Tuesday, September 19, 2017

.தலையங்கம்

சீரமைக்க வேண்டிய ‘அம்மா உணவகம்’


சங்ககால பாடல்களில் புறநானூற்று பாடல்கள் எக்காலத்திலும் பின்பற்றப்பட வேண்டிய பல அரிய கருத்துக்களை கூறியுள்ளன.

செப்டம்பர் 19 2017, 03:00 AM

சங்ககால பாடல்களில் புறநானூற்று பாடல்கள் எக்காலத்திலும் பின்பற்றப்பட வேண்டிய பல அரிய கருத்துக்களை கூறியுள்ளன. அதில், குடபுலவியனார் என்ற சங்ககால புலவர், ‘‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்’’ என்று எழுதியது, அந்தக் காலத்திலிருந்தே எல்லோருக்கும் ஒருபாடமாக விளங்குகிறது. அதாவது, ‘உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்பதுதான் இதன் பொருளாகும். இந்த வழியைப் பின்பற்றித்தான் சென்னை நகர மேயராக சைதை துரைசாமி இருந்தபோது, சென்னை மாநகரில் வாழும் ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவுவிலையில் வழங்குவதற்காக சிற்றுண்டி உணவகங்களை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதலில் மலிவுவிலை உணவகம் என்று தொடங்கப்பட்ட இந்த உணவகம், பின்பு ‘அம்மா உணவகம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதிலும் இயங்கி வருகிறது.

அம்மா உணவகங்களில் இட்லி 1 ரூபாய், பொங்கல் ரூ.5, பலவகை சாதங்கள் மற்றும் மாலை நேரத்தில் 2 சப்பாத்தி, பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கு என ஏழை–எளிய மக்கள் இந்த உணவகங்களில் குறைந்த விலைக்கு சாப்பிடும் இந்தத்திட்டம், தற்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் 400 இடங்களிலும், சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 7 இடங்களிலும், தொடர்ந்து அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தத்திட்டத்தை பிறமாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் வந்து பார்த்து, தங்கள் மாநிலங்களில் தொடங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். ஒருசில மாநிலங்களில் அம்மா உணவகத்தைப்போல உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, ‘அம்மா உணவகம்’ போல, உணவகங்களை அமைத்தால் மக்களின் பேராதரவைப் பெறமுடியும் என்ற நோக்கத்தில் ‘இந்திரா உணவகம்’ என்ற பெயரில் தமிழ்நாட்டைப்போல உணவகங்களை திறந்துள்ளது. காலை டிபன் ரூ.5–க்கும், மதிய உணவும், இரவு உணவும் தலா ரூ.10–க்கும் என ஒரு நாளில் ரூ.25–க்கு நல்ல உணவு வழங்குகிறோம் என்றபெயரில் இந்தத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்திரா உணவக திட்டத்தை தொடங்கிவைத்த ராகுல்காந்தி தன் பேச்சின்போது, ‘இந்திரா உணவகம்’ என்று சொல்ல வந்தவர் ‘அம்மா’ என்று சொல்லிவிட்டு, பிறகு உடனடியாக இந்திரா என்று திருத்திக்கொண்டார் என்றால், அம்மா உணவகத்தின் தாக்கம் எந்தளவிற்கு ராகுல்காந்தி வரை போய்ச்சென்றிருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

அம்மா உணவகத்தை பார்த்து மற்ற மாநிலங்கள் எல்லாம் தரமான உணவுடன், மலிவுவிலையில் உணவு வழங்கவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கும் நேரத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அம்மா உணவகங்கள் யாராலும் கவனிக்கப்படாத குழந்தைபோல, சவலை குழந்தைகளைப்போல ஆகிக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் அம்மா உணவகத்தில் பெரும்கூட்டம் இருக்கும். தரமான உணவு கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது உணவின் தரமும், ருசியும் குறைந்து கொண்டே போவதால், மக்கள் கூட்டம் அலைமோதிய நிலைபோய், அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நின்று சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் கையேந்தி பவன்களில் கூட கொஞ்சம் பணம் கொடுத்தால் பரவாயில்லை தரமான உணவு கிடைக்கிறது என்பதுதான் மக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. எனவே, எந்த நோக்கத்திற்காக அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது என்பதை உணர்ந்து, உள்ளாட்சி அமைப்புகள் அம்மா உணவகங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இந்த உணவகங்களுக்கு செலவழிப்பதற்கு போதுமான நிதி வசதியில்லை என்று உள்ளாட்சி அமைப்புகளின் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இதற்கென தனியாக நிதி ஒதுக்க அரசும் முன்வரவேண்டும். மொத்தத்தில் அம்மா உணவகம் சுவையான உணவை குறைந்தவிலையில் தருகிறது என்ற பெயரை எப்போதும் நிலைநாட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024