செயற்கை நிறமூட்டிகள்... செழிக்கும் வணிகம்... தொலைந்துபோகும் ஆரோக்கியம்! நலம் நல்லது-66
#DailyHealthDose
வண்ணக் கனவுகள் மட்டும் இருந்தால் போதாது; ஆரோக்கியத்துக்கு, உணவிலும் அவை இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில நிறங்கள் தேவைப்படுகின்றன. எனவேதான், உணவில் செயற்கை நிறமூட்டும் வணிகம், ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் டாலருக்கு உலக அளவில் நடக்கிறது. இந்த செயற்கை நிறமூட்டிகள் காரணமாக நிச்சயம் செயலிழக்கும் ஆரோக்கியம். இயற்கையாகவே வண்ணம் நிறைந்த காய், கனிகள் நம் உடலுக்கு உரமும் ஊட்டுபவை.
ஹோட்டலில் செக்கச்செவேலென பரிமாறப்படும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை சமையல் பாத்திரத்தைக் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம்விட்டுக் கழுவுவோம். அதற்குப் பிறகும் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட காய்ந்த மிளகாயில் இருந்தோ வந்தது கிடையாது. நம் கண்களைக் கவர அதில் தூவப்பட்டிருக்கும் `ரெட் டை 40’ (Red Dye 40) எனும் ஆசோ டையின் (Azo Dye) எச்சமாக இருக்கலாம்.
பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தான் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களில் பெருவாரியாகச் சேர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சு மிட்டாயும், கேசரியும் ரத்தச் சிவப்பு நிறத்தில் இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருவேளை நம் ரத்தத்தை வற்றச் செய்யும் புற்றுநோயும் கூடவே வரலாம் என்கின்றன இன்றைய ஆய்வுகள். பல நாடுகள் இந்த நிறமிகளைத் தடை செய்திருக்கின்றன. செயற்கையாக இல்லாமல், இப்படி எத்தனை நிறங்கள் இயற்கை உணவில் இருக்கின்றன என உற்றுப் பார்த்தால் ஆச்சர்யம்!
தாவரம், தன் வளர்சிதை மாற்றத்தில் சேமித்துவைத்திருக்கும் பொருள்தான் இந்தத் தாவர நிறமிகள். `பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாளர்களால் அழைக்கப்படும் சத்துக்களில்தான் இந்த நிறமிகளைத் தரும் சத்துக்கள் அனைத்தும் அடங்கும். இவை, தாவரம் தன்னை அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்தும், சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிக்கொண்டவை. மனிதன் அதைச் சாப்பிடும்போது, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் பெரும் பங்கு செலுத்துபவை.
பாலிபீனால் எதில் கிடைக்கும்?
* பால் சேர்க்காத ஒரு கப் தேநீரில் 100 - 150 மி.கி உள்ளது. கிரீன் டீயில் பாலிபீனால் சத்து இதைவிடக் கூடுதலாகக் கிடைக்கும்.
* 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்சையோ, கருநீல நாவல் பழமோ, சிவந்த ஆப்பிளோ, பப்பாளியோ, மாதுளையோ 200 - 300 மி.கி பாலிபீனாலைத் தரக்கூடும். இந்தப் பழங்கள் மிகவும் கனிவதற்கு முன்னர், கொஞ்சம் இளம் காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள் (Phenolic Acids) சற்று அதிக அளவில் கிடைக்கும். அதிகம் பழுக்காத இளம் கொய்யாவை சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும், `வாழை இளம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்’ என சித்த மருத்துவ நோயணுகா விதி பாடியதும் இதனால்தான்.
* அதே நேரம், ஆந்தோசயனின் (Anthocyanin) எனும் நிறமிச் சத்துக்களோ, நன்கு பழுக்கும்போது பழத்தோலில் உருவாகிறது. எனவே, மாதுளை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை நன்கு கனிந்த பின்னர் சாப்பிடுவதே சிறந்தது.
* வெறும் வயிற்றில் வேறு உணவு இல்லாத வேளையில் பழங்கள் உள்ளே சென்றால்தான் மருத்துவப் பயன் தரும் அதன் நிறமிச் சத்துக்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். `டெசர்ட்’ என்ற பெயரில் பழத்தைக் கடைசி பெஞ்சில் உட்காரவைப்பது தவறு.
* சமைப்பதில், சேமிப்பதில் கவனம் இல்லாவிட்டால், இந்த பாலிபீனால்களின் பயனை இழக்க நேரிடும். சிறிய வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, `ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா’ எனும் புளிச்ச கீரை ஆகிய காய்கறிகளிலும், சதகுப்பை முதலான மூலிகைகளிலும் உள்ள `குயிர்செட்டின்’ (Quercetin) எனும் சத்துதான், நம் ரத்த நாளத்தில் கொழுப்புப் படியாமல் இருக்க உதவும் முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வெங்காயத்தையும் தக்காளியையும் சமைக்காமல் சாலட் ஆகச் சாப்பிடும்போதுதான் முழுப் பயன் கிடைக்கும். வெங்காயத்தை வேகவைக்கும்போது 80 சதவிகிதமும், வறுக்கும்போது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள் காணாமல்போகும்.
* பாலிபீனால்கள் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் லோக்டோபேசிலஸ் (Lactobacillus) முதலான புரோபயாடிக்ஸ் இருப்பது நல்லது. இது இயல்பாகக் கிடைப்பது மோரில் மட்டுமே. எனவே, சின்ன வெங்காயத்தின் பயன் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால், வெங்காயத் தயிர் பச்சடியாகவோ, வெங்காயம் தொட்டுக்கொண்டு மோர் சோறாகவோ, மோர் சேர்த்த கம்பங்கூழாகவோ சாப்பிடுவது சிறந்தது.
* வெங்காய பக்கோடா சுவை தரலாம்; ஆனால், சுகம் தராது. அதேபோல் வெங்காயத்தின் வெளி வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என வெளிப்பக்கம் பூராவையும் உரித்து உரித்து, உள்ளே உள்ள வெள்ளை வெங்காயத்தைச் சாப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.
இயற்கையாக நிறமும் கொடுத்து, உடலுக்கு உரமும் தரும் பொருட்கள் ஏராளமாக இருக்கும்போது அவற்றைச் சாப்பிடுவதே ஆரோக்கியம். அதைவிட்டுவிட்டு செயற்கை நிறமூட்டிகள் பின்னே போவது நம் சுகமான வாழ்க்கையைப் பாழ்படுத்திவிடும். கேக்கில் மூணு அடுக்கு வண்ணம், பிஸ்கெட் பார்டர் ஒரு வண்ணம், உள்ளே க்ரீம் இரண்டு வண்ணம், குளிர்பானத்தில் புது வண்ணம் எனச் சாப்பிடுவது, கொஞ்சமாக பெட்ரோலும் தாரும் குடிப்பதற்குச் சமம்.
தொகுப்பு: பாலு சத்யா
No comments:
Post a Comment