Thursday, September 14, 2017

தலையங்கம்

தமிழ்நாட்டில் ‘நவோதயா’ பள்ளிக்கூடங்கள்



1986–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் முட்டி மோதிக்கொண்டு, நவோதயா பள்ளிக்கூடங்கள் திறக்காத ஒரு நிலைக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இப்போது ஒரு விடையை அளித்துள்ளது.

செப்டம்பர் 14 2017, 03:00 AM
1986–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் முட்டி மோதிக்கொண்டு, நவோதயா பள்ளிக்கூடங்கள் திறக்காத ஒரு நிலைக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இப்போது ஒரு விடையை அளித்துள்ளது. அப்போதைய புதிய கல்விக் கொள்கையில் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசாங் கத்தின் உதவியுடன், மாவட்டத்திற்கு ஒரு ஜவகர் நவோதயா பள்ளிக்கூடம் தொடங்கப்படவேண்டும். இந்த பள்ளிக் கூடங்கள் உண்டு, உறைவிடப் பள்ளிக்கூடங்களாக இருக்கும். ஆண், பெண் இருபாலாரும் கல்வி கற்கக்கூடிய இந்த பள்ளிக்கூடங்களில், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை கல்வி கற்றுக்கொடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு தவிர,

75 சதவீதம் இடஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும். முழுக்க முழுக்க இலவசமான இந்த பள்ளிக்கூடங்களில் 9 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த கல்விவசதி, விடுதி வசதிக்காக மாதம் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த நவோதயா பள்ளிக் கூடங்கள் தொடங்க மாவட்டந்தோறும் மாநில அரசுகள் 30 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும். மத்திய அரசாங்கம்

3 ஆண்டுகளுக்குள் ரூ.20 கோடி வழங்கி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி கல்வி கற்றுக் கொடுக்கப்படும். இந்த பள்ளிக்கூடங்களில் மும்மொழி பாடத்திட்டம் அடிப்படையில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தமிழக அரசு இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதால், தொடக்கம் முதலே நவோதயா பள்ளிக் கூடங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட அனுமதிக்க வில்லை. இந்தியா முழுவதிலும், தமிழ்நாட்டை தவிர, எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப் பட்டுவிட்டன. இந்தநிலையில், தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படவேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்

கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படவேண்டும். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு 8 வாரத்திற்குள்

முடிவெடுக்கவேண்டும். மத்திய அரசாங்கம் உயர்நீதி மன்றத்திலேயே எழுத்துப்பூர்வமாக இந்த பள்ளிக்கூடங் களில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று உறுதி அளித் திருக்கிறது. 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்புவரை தமிழ் கட்டாய மொழியாக கற்றுக்கொடுக்கப்படும். 11, 12–ம் வகுப்புகளில் விருப்பமொழியாக தமிழ் கற்றுக்கொடுக் கப்படும். உள்கட்டமைப்பு வசதிகளையும் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருக்கிறது. பொதுவாக நவோதயா பள்ளிக்கூடங்களில் உயர்தரகல்வி கற்றுக்கொடுக்கப் படுகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மருத்து வக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள 598 நவோதயா பள்ளிக்கூடங்களில் படித்த 14 ஆயிரத்து 183 பேர் ‘நீட்’ தேர்வு எழுதியநிலையில், 11 ஆயிரத்து 875 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களில் 5 பேர்தான் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டும் பிளஸ்–2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்த நிலையில் கூட 30 பேர்தான் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தி வேண்டாம் என்று ஒருபக்கம் சொன்னாலும், பாரத இந்தி பிரசார சபா நடத்தும் இந்தி படிப்புகளில், தென்மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்குவதில் அரசியலை கலந்துவிடாமல், படிக்கப்போகும் மாணவர்கள், அவர் களை படிக்கவைக்கும் பெற்றோர்களின் கருத்துகளை அறிந்து, இதுபற்றி ஒரு திட்டவட்டமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024