சசிகலா நடத்தும் அரசியல் கேலிக்கூத்து..’ - ஸ்டாலின் சாடல்
“கடந்த சில தினங்களாக அதிமுக அரசியலில் தோன்றிய புதுமுக ‘பொதுச் செயலாளர்’ சசிகலா நடத்தும் அரசியல் கேலிக்கூத்துகள் தமிழகத்தின் பெருமையையும், தமிழக மக்களின் புகழையும் அகில இந்திய அளவில் - ஏன் உலக அளவில் கெடுக்கும் விதத்தில் அமைந்திருப்பது வேதனைக்குரியது” என்று மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “முதலமைச்சர் பதவி’யின் கண்ணியத்தையும் சூறையாடி, ‘மாநில சட்டமன்றத்தின்’ மாண்பையும் ‘சின்னம்மா புகழ் பாடி’ கெடுத்து இன்றைக்குத் தமிழகத்தில் மாபெரும் அசிங்கத்தை ‘பிணைக்கைதிகள்’ போல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பிடித்து வைத்து நிறைவேற்றியிருக்கிறார் அதிமுகவின் திடீர் பொதுச் செயலாளர் சசிகலா. இந்த அரசியல் அநாகரிக, அரசியல் சட்ட விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்தகைய சூழலில், ஆளுநர் அவர்கள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சட்ட ‘வெற்றிடம்’ பற்றி தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த நடவடிக்கையின் பின்னணியில் ‘அடுத்து வரவிருக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு’ மற்றும் ‘அமைய வேண்டிய நிலையான ஆட்சி’ ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மக்கள் விரும்பும் நல்லதொரு முடிவை ஆளுநர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment