அப்போலோ பத்திரிகையாளர் சந்திப்புகளில் இடம் பிடித்திருந்த டாக்டர் சிவக்குமார் நேற்று எங்கே..?
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அன்று, உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெயலலிதா. போயஸ்கார்டனில் அவர் இருந்தவரை உடன் இருந்து சிகிச்சை செய்தவர் டாக்டர் சிவக்குமார். சசிகலாவின் அண்ணன் மருமகன். பிளாஸ்டிக் சர்ஜனான இவர், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் உடன் இருந்து கவனித்துக்கொண்டவர் டாக்டர் சிவக்குமார். அவரது மகன் டாக்டர் கார்த்திகேயனும் அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார். ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோவில் 'பிரஸ் மீட்' நடந்தபோதெல்லாம் டாக்டர் சிவக்குமார் தவறாமல் இடம்பெற்றிருப்பார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை ஏன் மோசம் அடைந்தது என்பது பற்றியெல்லாம் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல், பிப்ரவரி 6-ம் தேதி சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் விளக்கம் அளித்தார். இந்த பிரஸ்மீட்டில் டாக்டர் சிவக்குமார் மிஸ்ஸிங். அவர் எங்கே போனார் என்று நிருபர்கள் கேட்டபோது, மருத்துவக்குழுவினரிடம் இருந்து சரியான பதில் இல்லை. ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டடிருந்தபோது தான், டாக்டர் சிவக்குமாரை கடைசியாகப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு, அவர் எங்கும் வருவதில்லை.
இதுபற்றி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் கூறும்போது, "ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, சிவக்குமாரிடம் நன்றாகப் பேசினார். ஒரு கட்டத்தில், நினைவு திரும்பியபோது, 'இத்தனை நாள் இங்கே இருந்து விட்டேனே?.. நான் நன்றாக இருக்கிறேன் என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? என்னுடைய புகைப்படத்தையும் என் அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்' என்று சிவக்குமாரிடம் ஜெயலலிதா சொன்னாராம். இதை சிவக்குமார், சசிகலாவிடம் தெரிவித்தபோது, ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட அவர் மறுத்து விட்டாராம். அதிலிருந்தே சிவக்குமார் படிப்படியாக விலக்கி வைக்கப்பட்டார். போயஸ்கார்டனுக்கு போவதையும் குறைத்துக் கொண்டார். அதனால்தான், டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் அளித்த பிரஸ் மீட்-க்கு சிவக்குமார் அழைக்கப்படவில்லை" என்றார். ஜெயலலிதா உடல்நிலை பற்றிய முழு விவரம் தெரிந்த டாக்டர் சிவக்குமாரை ஏன் சசிகலா ஓரம்கட்டி வைத்திருக்கிறார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
- ஆர்.பி.
No comments:
Post a Comment