ஓய்வூதியத்தில் மனிதாபிமானம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: 'முழு நேர பணியாளராக 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடம் உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடுவை சேர்ந்தவர் லட்சுமணன். அரசுப் பள்ளியில் 1992 ல் பகுதி நேர துப்புரவுப் பணியாளராக சேர்ந்தார். 2012 பிப்.,2 ல் பணிவரன்முறை செய்யப்பட்டார். 2012 ஜூன் 30ல் பணி ஓய்வு பெற்றார். ஓய்வூதியம், பணப்பலன்கள் வழங்கக்கோரி லட்சுமணன் அளித்த மனுவை, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் நிராகரித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லட்சுமணன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர், ''தமிழ்நாடு ஓய்வூதியச் சட்டப்படி, 10 ஆண்டுகள் முழு நேரப் பணியாளராக பணிபுரிந்திருக்க வேண்டும். அதை மனுதாரர் பூர்த்தி செய்யவில்லை. ஓய்வூதியம் பெற மனுதாரருக்கு தகுதியில்லை,'' என்றார்.
நீதிபதி உத்தரவு: தமிழ்நாடு ஓய்வூதிய சட்டம் என்பது, பணியாளர்கள் ஓய்விற்கு பின் பணப் பலன்களை அனுபவிக்க வேண்டும்; சிரமப்படக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. '10 ஆண்டுகள் முழு நேர பணியை பூர்த்தி செய்ய வேண்டும்' என விதிகளில் உள்ளது. அதன்படி பார்த்தால், மனுதாரர்கள் போன்ற துப்புரவுப் பணியாளர்கள் பயனடைய முடியாது. இப்பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். மனுதாரருக்கு ஓய்வூதியம் மறுத்த உத்தரவை ரத்து செய்கிறேன். பகுதி நேரமாக பணி செய்த காலத்தின் 50 சதவீதத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம் உட்பட பணப் பலன்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment