Tuesday, February 7, 2017



vikatan.com

'' 'என்னைக் கொன்று விடுவார்களோ' எனப் பயந்தார் ஜெயலலிதா!'' - பகீர் புகார்


சசிகலா சதி செய்து வருவதாகவும், இந்த கும்பல் என்னை கொன்றுவிடுமோ என்று ஜெயலலிதா என்னிடம் கூறி கலங்கினார் என அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும் இன்று கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, பி.எச். பாண்டியன் கூறுகையில், "ஜெயலலிதா நினைவிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு ஜெயலலிதாவுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா போகப்போவதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது, என்பதை ஊடகங்களில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு, ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா கீழே விழுந்ததாகவும் அவரைத் தாங்கிப்பிடிக்கக்கூட யாரும் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான் 15 நாள் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது, சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை.

கடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தைக் கலைத்துவிட்டன. ஜெயலலிதா இறந்தபோது சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. சசிகலா ஒரு சொட்டு கண்ணீர்கூட விடவில்லை" என்று கூறினார்.

அ.தி.மு.க முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் கூறுகையில், "கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுபவர் அதிமுக தொண்டர்களை மட்டும்தான் கட்டுப்படுத்தும் என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் சட்டத்தை பயன்படுத்தி பொதுக்குழுவால் இரண்டாயிரத்து ஐநூறு பேரால் இன்று அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல சட்டவிதி 20 (2) என்ற விதி இருக்கின்றது. அதில், பொதுச் செயலாளர் என்பவர் அ.தி.மு.க தொண்டர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அ.தி.மு.க சட்டவிதிகளில் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கக்கூடியவர், ஒருவரை தேர்ந்தெடுக்கவோ, நியமிக்கக்கவோ எந்த அதிகாரமும் இதுவரை வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சட்டவிதிகளின் படி 20 (5) என்ற விதி இருக்கின்றது. அதில், பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தால், இதற்கு முன்னாள் இருந்த பொதுச் செயலாளர், யார் யாரை நியமித்தாரோ அவர்களின் நியமனம், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும்வரை அது தொடரும் என்பதுதான் அந்த சட்டவிதி. இப்படி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள சூழ்நிலையில், அவருக்கு அ.தி.மு.க.வின் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு இல்லை என்பதைக் காட்டுகின்றது. காரணம், இரண்டாயிரத்து ஐநூறு பேர் மட்டும்தான் வாக்களித்துள்ளனர். ஆகவே சசிகலாவுக்கு யாரையும் நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரம் கிடையாது. இரட்டை இலைச் சின்னம் பதித்த உறுப்பினர் அட்டையை ஒருவருக்கு கொடுக்கக்கூடிய உரிமை கூட அவருக்கு கிடையாது.




2011ல் ஜெயலலிதா என்னிடம் பேசினார். சசிகலா சதி செய்து வருவதாக குறிப்பிட்டார். இந்த கும்பல் என்னை கொன்றுவிடுமோ என்று ஜெயலலிதா கலங்கினார். சில நாட்களில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதோடு, போயஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் மன்னிப்பு கடிதம் கொடுத்து சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்தார். அப்போது, "அவர்களுக்கும் (மன்னார்குடி) எனக்கும் சம்பந்தமில்லை. அவர்களோடு இனிநான் தொடர்பு வைக்க மாட்டேன் என்று அவர் சொல்லி சாதாரண உறுப்பினராக அனுப்பப்படுகிறார். அப்படி சாதாரண உறுப்பினராக அனுமதிக்கபட்ட சசிகலா, ஜெயலலிதா மறைந்து இருபது நாளில் பொதுச் செயலாளராகிறார்.

அதுமட்டுமல்ல, ஒருபோதும் சசிகலாவை கவுன்சிலராகக் கூட ஆக்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு இருந்தது கிடையாது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு கோயில் போன்றது. அந்த கோயிலை ஒரு நினைவு இடமாக மாற்றியிருக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், அவர் பயன்படுத்திய கார், அவர் பெற்ற பரிசு பொருள்கள், அவர் பெற்ற விருதுகள், இவை அனைத்தும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் நினைவாக இருக்கின்றன. தமிழக மக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் சென்று ஜெயலலிதாவை வணங்குவதற்கு அது நினைவிடமாக்க வேண்டும் என்பதுதான் என்போன்றவர்களின் எண்ணம்.



இன்று தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா வரப்போகிறார். 25 நாள்களில் பொதுச் செயலாளர், 60 நாள்களில் முதலமைச்சர். இப்படிப்பட்ட எண்ணங்கள் ஒருவருக்கு இருக்கிறது என்று சொன்னால், ஜெயலலிதாவோடு அவரால் எப்படி அன்பாக இருந்திருக்க முடியும். எதிர்பார்ப்பு இல்லாமல் எப்படி இருந்திருக்க முடியும். அவரோடு இருக்கின்றபோது பதவி மீது ஆசையில்லாமல் எப்படி இருந்திருக்க முடியும். அப்படி ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று சொன்னால் 33 ஆண்டுகள் சசிகலா இருக்கிறார் என்று சொல்கிறார்களே, 50 ஆண்டுகள் ஜெயலலிதாவின் இல்லத்தில் அவருக்கு பாதுகாவலராக, தாயாக, எல்லாமுமாக இருந்தவர் ராஜம்.

ஜெயலலிதாவின் 13 வயது முதல் இறக்கும்வரை அவர்களோடும், சசிகலா வெளியேற்றப்பட்டப்போதும் கூட இருந்தவர் ராஜம். ஜெயலலிதாவுக்கு தாயாக இருந்தார். ஆனால், முதலமைச்சர் என்று வரும்போது அ.தி.மு.க தொண்டர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வஞ்சித்து ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக இன்று பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் தமிழகத்தை ஆண்டால் தமிழகம் எங்கே போகும். நாட்டு மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருபோதும் இதை அனுமதிக்கக்கூடாது. தற்காலிக பொதுச் செயலாளர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக முடியுமா" என்று ஆவேசமாக கூறினார்.

- மு.சகாயராஜ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024