சசிகலா மீது எப்.ஐ.ஆர்., போட வைப்பேன்'
முதல்வர் பன்னீர்செல்வத்தை, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன், நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில், அனைவரையும் அடக்கி ஆள வேண்டும், மிரட்டி ஆட்சி செய்ய வேண்டும் என்பது போல, சசிகலாவின் செயல்கள் உள்ளன. பன்னீர்செல்வம், 15 ஆண்டுகள் அமைச்சர்; 20 ஆண்டுகள், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தற்போது, முதல்வராக உள்ள அவரை, சசிகலா அழைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டியுள்ளார். 'பணம் பணம்' என்று அலையும், சசிகலாவின் குடும்பத்தினர், ஆட்சி மூலம், மேலும் பணத்தை சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். 'மிடாஸ்' மதுபான ஆலையை நடத்தி வரும் சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராக எப்படி செயல்படுவார். அந்த ஆலையின் மூலம், அவர் ஆண்டுக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆனால், கட்சி தொண்டர்கள், சாப்பாடு இன்றி திண்டாடி வருகின்றனர். தற்போது, முதல்வராக வர சசிகலா துடிக்கிறார். சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவுக்கு தவறான சிகிச்சை அளித்த விபரம் வெளியாகி உள்ளது.
முதல்வர், எம். எல்.ஏ.,க்கள், கட்சி தொண்டர்களை, சசிகலா குடும்பத்தினர் துன்புறுத்தினால், பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; நாட்டு மக்களையும் துன்புறுத்த விடமாட்டேன். மிரட்டும் செயலை சசிகலா நிறுத்தாவிட்டால், அவர் மீது, எப்.ஐ.ஆர்., போட வைப்பேன். இதோடு, அவர் விலகிக் கொண்டால் நல்லது. ஜல்லிக்கட்டை பாதுகாத்த, பன்னீர்செல்வத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment