Thursday, February 9, 2017

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பதவிக்கு கடும் போட்டி : செயலரை குழப்பும் 'புகார் மழை'

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) விஜயனின் பதவி காலம் இன்று (பிப்.,9) முடிவடைவதால், அப்பதவியை கைப்பற்ற பேராசிரியர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பணிமூப்பு பேராசிரியர் பட்டியலில் உள்ளோர் குறித்து, உயர் கல்வி செயலர் கார்த்திக்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இப்பல்கலையில், இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், 'பொறுப்பு' பதிவாளராக இருந்த முத்துமாணிக்கம் கடந்தாண்டு ராஜினமா செய்தார். அவருக்கு பதில் தேர்வாணையாளர் விஜயன் அப்பணியிடத்தில், நியமிக்கப்பட்டார். விஜயனின் தேர்வாணையர் பதவிக் காலம் இன்றுடன் (பிப்.,9) முடிகிறது. அவருக்கு, இன்னும் மூன்று மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு வரை உத்தரவு வெளியாகவில்லை. இப்பணியிடம் 'சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும்,' என வலியுறுத்தப்பட்ட நிலையில், சிலர் 'குறுக்கு வழியில்' 'பதிவாளர் பொறுப்பை' பெற, 'காய் நகர்த்துவதால்' பேராசிரியர்களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பதிவாளர் 'பொறுப்பு' யாருக்கு வழங்கப்படும் என்ற உத்தரவை உயர்கல்வி செயலர் கார்த்திக் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகார் மழை: இந்நிலையில் மதுரையில் கல்வி நிறுவனம் நடத்தும் இப்பல்கலை பேராசிரியர் ஒருவருக்கு, 'பதிவாளர் பொறுப்பு' வழங்க சிலர் ஏற்பாடு செய்வதாக தகவல் வெளியானது. இதனால், அவர் மீது ஏராளமான புகார்கள் நேற்று செயலருக்கு அனுப்பப்பட்டது.அதில், சம்பந்தப்பட்ட அந்த கல்வி நிறுவனத்தில் கடந்த மாதம், பல்கலை தேர்வு நடந்தபோது சிலரை மட்டும் பார்த்து எழுத அனுமதித்ததாக புகார் எழுந்தது. இப்பிரச்னை குறித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின்பேரில் டி.ஆர்.ஓ., விசாரணை நடக்கிறது. இந்நிலையில், அப்பேராசிரியருக்கு பதிவாளர் 'பொறுப்பு' வழங்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய பணியிடங்கள் காலி: தேர்வாணையர் விஜயன், பதிவாளர், தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர், டீன் என நான்கு பணியிடங்களில் ஒருவரே 'பொறுப்பு' வகித்தார். தேர்வாணையர் பதவி காலம் முடிவதால் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து பணியிடங்களுடன், துணைவேந்தர் பணியிடமும் காலியாக நீடிக்கிறது என்பது   குறிப்பிடத்தக்கது. 

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024