Thursday, January 12, 2017

வேதனை!
ஜல்லிக்கட்டிலும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
சொதப்பல் :பிள்ளையாருக்கு
பதிலாக குரங்கை பிடித்த கதை தான்
 DINAMALAR
அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையாக இருக்க வேண்டியவர், எம்.பி.,க்களை திரட்டி வந்து, மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்படுவது தான், துணை சபாநாயகரின் பணியா' என்ற, பலத்த கேள்வி எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு விஷயத்தில், பிரதமரை சந்திக்க, முறையான அணுகுமுறையை பின்பற்றாமல், தமிழக நலனுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவது போன்ற தோற்றத்தை, அ.தி.மு.க.,வினர் ஏற்படுத்தியுள்ளதாகவும், டில்லியில் பேச்சு எழுந்துள்ளது.ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் வலுத்துவரும் நிலை யில், நேற்று, துணை சபாநாயகர், தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, டில்லிக்கு வந்து மனு அளித்தது.

முதலில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், அனில் மாதவ் தவே இல்லத்திற்கு சென்ற அந்தக்குழு, அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவின் கடிதத்தையே மனுவாக அளித்தது. இதன்பின், பிரதமர் அலுவலகத்திற்கு சென்று, அங்கும் ஓர் அதிகாரியைச் சந்தித்து, அதே கடிதத்தை மனுவாக அளித்துவிட்டு, பேட்டியும் அளித்தனர்.

மறக்கவில்லை

பிரதமரைச் சந்தித்து, அவசர சட்டம் இயற்ற வலியறுத்தப் போவதாக கூறிவிட்டு, வழக்கம்போல் இந்த முறையும், ஓர் அதிகாரியிடம் தான், இவர்களால் மனு அளிக்க முடிந்துள்ளது. இதுவரை, பல்வேறு பிரச்னைகளுக்காக, 11 முறை நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டும், நெய்வேலி நிறுவனப் பிரச்னைக்காக மட்டுமே, பிரதமரை, அ.தி.மு.க., - எம்.பி.,க்களால் சந்திக்க முடிந்தது. 'பார்லிமென்டில், அதிகம் பலம் உடைய கட்சியான, அ.தி.மு.க.,வுக்கு ஏன் இந்த அவலம்' என்பது குறித்த கேள்விக்கு, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டின் அரசியல் சாசன உயர் பதவிகளான, ஜனாதிபதி, பிரதமர் என்ற நடைமுறை வரிசை யில், 10வது இடத்தில் வருகிறது, லோக்சபா துணை சபாநாயகர் பதவி.பாரபட்சமின்றி,
அரசியலுக்கு அப்பாற்பட்டு நடப்பதுடன், அரசுக்கு எதிராக, எம்.பி.,க்கள், சபைக்குள் நெருக்கடி தரும்போது, அரணாக நின்று, அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமையும் உடையவர்கள் தான், சபாநாயகரும், துணை சபாநாயகரும்.
ஆனால், தம்பிதுரையோ, எம்.பி.,க்களை குழுவாக திரட்டி, அதற்கு இவரே தலைமையேற்று, பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி தருகிறார். கடந்த முறை, பார்லிமென்ட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு, எம்.பி.,க்களை ஊர்வலமாக, அவர் அழைத்து வந்ததை, பிரதமர் மறக்கவில்லை.

கண்ணியம் மிக்க துணை சபாநாயகர் அலுவலக, 'லெட்டர் பேடை' தன், சுய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி,
பார்லிமென்ட்டின் மாண்பை குலைத்தார். தற்போது, ஜல்லிக்கட்டு விவகாரத்திலும், இவரது நடவடிக்கை ஆச்சர்யம் அளிக்கிறது.

அதிருப்தி

துணை சபாநாயகர் என்பதால், அவசர சட்டம் குறித்த நடைமுறை, அவருக்கு தெரியும். நினைத்த மாத்திரத்தில், அதை கொண்டு வந்துவிட முடியாது. கடந்த வாரம் தான், அவசர சட்டங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் கடுமையான அதிருப்தியை வெளி யிட்டு இருந்தது.அவசர சட்டம் தான் தீர்வு என்றால், அதற்கு எப்போதிருந்தோ முயற்சி செய்திருக்க லாம். குளிர்கால கூட்டத் தொடரிலேயே ஒப்புதலை வாங்கியிருக்கலாம். அப்போது, பார்லி.,க்கு ஒருவர் கூட
வரவில்லை.

தற்போது கூட, ஜெயலலிதாமறைவு, பொதுக்குழு என பல பிரச்னைகளில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பிசியாக இருந்தாலும், டிசம்பர், 29க்கு பின், பெரிய வேலைகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. இந்த, 13 நாட்களாக, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்த னர். பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையிலேயே, தம்பிதுரைக்கு அக்கறை இருந்தால், குறைந்தபட்சம், இரண்டு நாட்களுக்கு முன்பே, முறைப்படி தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

சங்கடம்

பிரதமரின் இருப்பு மற்றும் அலுவல்களை கேட்டறிந்து, அதன் பின், எம்.பி.,க்களை அழைத்து
வந்திருந்தால், அது நியாயம். பிரதமர், கடந்த மூன்று நாட்களாக, குஜராத்தில் நடந்த மாநாட்டில் இருந்தார் என்பதும், அங்கிருந்து வந்ததும், டில்லியில், கென்யா அதிபருடன் அவருக்கு சந்திப்பு உள்ளது என்பதும் தம்பிதுரைக்கு தெரியும்.

ஒரு, 'பேக்ஸை' மட்டும் அனுப்பிவிட்டு, எம்.பி.,க் களை டில்லிக்கு வரச்சொல்வதும், பிரதமரை சந்திக்கப் போவதாக, முதல் நாள் செய்தியாக்கு வதும் ஏற்புடையதல்ல.இதன்மூலம், 'தமிழக நலன் களுக்கு எதிரானவர் மோடி; தமிழக எம்.பி.,க்களை சந்திக்க மறுக்கிறார்' என்பது போன்ற தோற்றத்தை, துணை சபாநாயகரே முன்னின்று செயல்படுத்துவது நியாயமல்ல.

தன் அரசியல் லாபங்களுக்காக, துணை சபாநாயகர் மற்றும் பிரதமர் அலுவலகங்களை கிள்ளுக்கீரை யாக மாற்ற, நினைக்கிறாரே என்ற வேதனை தான் மிஞ்சுகிறது.அரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு, பிரதமரின் நடைமுறை அலுவல்களைக் கூட உறுதிபடுத்தாமல், திடீரென டில்லிக்கு வந்து, பேட்டி, ஊர்வலம், செய்தி என, அரசியல் செய்வ தால், மத்திய, மாநில உறவுகளுக்கு ஊறு ஏற்படுவது மட்டுமல்ல; தேவையற்ற அரசியல் சங்கடங்களை யும் ஏற்படுத்தும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நிழல் முதல்வரா?

சசிகலா முதல்வராக வேண்டுமென, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக, தம்பிதுரை தான் அறிக்கை விட்டார். தற்போது, முதல்வரின் கடிதத்துக்கு பதிலாக, சசிகலாவின் கடிதத்தையே, டில்லியில் மனுவாக தந்துள்ளார்.இதைபார்க்கும் போது, 'பன்னீர்செல்வத்துக்கு எதிராக, தம்பிதுரை, மீண்டும் வாள் சுழற்றியுள்ளார். சசிகலா என்ற கேடயத்தை கையில் ஏந்தி, தமிழகத்தின் நிழல் முதல்வராக செயல்படு கிறாரா தம்பிதுரை' என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இது என்ன நியாயம்?

அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவின் கடிதம் தான் கோரிக்கை மனு; அதை, அமைச்சர், அனில் மாதவ் தவேவிடம், காலையில் அளித்தனர். பின்,
Advertisement
அதே மனுதான், பிரதமர் அலுவலகத்திலும் அளிக்கப்பட்டது. பிரதமரிடம் அளிக்க வேண்டிய மனுவை, அவருக்குப் போய்ச் சேரும் முன்பே, ஒரு அமைச்சரிடம் எப்படி அளிக்கலாம்? அப்படி யானால், பிரதமருக்கு அளிக்க வேண்டிய மனு பற்றிய விபரங்களை முன் கூட்டியே கசிய விடுகின்றனரா என்பதும் புரியவில்லை.

உடனே வர முடியுமா?

ஜல்லிக்கட்டு தொடர்பாக மனு அளிக்க சென்றபோது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர், கடைசி நேரத்தில், அடித்துப் பிடித்து ஓடிவந்தனர். விசாரித்தபோது, 'டில்லியில் கடும் குளிர். காலையில் விமான சேவை தினமும் பாதிக் கப்படுகிறது. மேலும், எல்லா எம்.பி.,க் களுமே சென்னையில் இருப்பதில்லை. இவர்கள் எல்லாம் கிளம்பி வர, போதிய அவகாசம் தராமல், உடனே பறந்து வா என்றால், முடியுமா' என, பதில் கேள்வி வருகிறது.

தீர்ப்புக்கு பின் நல்ல முடிவு:மத்திய அரசு உறுதி

'ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள், மத்திய அமைச்சர் அனில் தவேயை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர். அதன் பின், நிருபர்களிடம், அனில் தவே கூறியதாவது:

காளைகள் உட்பட, விலங்குகளை எப்படி நடத்த வேண்டும் என்பது நம் பாரம்பரியத்தில் உள்ளது. விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்பதை, யாரும் நமக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டும் அதுபோலத்தான். இதில், காளைகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப் படுவதில்லை.இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசு செய்த தவறு தான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். காளைகளை, காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்து, காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டது, தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடையாக அமைந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி களில், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும், அதன் பாரம்பரியம் குறித்தும் மீண்டும் முறையிடுவோம். இவற்றை கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.மற்றபடி, இந்த விவகாரத் தில், மத்திய அரசு தயாராகவே உள்ளது. நடு இரவில் கூட, தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காகத் தான் காத்திருக்கிறோம். அதன் பின்னரே, இதில் நல்ல முடிவை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024