பேச்சுலர்களின் கொலப்பசியைத் தீர்க்கும் ஃபுட் டெலிவரி ஆப்ஸ்! #AppReview
வீட்டைவிட்டு தனியாகத் தங்கியிருக்கும் பேச்சுலர்களின் பசியைத் தீர்ப்பது பெரும்பாலும் அவர்களின் ஏரியாவில் இருக்கும் மெஸ்தான். ஆனால் தினசரி ஒரே இடத்தில் உண்பதால், சிலருக்கு மெஸ் மற்றும் ஹோட்டல்களின் உணவு சலித்திருக்கும். அதேசமயம் இதற்காக, அடிக்கடி பைக் எடுத்துக்கொண்டு விதவிதமான ரெஸ்டாரன்ட்களுக்கும் செல்ல முடியாது. இதுபோன்ற 'டெலிகேட்' பொசிஷன்களில்தான் மொபைல் உங்களுக்குக் கைகொடுக்கிறது. என்ன உணவு, எந்த ரெஸ்டாரன்ட் என நமக்குத் தேவையானவற்றை நாம் முடிவு செய்துவிட்டால் போதும். நம் கதவைத் தட்டி, உணவை டெலிவரி செய்கின்றன ஃபுட் டெலிவரி ஆப்ஸ். அப்படி உங்களுக்கு உதவக் கூடிய சில ஃபுட் டெலிவரி ஆப்ஸ்கள் பற்றிய அறிமுகங்கள் இங்கே...
லிட்டில் (Little) :
மற்ற ஃபுட் ஆப்களில் இருந்து லிட்டில் முற்றிலும் வேறுபட்டது இது. மற்றவை அனைத்தும் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவை,டெலிவரி செய்யும் ஆப்கள். ஆனால் இந்த ஆப்பில் நீங்கள் உணவை ஆர்டர் செய்துவிட்டு, பணம் செலுத்திவிட்டு நீங்களே நேரில் சென்றுதான் வாங்க வேண்டும். ஆனால் உங்களை ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு இதில் கொட்டிக்கிடக்கின்றன ஆஃபர்கள். உங்களுக்கு அருகிலேயே இருக்கும் உணவகங்களில் நீங்கள் இந்த ஆப் மூலம் ஆர்டர் செய்துவிட்டு, பின்னர் அந்த உணவகத்திற்கு நேரில் சென்று நீங்கள் பணம் செலுத்தியதற்கான Code-ஐக் காட்டிவிட்டு உணவை வாங்கிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி 150 ரூபாய் என்றால், இதில் 99 ரூபாய்க்கு கிடைக்கிறது. பீட்சா 100 ரூபாய் என்றால் 55 ரூபாய்க்கு கிடைக்கிறது. உணவு மட்டுமன்றி சலூன், ஸ்பா, ஹோட்டல்கள் போன்றவையும் இந்த ஆப்பில் கிடைக்கின்றன. இதில் இருக்கும் ஒரே சிக்கல் நீங்கள் பேடிஎம் மூலமாகத்தான் பணம் செலுத்த முடியும். பேடிஎம் மூலம் டெபிட்கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் ஆப்பை இன்ஸ்டால் செய்து திறக்கும் போதே, உங்களுடைய மொபைல் எண் மூலம் உங்களுக்கான பேடிஎம் கணக்கைத் துவக்கிவிடுகிறது அல்லது ஏற்கெனவே இருக்கும் உங்கள் பேடிஎம் கணக்குடன் இணைத்துவிடுகிறது. பெரிய ட்ரீட்டைக் கூட சிக்கனமாக கம்மி பட்ஜெட்டில் முடிக்க நினைப்பவர்களுக்கு இந்த ஆப் நல்ல சாய்ஸ்.
ஆப் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.little.nvy&hl=en
ஸ்விக்கி (swiggy) :
ஃபுட் டெலிவரி விஷயத்தில் கொஞ்சம் பிரபலமான ஆப் இந்த ஸ்விக்கி. உங்களுக்குத் தேவையான கியூசின், டிஷ், ரெஸ்டாரென்ட் என பக்காவாகத் தேர்வு செய்து, ஆர்டர் செய்ய உதவுகிறது இந்த ஆப். இதில் லாகின் செய்ய உங்கள் மொபைல் எண் மட்டுமே போதும். அதேபோல இந்த ஆப்பின் மற்றொரு ஸ்பெஷல் மினிமம் ஆர்டர் லிமிட் என எந்த வரையறையும் இல்லை. எனவே குறைந்தது இந்த அளவிற்காவது ஆர்டர் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்களுக்கு விருப்பமான உணவுகளை வெறும் 5 நிமிடத்திற்குள் ஆர்டர் செய்துவிடும் அளவிற்கு இருக்கிறது ஆப் டிசைன். உங்கள் ஆர்டர் எடுக்கப்பட்டுவிட்டால், இந்த ஆப்பிலேயே மேப்ஸ் மூலம் டிராக் செய்ய முடியும். ஃப்ளிப்கார்ட், அமேசான் தளத்தில் பொருட்களைத் தேர்வு செய்வதுபோல உணவு வகைகளின் போட்டோவைப் பார்த்தே, நீங்கள் டிக் அடிக்கலாம். உணவின் விலையோடு சேர்த்து சேவை வரி, வாட் வரி, பேக்கேஜிங் மற்றும் டெலிவரி சார்ஜ் ஆகியவை கூடுதல் செலவு. நிறைய உணவகங்கள், உணவு வகைகள், அனைத்து வகையான பேமன்ட் ஆப்ஷன்கள் என மொத்தத்தில் கம்ப்ளீட் ஃபுட் டெலிவரி ஆப்பாக இருக்கிறது ஸ்விக்கி.
ஆப் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=in.swiggy.android&hl=en
ஃபுட் பாண்டா (Foodpanda) :
ஸ்விக்கி போன்றே, ஃபுட் பாண்டா ஆப்பிலும் ரெஸ்டாரன்ட், கியூசின், ஸ்பெஷல் டிஷ் என அனைத்தையும் தேடலாம். ஆனால் நல்ல இணைய வேகம் இருக்கும்போது கூட, பிராஸசிங் வேகம் குறைவாகவே இருக்கிறது. ஆப்பில் ஒவ்வொரு க்ளிக்கிற்கும் சில நொடிகள் எடுத்துக்கொள்கிறது. குறைந்தது இதில் 200 ரூபாய்க்காவது ஆர்டர் செய்தால்தான் உங்களால் ஆர்டரை பிளேஸ் செய்ய முடியும். அதே சமயம் டெலிவரி சார்ஜ் பெரும்பாலும் இல்லை. வாட் வரி மட்டும் இருக்கிறது. ஒவ்வொரு ரெஸ்டாரன்ட்டிலும் ஆர்டர் செய்யும்போதும், இதற்கு முன்பு ஆர்டர் செய்தவர்களின் ரெவ்யூக்களைப் பார்க்க முடியும் என்பதால், மோசமான ஹோட்டல்களைத் தவிர்க்க முடியும். ஒவ்வொரு ரெஸ்டாரன்ட்களிலும் கிடைக்கும் அன்றைய சலுகை விவரங்களை 'டீல்ஸ்' பகுதியில் சென்று பார்க்கமுடியும். ஃபுட் பாண்டா ஓகே சொல்லக்கூடிய ஆப்தான் என்றாலும், யூசர்களின் குட்புக்கில் இடம்பிடிக்க இன்னும் நிறைய விஷயங்கள் தேவை.
ஆப் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.global.foodpanda.android&hl=en
சொமேட்டோ ஃபுட் ஆர்டரிங் (Zomato Food Ordering) :
உங்களுடைய ஃபேஸ்புக் அக்கவுன்ட் அல்லது கூகுள் ஐ.டி மூலம் இணைத்துவிட்டால் போதும். உங்கள் சொமேட்டோ அக்கவுன்ட் ரெடி. மிக எளிதாக உங்கள் உணவை ஆர்டர் செய்வதற்கு ஏற்றாற்படி இருக்கிறது ஆப் ஸ்டைல் மற்றும் டிசைன். உங்களுக்குத் தெரிந்த ரெஸ்டாரன்ட் பெயர்களை அல்லது உணவின் பெயரை நீங்களே சர்ச் ஆப்ஷன் மூலம் தேடிக் கொள்ளலாம். உதாரணமாக தோசை என டைப் செய்தால், தோசை கிடைக்கும் அத்தனை உணவகங்களின் பெயரும் உங்களுக்கு காட்டப்படும். ஸ்பெஷலான டிஷ்களைத் தேட இந்த ஆப்ஷன் பயன்படும். ஹோட்டல்களின் பெயர்களை வரிசையாகக் காட்டும் போதே, அதன் ரேட்டிங், மினிமம் ஆர்டர் தொகை, அங்கே கிடைக்கும் ஆஃபர்கள் என அனைத்து விவரங்களையும் காட்டிவிடுகிறது. மினிமம் ஆரடரிங் தொகை, உணவகங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. உணவகங்களைப் பொறுத்தே இதிலும் பேக்கேஜிங் சார்ஜ், வாட் வரி, டெலிவரி சார்ஜ் ஆகியவை வசூலிக்கப்படுகின்றன. எளிதாக ஆர்டர் செய்ய பயனுள்ள ஆப் இந்த சொமேட்டோ ஃபுட் ஆர்டரிங்.
ஆப் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.application.zomato.ordering&hl=en
- ஞா.சுதாகர்.
No comments:
Post a Comment