DDக்கு பொதிகைன்னு பேர் வந்தது எப்படினு தெரியுமா? #Nostolgic
VIKATAN
புதிதுபுதிதாக எத்தனையோ ‘டெக்கி’யான டிவி-க்களும், சேனல்களுமாக விஷூவல் மீடியா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனால் 70-களின் இறுதியில் பிறந்தவர்கள் தொலைக்காட்சியை அபூர்வமாகப் பார்த்தார்கள். அன்றைய காலத்தில் ரேடியோ மட்டுமே பழகியிருந்தவர்களுக்கு புதுவரவாக ஆச்சர்யமூட்டியது தொலைக்காட்சி. கிராமத்துக்கு ஒருவரின் வீட்டில் மட்டுமே டிவியைப் பார்க்கமுடியும். டிவியை மரப்பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அந்த நாள்களில் நமக்கு பரிச்சயமானது தூர்தர்ஷன் மட்டுமே. அதில் வந்த சில நிகழ்ச்சிகளை நினைவு நாடாக்களுக்குள் இழுத்துவந்தால் என்றும் கோல்டன் மெமரீஸ்தான்.
ஒலியும் ஒளியும்:
தூர்தர்ஷன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ‘ஒலியும் ஒளியும்’தான். திரைப்பாடல்களைக் கேட்பது மட்டுமே வழக்கமாக இருந்த கட்டத்தில், அதை வீடியோவாகப் பார்ப்பது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 முதல் 9.00 மணி வரையிலும் புதுப்பட பாடல்கள் ஒளிபரப்பப்படும். அன்றைய தினங்களில் இருந்த உச்சபட்சப் பொழுதுபோக்கு ‘ஒலியும் ஒளியும்’ மட்டுமே. அந்த அரைமணி நேரத்திற்காக ஒவ்வொரு வாரமும் மக்களைக் காத்திருக்கவைத்தது. இன்றுமே நினைத்தால் சிலிர்ப்பூட்டும் அனுபவம். அதன்பிறகு ஞாயிறுகளில் ஒரு தமிழ்படமும் ஒளிபரப்பாகும். சினிமாவை மக்களுடன் ஒன்றிணைத்தது இவை இரண்டும் தான்.
வயலும் வாழ்வும்:
எம்.எஸ்.விஸ்வநாதன் குரலில், “தாய் நிலம் வரம் தாவரம், அது தழைக்க தழைக்க மகிழ்வார்கள் யாவரும்” என்று டைட்டில் பாடலுடன் தொடங்கும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சி. அந்தப் பாடலும், பாடலுக்கான கருத்தாக நிகழ்ச்சியும் செம ஃபேமஸ். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திற்காக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி. விவசாயம் சார்ந்த கேள்விகள், சொட்டு நீர் பாசனம், மண்புழு உரம், அறுவடை என பல செய்திகளை விவசாயிகளுக்குச் சொல்லிச்சென்ற நிகழ்ச்சி. கிராமம்தோறும் இந்நிகழ்ச்சிக்கு அத்தனை வரவேற்பு இருந்தது. ஆனால் இன்றைக்கு ‘வயலும் வாழ்வும்’ என்பது கிண்டலுக்கான பதமாக, போரடிக்கிற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடப் பயன்படுத்துவது எவ்வளவு வேதனை தரும் விஷயம். இந்த நிகழ்ச்சியைக் கிண்டல் செய்துவிட்டு, விவசாயம் வளரவேண்டும் என்று ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருக்கிறோம்!
மகாபாரதம்: (இன்னும் சில டப்பிங் தொடர்களும்)
சோப்ராவின் ‘மகாபாரதம்’ தொடர் செம ஹிட்டானதற்குக் காரணம் வசனங்களே. ஏனெனில் வசனங்களில் ஒட்டுமொத்த புராணக்கதைகளையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார். இந்நிகழ்ச்சி தவிர, ‘சந்திர காந்தா’, ‘திப்பு சுல்தான்’, ‘சித்ரகார்’, ‘ஜானு’ என ஒவ்வொரு தொடரையும் விடாமல் பார்த்த காலம் அது. அதுமட்டுமின்றி ‘ரயில்சிநேகம்’, ‘வாழ்க்கைக் கல்வி’ என்று பல நிகழ்ச்சிகளும் பொதிகையில் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.
சக்திமான்:
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ இவர் தான். நிஜத்தில் சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு அசடு வழியும் போட்டோகிராஃபர் கங்காதரன், சூரியனின் சக்தி பெற்ற சக்திமானாக தீமைகளை அழிப்பார். இரண்டு வேடங்களுக்குமான நடிப்பு, ஒவ்வொரு எபிசோடிலும் எதிரிகளை துவம்சம் பண்ணுவது என்று குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோ. இப்பொழுது இளைஞர்களாக இருக்கும் பலருக்கும் சக்திமான் ஹீரோ தான்.
எதிரொலி:
பொதுவாக நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சியைப் பற்றிக் கடிதம் எழுதுவது அன்றிலிருந்தே இருக்கிறது. ஆனால் நேயர்களின் அன்பையும், கோபத்தையும், வசையையும் அப்படியே நிகழ்ச்சியில் சொல்லி, அதற்கான காரணமும், மன்னிப்பையும் நிகழ்ச்சியாக்கி பெரிய ஹிட்டானது எதிரொலி நிகழ்ச்சிதான். குறிப்பாக டிடி5-க்கான தமிழ் சேனலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நேயர்களிடம் கேட்டபோது, நேயர்களில் ஒருவர் சொன்ன பெயர்தான் ‘பொதிகை’. நேயர்களின் கேள்வி, அதற்கு நிலைய இயக்குநரின் பதில் என்று செம ஜாலியாகவும், அதே சமயம் நேயர்களின் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமைந்த நிகழ்ச்சி இது.
டிடி இருந்த நேரத்தில் ஒவ்வொரு மொழிக்கும் ஏற்றது போல ஒரே சேனலில் நிகழ்ச்சியைப் பிரித்து வழங்கியிருக்கும் அரசு. அதில் அன்றைய இந்திய ஒருமைப்பாட்டையே கவனித்திருக்க முடியும். இன்று எத்தனையோ டெக்னாலஜி வளர்ச்சிகளோடு புதுப்புது சேனல்கள் உருவாகிவிட்டன. அதனாலேயே பொதிகையாக மாறியிருக்கும் டிடியை மறந்துவிட்டோம். சேனல் மாற்றும்போதுகூட ஸ்கிப் ஆகிவிடும். இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஒருநிமிடம் உங்கள் கேபிளில் பொதிகை சேனல் எந்த எண்ணில் இருக்கிறது என்று சொல்லமுடியுமா? இதுதான் காலமாற்றம்! ஆனால், அந்த நினைவுகளை மட்டும் மறக்கமுடியாது.
லவ் யூ தூர்தஷன்!
No comments:
Post a Comment