Thursday, September 14, 2017

மாவட்ட செய்திகள்

ஒப்பந்த தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது


ஒப்பந்த தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி மண்டல சுகாதார ஆய்வாளர் மற்றும் அவருடைய உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

செப்டம்பர் 14, 2017, 07:45 AM

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட 18, 19 மற்றும் 20–வது வார்டு சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலன் (வயது 42).

19–வது வார்டு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டு வந்த சரவணன் என்ற தொழிலாளி, ஒழுங்காக வேலை செய்யவில்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் தன்னை மீண்டும் பணியில் சேர்க்கும்படி சுகாதார ஆய்வாளர் பாலனிடம் கோரினார். அதற்கு அவர், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்கிறேன் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சுகாதார ஆய்வாளரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை சரவணனிடம் கொடுத்து அதை சுகாதார ஆய்வாளர் பாலனிடம் லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

அந்த பணத்துடன் மாநகராட்சி வார்டு அலுவலகம் சென்ற சரவணன், அலுவலகத்துக்கு வெளியே நின்றபடி பாலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாலன், தனது உதவியாளர் லட்சுமிபதி(40)யை அனுப்பிவைக்கிறேன். அவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறினார்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளர் பாலனின் உதவியாளர் லட்சுமிபதி வெளியே வந்து சரவணனிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கிச் சென்று பாலனிடம் கொடுத்தார்.

இவற்றை அங்கு மறைந்து நின்று கண்காணித்துக்கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் விஸ்வநாத் ஜெயன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சுகாதார ஆய்வாளர் பாலன் மற்றும் அவரது உதவியாளர் லட்சுமிபதி 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கியதாக கைதான பாலன், சுதந்திர தின விழாவின் போது சென்னை மாநகராட்சியின் சிறந்த சுகாதார ஆய்வாளர் என்ற விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024