கவர்னரிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை
பன்னீர்செல்வம் வாபஸ் பெற முடியுமா?
'ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து, கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என்றால், முதல்வர் பன்னீர்செல்வம், அவரிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்' என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், முதல் கட்டமாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பொறுப்புக்கு, தற்காலிகமாக சசிகலா நியமிக் கப்பட்டார். அடுத்த கட்டமாக, ஆட்சிக்கு அவர் தலைமை ஏற்க வேண்டும் என்ற கோஷத்தை, கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் முன் வைத்தனர்.
சட்டசபை கட்சி தலைவராகவும், சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். முன்னதாக, முதல்வர் பதவி யில் இருந்து, பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்; அதை, கவர்னரும் ஏற்றார். தற்போது, இடைக்கால முதல்வராக, பன்னீர்செல்வம் தொடர்கிறார்.
ராஜினாமா கடிதத்தை வற்புறுத்தி பெற்றதாக, முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மக்கள் விரும்பினால், ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும் கூறியுள்ளார். ராஜினாமா கடிதம் கொடுத்து, அதை கவர்னரும் ஏற்ற பின், வாபஸ் பெற முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.
முதல்வரின் ராஜினாமாவை ஏற்பதற்கு முன், அந்த கடிதம் குறித்து, முதல்வரிடம் கவர்னர் உறுதி செய்திருக்க வேண்டும். அவ்வாறு உறுதிசெய்திருக் கும் பட்சத்தில், ராஜினாமாவை வாபஸ் பெற முடி யாது என, ஒரு தரப்பும், கவர்னர் திருப்தி அடைந் தால், வாபஸ் பெறலாம் என, மற்றொரு தரப்பும் கூறுகிறது.
இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக, முதல்வர் கூறியுள்ளார். அது உண்மையா என்பது குறித்து, கவர்னர் விசாரணை நடத்தலாம். ஆனால், முதல்வர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக, கவர்னரிடம் மனு அளிக்க வேண்டும். அப்போது, அந்த புகார் குறித்து, கவர்னரும் விசாரிக்க வேண்டும்.
முதல்வரின் விளக்கத்தில் திருப்தியடைந்தால், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவது குறித்து, கவர்னர் பரிசீலிக்க முடியும். கவர்னரிடம் புகார் அளிக்காமல் இருந்தால்,அவரது ராஜினாமாவை ஏற்றது சரியாகி விடும்.
ராஜினாமாவை வாபஸ் பெற அனுமதித்தால் மட்டும், மீண்டும் பன்னீர்செல்வம் முதல்வராகி விட முடியாது. தனக்கு இருக்கும் பெரும் பான்மை உறுப்பினர்களின் கையெழுத்துடன் ஆதாரங்களை, கவர்னரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதில், கவர்னர் திருப்தியடைந்தால், பெரும் பான்மையை சட்டசபையில் நிரூபிக்கும்படி,
அழைப்பு விடுப்பார். இடைக்கால அரசாக, நீண்ட காலம் இயங்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி கூறியதாவது:
முதல்வரின் ராஜினாமாவை, கவர்னர் ஏற்றுக்கொண்டு விட்டதால், அதை வாபஸ் பெற முடியாது. பெரும்பான்மை இருக்கிறது என, யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாம். ஆனால், சட்டசபையில் தான், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
பெரும்பான்மை இருக்கிறது என, கடிதம் கொடுத்தால், உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களின் கையெழுத்து, அதன் உண்மைத் தன்மையை, கவர்னர் பரிசீலிப்பார். அவர் திருப்தி அடைந்தால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment