பரப்பன அக்ரஹாரா சிறையின் ஒரே அறையில் சசிகலா, இளவரசி அடைப்பு!
பெங்களூர்: சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் ஒரே அறையை பகிர்ந்து கொள்ள பெங்களூர் நீதிமன்றம் அனுமதித்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரின் அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் கைதிகளுக்கு வரிசை எண் வழங்கப்படுவது வழக்கம். சசிகலாவுக்கு 10711 என்ற எண்ணும், இளவரசிக்கு, 10712 என்ற எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிறையில் தனக்கு வி.ஐ.பிகளுக்கு ஒதுக்கப்படும், ஏ.சி அறை வேண்டும் என சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். சசிகலா தன்னுடன், இளவரசியையும் சேர்த்து அடைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்ததை மட்டும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
அதேநேரம் இதில் இன்னொரு கைதியும் கூட சேர்த்து அடைக்கப்படுவார். மொத்தம் மூன்று பேர் இந்த சிறை அறையில் ஒன்றாக இருக்க வேண்டிவரும்.
சர்க்கரை நோயாளி என்பதால் மெத்தை வழங்க சசிகலா கோரிக்கை விடுத்ததை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதேபோல சுடு தண்ணீர், மேற்கத்திய ஸ்டைல் டாய்லெட் ஆகிய வசதிகளை வழங்க நீதிபதி சம்மதித்தார். தங்கள் அறைக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்க வேண்டும் என்று சசிகலா கோரியதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
source: oneindia.com
No comments:
Post a Comment