சசிகலாவுக்கு மரண அடி... இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க முடியாது- தேர்தல் ஆணையம் பொளேர்
டெல்லி: அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது; பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தது செல்லாது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தால்மட்டுமே ஒருவர் பொதுச்செயலராக முடியும்.
1972-ம் ஆண்டு எம்ஜிஆர், திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் அல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுமே பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என கட்சி விதியை உருவாக்கினார்.
அதேபோல் அதிமுக விதிகளின்படி தற்காலிக பொதுச்செயலர் அல்லது இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்கவும் முடியாது. இதனை முன்வைத்து தேர்தல் ஆணையத்திடம் சசிகலா நியமனத்துக்கு எதிராக சசிகலா புஷ்பா எம்.பி புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரில், 2011-ம் ஆண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா நடராஜன் நீக்கப்பட்டார்; அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து சசிகலாவை மன்னித்து ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். ஆனால் அதிமுகவில் அவர் இணைந்தாரா என்பது தெரியவில்லை. அதிமுக விதிகளின் படி ஒருவர் 5 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக இருந்தால் மட்டுமே கட்சி பதவிகளுக்கு வர முடியும். இதன்படி சசிகலாவால் அதிமுக பொதுச்செயலராக முடியாது; அவரது நியமனத்தை ஏற்கக் கூடாது என கூறப்பட்டிருந்தது.
இப்புகாரின் அடிப்படையில் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் அதிமுகவின் சட்டவிதிகளில் உரிய திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியும்; அப்படி செய்யாமல் பொதுச்செயலர் ஒருவரை அதிமுகவில் நியமிக்க முடியாது என தீர்மானித்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக சசிகலா நீடிக்க முடியாது என தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
No comments:
Post a Comment