Friday, February 3, 2017

உங்க வழி.. தனி வழியா? #MorningMotivation


ஜனவரி முடிஞ்சு பிப்ரவரியும் வந்தாச்சு. வழக்கமானதா இல்லாம புது மாதிரியா இந்த மாதத்தை அப்ரோச் பண்ணுவோமா!? மாற்றம் ஒண்ணுதான் மாறாததுன்னு சொல்லுவாங்க. ஆனா மாற்றம் தானா வந்துடாதுல்ல. எல்லா பெரிய பெரிய மாற்றங்களுக்கும் பின்னாடி இருக்க சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி பார்ப்போமா?

"வேற..வேற..வேற மாதிரி யோசி கண்ணா"

புதுசா என்ன பண்ணலாம் ரொம்ப மெனக்கெடவேண்டாம் பாஸ். எல்லா விஷயத்தையும் நம்ம வைகைப்புயல் சொன்ன மாதிரி "பிளான் பண்ணிப் பண்ணனும்" அவ்ளோதான். ஆனா அது எல்லோரும் பிளான் பண்ண மாதிரி இல்லாம புது மாதிரியா இருக்க வேண்டியதுதான் நம்ம பொறுப்பு. எல்லாப் பெரிய மாற்றமும் சின்ன சின்ன மாற்றங்கள்ல இருந்து தான் வரும்னு ஒரு பழமொழி இருக்கு (யார் சொன்னதுன்னுலாம் கேட்கப்படாது). ஆனா அந்த சின்ன சின்ன மாற்றங்கள் வெறும் கனவுகளா இல்லாம செயல்களா இருந்தா அதுதான் ஓப்பனிங் ஷாட். அதுக்கப்புறம் அடிச்சு விளையாட வேண்டியதுதான்.

"உங்க வழி தனிவழியா!?"

"கரைகளைக் கடக்கும் துணிவு இருந்தால்தான், புதிய கடல்களைக் கண்டுபிடிக்க முடியும்." இதை யார் சொன்னது தெரியுமா? நம்ம அப்துல்கலாம் ஐயா சொன்னது. எந்த விஷயத்தையும் செய்ய ஆரம்பிற்கும் முன்னாடி துணிவு வேணும். அவ்வளவு சீக்கிரம் ஆழம் தெரியாம எதுலயும் காலை விட மாட்டோம்லனு காலரை தூக்கி விடுறிங்களா?. நீங்க தொண்டனா இருக்க ஆசைப்பட்டா உங்களுக்கு இந்த வழிமுறை செட் ஆகலாம். ஆனா எல்லோருக்குமே தலைமைக்கான ஆசை இருக்கும்ல. உங்களுக்காகவும் அப்துல்கலாம் ஐயா சொன்ன விஷயம் "அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்து எடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு". தொண்டனா? தலைவனா? முடிவு உங்க கையில தான்.

"அமைதியான கடலும் திறமையான மாலுமியும்"



"அமைதியான கடல்கள் எப்போதும் திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை." என்றொரு பழமொழி உண்டு. இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும்தானே? உங்கள் செயல்களின் மீது எந்தவித விமர்சனங்கள் இல்லாமலோ, தடைகள் இல்லாமலோ வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதில் உங்கள் திறமையை எப்போதுதான் காட்டுவது? அதற்கான களத்தை அமைத்துக் கொள்வது உங்கள் பொறுப்புதான். நமக்கு வேண்டியதை முழுமையான மனதுடன் நாம்தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அமைதியான கடல்ல எந்தவித தொல்லையும் இல்லாம பயணம் செய்யுறது நல்லாத்தான் இருக்கும். ஆனா ஒரு சுனாமி வந்தா அதை எதிர்க்கிற மனவலிமை அமைதியான பயணத்துல கிடைக்காதே பாஸ். #எதிர்நீச்சலடி.. பின்பு ஏற்று கொடி!

"கனவு காணுங்கள்"

உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி கனவு காணும் தைரியம் இருந்தால், அதை சாதிக்கும் தைரியமும் தானாய் வந்து சேரும் என்பார்கள். கனவுகள் இல்லாத எந்த வெற்றியாளனையும் வரலாறு கண்டது இல்லை இனி காணப் போவதுமில்லை என தைரியமாகச் சொல்லலாம். ஒருமுறை சிறுவன் அலெக்சாண்டர் தனது குரு அரிஸ்ட்டாட்டிலுடன் காலை நேர பூஜை ஒன்றில் அமர்ந்திருந்தார். அப்போது தனக்கு அருகிலிருந்த சாம்பிராணியை அள்ளி நெருப்பில் போட அந்த இடமே புகை மண்டலமானது. "இந்தியாவைக் கண்டுபிடித்து அங்கிருந்து சாம்பிராணியை கொண்டுவா. பிறகு இந்த மாதிரி பயன்படுத்து" என அரிஸ்ட்டாட்டில் கடிந்து கொள்ள அலெக்ஸ்சாண்டருக்கு இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்பது கனவாகவே உருவெடுக்க ஆரம்பித்தது. அக்கனவை, நிஜமாக்க இந்தியாவை தேடிவர, வழியில் உலகின் பாதியை வெல்ல அடித்தளமாய் அமைந்தது. "கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவு தான் சிந்தனையாகவும், சிந்தனை தான் செயலாகவும் மாறுகிறது." இதுவும் நம்ம அப்துல்கலாம் ஐயா சொன்னதுதான்.

வெற்றிபெற பல சூத்திரங்கள் உண்டு. அவற்றில் இவற்றையும் கருத்தில் கொள்ளுங்கள். ரெடி.. ஸ்டெடி.. கோ! உங்கள் ​​​​கனவுகள் நனவாகட்டும்!

- க. பாலாஜி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024