Friday, February 3, 2017



ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி


கருணாநிதி இன்று..?

vikatan.com

ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

‘`சார்... தலைவரே!” என்று அழைக்கிறார் ரஜினிகாந்த். அவரை அடையாளம் காண முடியவில்லை கருணாநிதியால்.

‘`ஐயா, வைரமுத்து வந்திருக்கிறேன். உங்கள் கவிஞர் வந்திருக்கிறேன்’’ என்று உரக்கக் குரல்கொடுக்கிறார் வைரமுத்து. குரலோசை, காதுகளுக்குள் போகவில்லை கருணாநிதிக்கு.

“அப்பா, திருவாரூர் போயிட்டு வர்றேன்” - உத்தரவுக்காகக் காத்திருக்கிறார் ஸ்டாலின். உரக்கச் சொல்லியும் உணர்வு இல்லை கருணாநிதியிடம்.

“அண்ணே, அறிவாலயம் போகலாமா?” இது துரைமுருகனின் வெடிக்குரலில் வெளிப்படும் வேதனைக் கேள்வி. சிக்கலான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் கருணாநிதியிடம் இருந்து வரவில்லை எதிர்க்குரல்.

நாளிதழை வாசிக்கிறார் சண்முகநாதன். சத்தம் இல்லை கருணாநிதியிடம்.

‘நெஞ்சுக்கு நீதி’யில் இருந்து சில பகுதிகளை ராஜமாணிக்கம் படிக்கிறார். பதில் இல்லை கருணாநிதியிடம்.

டி.வி-யில் பழைய பாடல்களை ஓடவிடுகிறார்கள். கேட்பதாக உணர முடியவில்லை.

அவரே முன்னொரு காலத்தில் எழுதிய வசனங்கள் மிக உரத்த ஒளியில் காட்டப்படுகின்றன. கருணாநிதியின் கவனம் அவற்றில் பதியவில்லை.

எப்போதும் தன்னைச் சுற்றியே அரசியல் இருக்க வேண்டும் என நினைத்த, ‘என்னைத் திட்டினாலும் பாராட்டினாலும் அவர்கள் `கருணாநிதி' என்றே சொல்கிறார்கள்’ எனச் சொல்லிக்கொண்ட, புதிய செய்தியை தான் பரப்புவது அல்லது பழைய செய்திக்கு தனது எதிர்வினையை வழங்குவது என எப்போதும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாகவே இருந்த கருணாநிதிக்கு, இப்போது எதையும் உணரும், உள்வாங்கிக்கொள்ளும், வெளிப்படுத்தும் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது.



கடந்த ஒரு வார காலமாக ஒருவித முன்னேற்றம் இருக்கிறது, வழக்கம்போல் காலையில் தன்னைப் பார்க்க வந்த ஸ்டாலினைப் பார்த்து, புருவங்களை உயர்த்திக் கவனித்திருக்கிறார் கருணாநிதி.

பாசுரம் பாடிய ஜெகத்ரட்சகனைப் பார்த்து, மெள்ளச் சிரித்துள்ளார் கருணாநிதி. இதைப் பார்த்ததும் ஜெகத், ‘`ஐயா, நீங்க ராமானுஜர் மாதிரி 109 வயது வரைக்கும் இருப்பீங்க” என்று சொல்லி, மேலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து, கருணாநிதியின் கண்களில் இருந்து இரண்டு மூன்று சொட்டு நீர்த்துளிகள் விழுந்துள்ளன.

தினமும் காலையும் மதியமும் அப்பாவைப் பார்க்க வரும் கனிமொழி, நான்கைந்து நாட்களுக்கு முன்னர் உள்ளே வருகிறார். `ரெண்டு மூணு நாள் வெளியூர் போறேன்' என்கிறார். தன் முகத்துக்கு நெருக்கமாக இருந்த கனிமொழியின் நெற்றியில் முத்தம் இட்டுள்ளார் கருணாநிதி.

உடனே ராசாத்தி அம்மாளுக்குத் தகவல் தருகிறார் கனிமொழி. அவர் அவசரமாக வருகிறார். அவரைப் பார்த்ததும் கண்கள் லேசாகக் கலங்குகின்றன கருணாநிதிக்கு.

ஆட்களைக்கூட அடையாளம் காண முடியாமல் இருந்தவர், குடும்ப உறுப்பினர் முகம் அறிவதும், ஏதோ உள்ளுக்குள் யோசித்து அதை வெளிப்படுத்த வார்த்தைகள் வசப்படாமல் கண்கள் கசிவதும் கோபாலபுரத்துக் காட்சிகளாக இப்போது இருக்கின்றன. இதை வைத்துத்தான், ‘`இன்னும் 15 நாட்களில் தலைவர் கலைஞர், அண்ணா அறிவாலயம் வந்து கட்சிப் பணிகளைக் கவனிப்பார்” என்று அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னது. தான் பெற்ற உற்சாகத்தை, உடன்பிறப்புகளுக்கு ஊட்டுவதாக டி.கே.எஸ் அறிக்கை அமைந்துள்ளது. ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை.

கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்தே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் கருணாநிதி. அதற்குக் காரணம், உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள். கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து என ஏற்பட்டு, ஒவ்வாமை காரணமாக முகத்திலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. இதனால் முகச்சவரம் செய்ய முடியாமல்போனது. தினமும் இரண்டு வேளை முகச்சவரம் செய்யும் கருணாநிதி, லேசான தாடியுடன் வெளியே மற்றவர் பார்வையில் பட வேண்டாம் எனத் தவிர்த்தார். இந்தக் கொப்புளங்கள் மறைவதற்கான மருந்தை, மருத்துவர்களால் முழுமையான அளவில் தர இயலவில்லை. `தேவையான அளவுக்கு மருந்தைத் தாங்கும் சக்தி, உடலுக்கு இல்லை' என்றனர் மருத்துவர்கள். அதனால் இந்தக் கொப்புளங்கள் மறைய நாள் பிடித்தது. அக்டோபர் மாதம் இதில் துன்பப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, உணவு உட்கொள்வதிலும் சிரமம் இருந்தது; லேசாக மறதியும் ஏற்பட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னரே, உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிடுவார் கருணாநிதி. பிரமுகர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கியுள்ளார். வீட்டில் இருக்கும்போதே, ‘அறிவாலயத்திலா இருக்கேன்?’ எனக் கேட்டுள்ளார். பழைய நினைவுகள் மறப்பதும், ஆட்களை அடையாளம் காண்பதில் சிரமமும் இருந்த நிலையில்தான், உணவுப் பிரச்னையும் ஏற்பட்டது. எனவே, திரவ உணவை குழாய் மூலமாகச் செலுத்தினார்கள். மூக்கில் குழாய் போனதால் பேச்சும் தடைப்பட்டது.

`ஜெயலலிதா இறந்துவிட்டார்' என்று அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். ‘மூச்சை நல்லா இழுத்து விடுங்க...’ என மருத்துவர் சொன்னபோது, ‘மூச்சை இழுத்து விட்டுடக் கூடாதுன்னுதான் இங்கே வந்திருக்கேன்’ என்று தன் பாணியில் கமென்ட் அடித்தார். அதன் பிறகு தான் பேசும், யோசிக்கும், வெளிப்படுத்தும் தன்மை மெள்ளக் குறைந்துள்ளது.

இரண்டாவது முறை மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டபோது இருந்த நிலைமையே வேறு. அவரது நெஞ்சில் சளி கடுமையாக அடைத்துக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, காவேரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பனி நேரம் என்பதாலும், சளி அதிகமாக அடைத்ததாலும் ஏற்பட்ட மூச்சுத்திணறல் அது. உடனடியாக நெஞ்சு சளி நீக்கப்பட்டது. மூச்சு விடுதல் இயல்பானது. ஒரு வாரக் காலத்துக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்.

மருத்துவமனையில், ராகுல் காந்தியைத் தவிர வேறு எவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. “சார்... சார்...” என்று அழைத்துப்பார்த்தார். கருணாநிதியால், ராகுலை உணர முடியவில்லை. கோபாலபுரம் வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகும் கருணாநிதியைப் பார்க்க எவரும் அனுமதிக்கப்பட வில்லை. ஸ்டாலின் செயல் தலைவர் ஆக்கப்பட்டபோது (ஜனவரி-4) க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோர் வந்திருந்தனர். புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது.

மற்றபடி செல்வி, ஸ்டாலின், தமிழரசு, ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் மட்டுமே கருணாநிதியைப் பார்க்க தின அனுமதி உள்ளவர்கள். பொங்கல் தினத்தன்று வைரமுத்து, சண்முகநாதன், ராஜமாணிக்கம் ஆகியோர் கருணாநிதியைப் பார்த்தனர். மற்றபடி மருத்துவர்கள், ஆண் மருத்துவப் பணியாளர்கள் ஆறு பேர் கருணாநிதியைக் கவனித்துக் கொள்கிறார்கள். நிழலாக இருந்த உதவியாளர் நித்யாவுக்குக்கூட இப்போது அதிக வேலை இல்லை.

தி.மு.க தலைமைக்கழகச் செயலாளர்கள் கு.க.செல்வம், தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் ஆ.த.சதாசிவம், பூச்சிமுருகன் ஆகிய மூவரில் ஒருவர் கோபாலபுரம் வீட்டில் காலையும் மதியமும் இருக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக இவர்களுக்கு இந்தப் பணி தரப்பட்டுள்ளது.

இரவில் மட்டும் அல்ல, பகலிலும் தூங்கியபடியே இருக்கிறார் கருணாநிதி. குழாய் மூலமாகவே திரவ உணவு செலுத்தப்படுகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து ஊட்டச்சத்து மருந்தைக் கொடுக்கிறார்கள். சரியான திடஉணவு எடுக்காததால், உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. முகச்சவரம் செய்யப்படாததால், தாடி வளர்ந்துள்ளது. கறுப்புக் கண்ணாடியை அணிவிப்பது இல்லை. மருத்துவமனைக்கு இரண்டாவது முறை அழைத்துச் செல்லும்போதே மோதிரத்தைக் கழற்றிவிட்டார்கள்.

‘தலைவர் நன்றாக இருக்கிறார்’ என்பது மாதிரியான பொய்யான தகவல் பரப்பப்படுவதை ஸ்டாலின் விரும்பவில்லை. அதனால்தான் அவர் பெயரில் அறிக்கை வெளியிடுவதை ஸ்டாலின் நிறுத்தச் சொன்னார். இந்தப் பொங்கல் தினத்தன்று, கருணாநிதி பெயரில் வாழ்த்து அறிக்கை வெளிவரவில்லை. பொங்கல் அன்று கருணாநிதியைப் பார்த்து ஆசி பெற்று அவர் தரும் பத்து ரூபாயை வாங்கி பத்திரப்படுத்தும் வழக்கம் பலருக்கும் உண்டு. இந்த முறை அவரைப் பார்க்கவும் யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மாடிக்குச் சென்று கருணாநிதியைப் பார்த்துவிட்டு வர, இந்தத் தகவல் ஸ்டாலினுக்குப் போய், `‘இப்படி ஒவ்வொருத்தராப் போனா `என்னைய விடலை... உன்னைய விடலை'னு பிரச்னை வரும்’' எனக் கோபப்பட்டுள்ளார்.

‘`கொஞ்சம் இடம் மாறுதலுக்காக சி.ஐ.டி காலனி வீட்டில் கொண்டுபோய் வைத்துக்கொள்கிறோம்'' என்று ராசாத்தி அம்மாள் சொன்னதையும் ஸ்டாலின் ஏற்கவில்லை. ‘தலைவர் இங்கே இருப்பதுதான் நல்லது. நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம், போகலாம். இங்கேயே வேணும்னாலும் இருங்க!' என்று ராசாத்தி அம்மாளுக்குத் தகவல் அனுப்பினாராம் ஸ்டாலின். ‘`கோபாலபுரம் வீட்டுல இருந்தாத்தான் எல்லாரும் வந்து பார்க்க வசதியா இருக்கும்” என்று கனிமொழியும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினுடன் வரும் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, பி.கே.சேகர்பாபு போன்றோர் கீழேயே உட்கார்ந்துவிடுகிறார்கள். ஸ்டாலின் மட்டுமே மேலே சென்று பார்க்கிறார். கட்சி முன்னணியினர் அனைவரும் காலையும் மாலையும் இங்கே வந்து ஒரு மணி நேரம் உட்கார்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கருணாநிதிக்கு 93 வயது ஆகிறது. சர்க்கரைச் சத்து, ரத்த அழுத்தம் என நிரந்தர நோய்கள் இல்லை. வயிறு செரிமானப் பிரச்னை உண்டு. கால் மூட்டுவலி எப்போதும் உண்டு. மற்றபடி இன்றைய நினைவிழப்பு, உணர்வுக் குறைவு, பேச்சு எழாமை அனைத்துமே வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டவை. இதை மீட்டெடுப்பது சிரமம் என்றே சொல்கிறார்கள். அதற்கான சிகிச்சைகள், மருந்துகள்தான் அவருக்குத் தரப்படுகின்றன.

கட்சிக்குள் தான் தனிமைப்படுத்தப்பட்டதும், கட்சி முன்னணியினர்கூட தன்னை வந்து சந்திப்பதைத் தவிர்த்ததும், தனது குரலுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பு இல்லாமல் போனதுமான மனத்துயரங்களே கருணாநிதியை இந்த நிலைமைக்கு மிக வேகமாக நகர்த்தியுள்ளன. ஒருகாலத்தில் இந்த மாதிரி பிரச்னைகளை துணிந்து எதிர்கொண்டார். ‘பிரச்னை இல்லைன்னா செத்திருவேன்யா’ எனச் சொன்னவரும் அவர்தான். ஆனால் முதுமை, பிரச்னைகளை ரசிக்கவைக்காது; கசக்கவேவைக்கும். ‘`நான் வளர்த்த கட்சியிலா இப்படி நடக்கிறது? நான் பெத்த பிள்ளைகளா இப்படி மோதிக்கொள்கிறார்கள்?” என்று துன்பத் துயரங்கள் முதுமை என்னும் முதுகில் உட்காரும்போது கருணாநிதியாலேயே தாங்க முடியவில்லை.

``பழைய கருணாநிதியாக இன்று அவர் செயல்பட முடியுமானால், `பன்னீர்செல்வத்தின் பாசிச ஆட்சியைப் பாரீர்!' என முழங்கியிருப்பார். கடற்கரையிலும் அவரது முகம் பார்த்திருக்கலாம்; நடுக்குப்பத்திலும் அவரது நடையைப் பார்த்திருக்கலாம். 1965-ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் பங்கெடுத்ததாகப் பலரும் கைதானார்கள். ஆனால், மாணவர் போராட்டதைத் தூண்டியவர் என்று பக்தவத்சலம் ஆட்சியால் கைதானவர் கருணாநிதி. பாளையங்கோட்டைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். `என் தம்பி கருணாநிதி சிறையில் இருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை, கழகத்தவர் யாத்திரை செல்லத்தக்க புண்ணியத்தலம்' என்று அண்ணா சொன்னது அப்போதுதான். ஆட்சிக்கு வந்ததும் உள்துறையைக் கேட்டு கருணாநிதியிடம் அதைத் தர மறுத்தார் அண்ணா. அந்த அளவுக்கு வேகமாக இருந்தார் கருணாநிதி.

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதை எதிர்த்து தீர்மானம் போட்டதும், ஈழத்தமிழர் பிரச்னைக்காகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததும், `மிசாவைக் காட்டி மிரட்டினால், தமிழ்நாட்டுக்குள் வர விசா வாங்கவேண்டி வரும்' எனப் பேசியதும், இந்திய அரசியலைமைப்புச் சட்ட நகலைக் கொளுத்தியதும், `ஈழத்தமிழனைக் கொன்ற ராணுவத்தை வரவேற்கப் போக மாட்டேன்' என்றதும் கருணாநிதியின் கடந்தகாலப் பக்கங்கள்.

பிரச்னைகளைக் கவனித்தால், அவற்றில் தனது எதிர்வினையை எப்படியும் காட்டியாக வேண்டும் எனத் துடிப்பார். அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைப்பார்.

கடந்த ஆண்டு வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது, மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனை அழைத்து, `உடனே கோட்டூர்புரம் பாலத்தைப் பார்க்க வேண்டும். சைதாப்பேட்டைக்குப் போக வேண்டும்' என்றார் அவர். ஊரே மிதக்கும்போது அவரால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியாது. ஒருவிதமான பதற்றம் அவருக்குத் தொற்றிக்கொள்ளும். ஜெயலலிதா மரணம், பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை, மாணவர் போராட்டங்கள், போலீஸின் வெறியாட்டம் போன்றவற்றை நேருக்குநேர் எதிர்கொள்ள பழைய கருணாநிதி போன்ற தலைமை, எந்தக் கட்சியிலும் இல்லை. இங்கே வெறும் அறிக்கை அதிபதிகள் கையில் கட்சிகள் போய்விட்டன.

`எங்களுக்கு என்ன செய்வது எனத் தெரியாத சூழ்நிலை இருக்கும். ஆனால், கலைஞர்தான் ஏதோ ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பார். அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்' என ரஜினியிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருநாவுக்கரசர் சொன்னார். ஏனென்றால், கருணாநிதி மட்டும்தான் 24X7 அரசியல்வாதியாக இருந்தார்.

கருணாநிதி மிகவும் திடமான சிந்தனையுடன் கடைசியாகப் பேசியது எப்போது என விசாரித்தபோது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர், ‘மூணு தொகுதிகள்லயும் நாம ஜெயிச்சுடுவோம் தலைவரே!' என்றாராம். அப்போது கருணாநிதி, ‘இப்படித்தான் சட்டமன்றத் தேர்தல்லயும் சொல்லி ஏமாத்துனீங்க. இப்ப இதைச் சொல்லி ஏமாத்துறீங்களா?' என்றாராம். அப்போது அவர் குரல், கோபாலபுரம் முதல் மாடியில் பட்டு எதிரொலித்ததாம். இதன் பிறகு கருணாநிதியின் உணர்ச்சிமயமான குரல் வெளிவரவில்லை.

குரல் வெளிவராவிட்டாலும் தினமும் இரண்டு மணி நேரம் அவரது உடல் உற்சாகம் அடைகிறது. காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் அவரை சூரிய வெளிச்சத்தில் உட்காரவைக்கிறார்கள். அறுபது ஆண்டு காலமாக, ‘வாக்களிப்பீர் உதயசூரியன்’ என்று எந்தச் சின்னத்துக்கு அந்தக் குரல் வாக்குக் கேட்டதோ, அந்த உதயசூரியன் கைமாறு காட்டுகிறது.

சூரியனோடு நடக்கிறது பேச்சு... ஆதவனிடம் இருக்கிறது ஆக்ஸிஜன்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024