ஜெயலலிதா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அ.தி.மு.க.வுக்காக பி.ஹெச்.பாண்டியன் துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதில்லை. பதவியைவிட கட்சியே பெரிது என்று எண்ணுபவர்கள்தான் உண்மையானவர்கள். சசிகலா மீது பி.ஹெச்.பாண்டியன் வீண்பழி சுமத்துகிறார். சசிகலா முதல்வராக பதவியேற்பது உறுதி.
செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்ததாக பி.ஹெச்.பாண்டியன் கூறுகிறார். அன்று நான் போயஸ் கார்டனில்தான் இருந்தேன். தேவையில்லாமல் இப்படிப்பட்ட கருத்தைக் கூறக்கூடாது. பதவி இருந்தால்தான் அ.தி.மு.க.வில் இருப்பேன் என்று பி.ஹெச்.பாண்டியன் சொல்லியிருக்கிறார். விஷம் கொடுத்ததாக சொல்கிறார்கள். இதை யார் சொல்லணும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்தான் சொல்லணும். அவர்கள் சொல்லவில்லையே. நாம் எதுவேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். ஒருவர் மீது பழிசுமத்துவது எளிது.
பொதுச் செயலாளரை நியமிக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்கிறார். எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தி.மு.க பொதுக்குழுதான் நீக்கியது. இதனால் எம்.ஜி.ஆர் வேதனைப்பட்டார். இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியில் சட்டம் கொண்டு வந்தார். அ.தி.மு.க.வில் மட்டும்தான் இந்த தேர்வு முறை இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த இயக்கத்தை நடத்திச் செல்வதற்கு ஒரு பொதுச் செயலாளர் தேவை. எல்லா உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து இதற்காக தேர்தல் நடத்த கால அவகாசம் இல்லை. இந்த சூழ்நிலையில் சசிகலாவை பொதுச் செயலாளராக்க பொதுக்குழு பரிந்துரை செய்கிறது. இதில் எந்த தவறும் இல்லை. பொதுக்குழு பரிந்துரை செய்யக்கூடாது என்று கழக சட்டத்திட்ட விதிகளில் இல்லை. அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்படவில்லை. மீண்டும் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வரும்போது இதனை அவர்கள் செய்யலாம். தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டாலும் கூட பொதுச் செயலாளர் பொறுப்பு போட இதில் இடமிருக்கிறது. பொதுக்குழு பரிந்துரை செய்யக்கூடாது என்று கழக சட்டத்தில் எங்கே இருக்கிறது. அது கிடையாது. அதன் அடிப்படையில்தான் சசிகலாவை பொதுச் செயலாளராக பொதுக்குழு நியமனம் செய்துள்ளது" என்று கூறினர்.
- மு.சகாயராஜ்
படங்கள்: கே.ஜெரோம்
No comments:
Post a Comment