Wednesday, September 20, 2017

அச்சமூட்டும் சாலைப் பயணம்!


By சுப. உதயகுமாரன்  |   Published on : 20th September 2017 01:01 AM  |
udayakumar
Ads by Kiosked
கடந்த மாதத்தில் ஒருநாள் இரவு நேரத்தில் நானும் நண்பர்களும் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் பகுதியை நாங்கள் கடந்து சென்றபோது, போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருந்தது. 
மெதுவாக நகர்ந்து அந்த நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதிக்கு வந்தபோது, வேன் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது. சாலையின் நடுவில் உள்ளபகுதியில் ஆங்காங்கே மரணித்தவர்கள், அடிபட்டவர்களின் உடல்கள் கிடத்தப்பட்டிருந்தன.
கவிழ்ந்துகிடந்த வாகனத்திற்குள்ளேயிருந்து உடல்களையும், காயம்பட்டவர்களையும் வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்கள். இருள் கவ்விய அந்தப் பகுதியிலிருந்து எழுந்த மரண ஓலம், அழுகைக் குரல்கள், பீதி, பயங்கரம் - எதிர்கொள்ள முடியாத கொடூரமாக இருந்தது.
அந்தப் பகுதியில் போய்க்கொண்டிருந்த 'ஹைவே பட்ரோல்' வாகனம் ஒன்றை முந்திச்சென்று, வழிமறித்து நாங்கள் நிறுத்தினோம். 
'இந்தப் பகுதியில் ஒரு பெரும் விபத்து நடந்திருக்கிறது, உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டோம். அந்த அதிகாரிகள், 'தெரியும், ஆனால் அது எங்கள் ஆளுகைக்குட்பட்டப் பகுதியல்ல, அந்தப் பகுதிக்கு உரியவர்கள் வருவார்கள்' என்று மிகவும் சாதாரணமாக பதில் சொன்னார்கள்.
அடுத்த நாள் செய்தித்தாளில் அந்த விபத்து குறித்த செய்தி வெளியாகி இருந்தது. அந்த வேனில் பயணித்தவர்கள் அனைவரும் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த பக்தர்கள். 
ஏறத்தாழ 20 பேருடன் அந்த வேன் வந்து கொண்டிருந்ததாகவும், ராமநத்தம் பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காகச் சென்ற சரக்குப் பெட்டக லாரி ஒன்று அங்கு டீசல் இல்லாததால் பின்னோக்கி வந்ததாகவும், அதைக் கடந்து செல்ல முயன்ற வேன் எதிர்பாராதவிதமாக சரக்குப் பெட்டக லாரியின்மீது மோதியதாகவும், அதனால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி வேன் குப்புறக் கவிழ்ந்ததாகவும் அறிந்தோம்.
ஒரு நடுத்தர வயது தம்பதி நிகழ்விடத்திலேயே மரணமடைந்தனர். பலத்த காயமடைந்த பதினெட்டு பேர் பெரம்பலூர் மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே இரண்டு வயதுக் குழந்தை உட்பட மூன்று பேர் இறந்தனர். எஞ்சியுள்ள பதினைந்து பேரில் ஏழு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களின் தற்போதைய நிலைமை நமக்குத் தெரியாது. இவர்களுக்கு என்னென்ன காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன? அவை இவர்களின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் பாதிக்கப் போகின்றன? இவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படிப்பட்டதாக இருக்கும்? 
இவை போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரியாது. இவற்றையெல்லாம் அடிபட்டவர்களின் சொந்தப் பிரச்சினைகளாகவே நமது சமூகம் பார்க்கிறது.
நாகர்கோவில் - சென்னை சாலையில் ஒவ்வொருமுறை பயணம் செய்யும்போதும், இப்படிப்பட்ட விபத்துகளைத் தொடர்ந்து காண வேண்டியிருக்கிறது. இதுபோன்ற விபத்துகளுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை என்பது தெரிந்ததுதான். இருந்தாலும், இவற்றைக் குறைப்பதற்குக்கூட எவரும் முயற்சி செய்வதில்லை.
சாலைப் பாதுகாப்பு பிரச்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து (ஆர்.டி.ஓ.) தொடங்குகிறது. நாடு முழுக்க தலைவிரித்தாடும் லஞ்சமும், ஊழலும் நடுநாயகமாக வீற்றிருக்கும் அலுவலகங்களில் இது மிக முக்கியமான ஒன்று. சில அலுவலகங்களில் வாகனங்களை ஓட்டத் தெரியாமலே ஓட்டுநர் உரிமம் வாங்க முடியும் என்கிறார்கள். தகுதியில்லா வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வாங்க முடியும் என்பது தெரிந்ததே.
இதனால் நம் நாட்டு ஓட்டுனர்களுக்கு நான்கு வழிச்சாலையில் வேகப் பாதை எது, மெதுவானப் பாதை எது என்கிற விபரமோ, வலது புறமிருக்கும் வேகப் பாதையில் நுழைந்து, முன்னே சென்று கொண்டிருக்கும் வாகனத்தைக் கடந்து, மீண்டும் இடதுபுறமிருக்கும் மெதுவானப் பாதைக்கு வந்துவிட வேண்டும் என்கிற அடிப்படை விதியோகூடத் தெரிவதில்லை.
இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும்கூட வேகப் பாதையில் பயணம் செய்வதைப் பார்க்கலாம். பல நேரங்களில் இரண்டு லாரிகள் இரண்டு பாதைகளையும் அடைத்துக்கொண்டு சாவகாசமாகச் செல்வதை நம் ஊர் சாலைகளில் மட்டும்தான் பார்க்க முடியும்.
ஒரு வாகனம் பழுதுபட்டுவிட்டால், அதை அங்கேயே அப்படியே நிறுத்துவது நம் நாட்டில் நடக்கும் இன்னொரு வினோதமான செயல். நெடுஞ்சாலையின் அருகேயிருக்கும் சேவை சாலைக்குள் (சர்வீஸ் ரோடு) நுழைவோம் என்றோ, அல்லது சாலையில் பாதுகாப்பாக இருக்கும் பகுதிக்குப் போவோம் என்றோ யாரும் நினைப்பதில்லை. 
வாகனத்தை நகர்த்த முடியாத அளவு பழுதுபட்டு நின்றுவிட்டால், உடனேயே உரிய அதிகாரிகளுக்கு, அல்லது சாலையோர பழுது நீக்கும் நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்து, வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் நிலையை நாம் உருவாக்கவில்லை. 
நமது சாலைகளில் நடக்கும் பல விபத்துகள் இரவில் நின்றுகொண்டிருக்கும் வாகனங்களின் மீது மற்றொரு வாகனம் மோதுவதாகவே அமைகின்றன. இந்த அவலத்தை யாருமே கண்டுகொள்ளவில்லையே, ஏன்?
நமது சாலைகளில் பயணம் செய்யும் கணிசமான வாகனங்களின் பின்புறம் பிரதிபலிப்பான்களோ (ரிஃப்ளக்டர்), நிறுத்த விளக்குகளோ (பிரேக் லைட்), குறிப்பிடு விளக்குகளோ (இன்டிகேட்டர்) இருப்பதே இல்லை. 
இந்த வாகனங்களுக்கு எப்படி தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன? இவற்றை வழங்குவது யார்? இவை போன்ற பல கேள்விகள் நம் மனத்தில் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வார்தான் யாருமில்லை.
வட்டாரப் போக்குவரத்து (ஆர்.டி.ஓ.) அலுவலகத்திலிருந்து துவங்கும் அவலம் நெடுஞ்சாலைகள் எங்கும் நிறைந்திருக்கும் சுங்கச் சாவடிகளில் தொடர்கிறது. நூறு ரூபாய் முதல் நூற்றைம்பது ரூபாய் வரை சுங்க வரி ஈட்டும் வட இந்திய நிறுவனங்கள் மேற்குறிப்பிட்டப் பிரச்னைகளைக் கையாள வேண்டாமா? 
ஒரு முறை போடப்பட்ட சாலைக்கு ஆண்டாண்டு காலமாக காசு பிரிக்கிறார்களே? இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சாலைகளை மேம்படுத்தும், பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை, பொறுப்பு இவர்களுக்கு இல்லையா? 
ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஊழியர்களாக வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் விதிமீறல்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளே அண்மையில் கண்டித்திருக்கிறார்கள்.
தமிழகச் சாலைகள் சமமற்றுஅலைபாய்ந்து கிடக்கின்றன. சாலையில் பயணம் செய்யும்போது, ஏதோ கடலில் படகு விடுவது போன்ற உணர்வே எழுகிறது. மழை நேரத்தில் அதிகமான தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பகுதிக்குள் தெரியாமல் நுழைந்தால் விபத்து நடப்பது உறுதி.
வளைந்து செல்லும் சாலைகளில் தெருவிளக்குகளை இவர்கள் அமைப்பதில்லை. 'வளைவான சாலை' என்கிற முன்னெச்சரிக்கை அறிவிப்பையும் எங்கேயும் பார்க்க முடிவதில்லை. வளைந்தும், நெளிந்தும் செல்லும் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் பிரதிபலிப்பான்கள்கூட இருப்பதில்லை.
எதிரே வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் நமது கண்களில் படாமல் இருப்பதற்காக சாலையின் நடுவே செடிகள், மரங்கள் வளர்க்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் எதுவும் வளர்க்கப்படவில்லை. இதுவும் பல விபத்துக்களுக்கு காரணமாகிறது.
நெடுஞ்சாலைகளில் குறுக்கிடும் சந்திப்புக்களில் காவல்துறையினர் இரும்புத் தடுப்புக்களை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான தடுப்புக்களில் பிரதிபலிப்பான்கள் இருப்பதில்லை. 
வேகமாக வரும் வாகனங்கள், வெளியூர் ஓட்டுனர்கள் இந்த திடீர் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன்னரே பெரும் விபத்துக்கள் நடந்துவிடுகின்றன.
நெடுஞ்சாலைகளிலிருந்து சிறிய ஊர்களுக்குப் பிரிந்து செல்லும் பாதைகள் எளிதாகத் திரும்பும்படி இருப்பதில்லை. திடீரென வெட்டித்தான் திரும்ப வேண்டியிருக்கிறது. 
சாலைகள் எங்கும் அரசியல் கட்சிகளும், வியாபார நிறுவனங்களும் விளம்பரங்களை வைத்து வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். சாலைகளில் மாடுகள் நடமாடுவது, படுத்துக்கிடப்பது போன்ற ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. 
பல சுங்கச் சாவடிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட செய்யப்படவில்லை. பணம் ஈட்டும் உரிமம் பெற்றவர்கள் இவை எதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அவர்களுக்கு பணம், நமக்கு பயம் என்னும் நிலைதான் நீடித்துக் கொண்டிருக்கிறது.
தனியார்மயமாக்கப்பட்டுவிட்ட நெடுஞ்சாலைகள் பக்கம் அரசுத் துறைகள் மறந்தும் வருவதில்லை. நெடுஞ்சாலைகளில் எந்தப் பகுதியிலும் வேக வரம்பு (ஸ்பீடு லிமிட்) குறிப்பிடப்படவில்லை. வேக வரம்பை மீறுபவர்களை காவல்துறை கண்டுகொள்வதில்லை. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களைப் பெரும்பாலும் பிடிப்பதில்லை.
மொத்தத்தில் நமது நெடுஞ்சாலைகள் திறந்தவெளி மரணக்கிடங்குகளாக காட்சியளிக்கின்றன. வலுத்தவர்கள் பணம் பண்ணுகிறார்கள், இளைத்தவர்கள் இறந்து போகிறார்கள் எனும் நிலை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
தமிழக அரசியல் கட்சிகள் மேற்கூறிய ஏற்பாடுகளை செய்வதற்கு அழுத்தம்கொடுக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் சுங்கச் சாவடி உரிமம் எடுத்திருக்கும் நிறுவனங்களை கேள்வி கேட்டாக வேண்டும்; இவர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்தாக வேண்டும்.
அவை மட்டும் போதாது, விபத்துகள் நடக்கும்போது அந்த வாகன ஓட்டுநருக்கு உரிமமும், அந்த வாகனத்திற்குத் தகுதிச் சான்றிதழும் கொடுத்த அதிகாரியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும். 
சாலைப் போக்குவரத்துத் துறையில் தலைவிரித்தாடும் லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும். ஒவ்வோர் உயிரும் விலைமதிக்க முடியாதது 
என்பதை அரசும் அதிகாரிகளும் உணர வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024