Tuesday, February 7, 2017

தள்ளிப்போகும் பதவியேற்பு! சசிகலாவின் அடுத்த வியூகம் என்ன?


சசிகலா முதல்வராகுவதை பா.ஜ.க. தடுப்பதாக அவரது தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தத் தடைகளைத் தாண்டி சசிகலாவை முதல்வராக்கும் திட்டம் குறித்து கார்டனில் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா சட்டப்பேரவை அ.தி.மு.க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதலமைச்சராக பதவி ஏற்பு விழாவிற்கான பணிகள் துரிதமாக நடந்தன. இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இரவில் அந்த விழா தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரிடமிருந்து 'அழைப்பு' வரவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்த காலதாமதத்துக்கு பா.ஜ.க.வின் தலையீடு இருப்பதாக சசிகலா தரப்பினர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சசிகலா தரப்பினர் கூறுகையில், "ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு பா.ஜ.க.வின் தலையீடு தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது. முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அடுத்து, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவ் தமிழகத்தில் இல்லை. அவரது வருகை தாமதமானதால் பதவி ஏற்பு விழா தள்ளிப்போனது. இதற்குப் பின்னணியில் பா.ஜ.க. அரசு உள்ளது தெளிவாகத் தெரிகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை மட்டும் உடனடியாக ஏற்றுக் கொண்டார் தமிழக ஆளுநர், புதிய அமைச்சரவை அமையும்வரை பணியில் தொடரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் மட்டும் காலதாமதப்படுத்துவது பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலக்கட்டத்தில் தமிழகத்தைக் கண்டு அஞ்சிய பா.ஜ.க. தற்போது எள்ளி நகையாடுகிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக இளைஞர்களின் எழுச்சிக்குப் பிறகே பா.ஜ.க. அரசு பின்வாங்கியது. அதுபோல மீண்டும் ஒரு புரட்சி ஏற்படும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. தமிழக ஆளுநர் தரப்பிலிருந்து அழைப்பு வர காலதாமதமாகினால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

முதல்வர் பதவி ஏற்பு விழா காலதாமதப்படுத்தப்பட்டதால் நேற்று கார்டனில் சசிகலா தலைமையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது 'ஆளுநரின் அழைப்பு தாமதமாகி வருவதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி எதுவும் செய்ய முடியாது. ஆளுநரின் அழைப்பு மேலும் திட்டமிட்டு காலதாமதமாகினால் குடியரசுத் தலைவரை சந்திக்கலாம்' என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு சசிகலா, முதல்வராக பதவி ஏற்பார் என்று கார்டன் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024