Thursday, January 12, 2017

 வறட்சியால் பறிக்கப்பட்ட வாழ்வாதாரம்: சாகுபடியை இழந்து தவிக்கும் திருவாரூர் விவசாயிகள்

வி.தேவதாசன்

  
2003-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை அவல நிலை குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்திய நாள். டெல்டா மாவட்டமெங்கும் விவசாயிகள் பெரும் போராட்டத்தில் குதித்த நாள். அந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் வறட்சி வாட்டி யெடுத்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பாளையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம், தற்கொலை செய்து கொண்டார். 

ஆனால் அவர் உயிரை துறக்கும் முன், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது தற்கொலைக்கான காரணம் குறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, உயிரை விட்டார். வறட்சியும், வறுமையும், அதனால் சேர்ந்த கடனும் ஏற்படுத்திய நெருக் கடி பற்றி கடிதத்தில் விவரித்திருந்த சண்முகம், அப்போதைய மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் வை.சிவபுண்ணியம் மூலம் தமிழக முதல்வரிடம் இந்த கடிதம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற குறிப்பையும் அதில் எழுதியிருந் தார். அன்றைக்கு மக்கள் மன்றத்திலும், தமிழக சட்டப் பேரவையிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கடிதம் அது. 

இன்று மீண்டும் வறட்சி. ஆனால் 2003-ம் ஆண்டு கண்ட வறட்சி அல்ல; அதை விடவும் மோசமான வறட்சி. 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்கிறார்கள். சண்முகம் உயிர் துறந்த அதே பாளையக்கோட்டை கிராமத்தில் இந்த ஆண்டு மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கியிருக்கிறது இந்த ஆண்டின் வறட்சி. 

பாளையக்கோட்டை புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோகன். இந்த ஆண்டு 6 ஏக்கர் நிலத்தில் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்தார். எதிர்பார்த்தபடி ஆற்றில் தண்ணீர் வரவில்லை. பருவமழையும் பொய்த்தது. பயிரை இனி காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அசோகன் இழந்து விட்டார். இந்நிலையில், திடீரென பெய்த ஒரு சிறுமழையால் பயிருக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைத்தது. இந்த தண்ணீர் போதாது. ஆனாலும், வயலுக்கு உரம் கொடுத்து பயிரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று அசோகனின் மனம் பதைபதைத்தது. 

கையில் பணம் இல்லை. மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கடன் கொடுக்கக் கூடிய நிலையில் ஊரில் யாரும் இல்லை. வீட்டில் இருந்த சொற்ப அளவு தங்க நகையை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஓடினார் அசோகன்.
உயிரிழந்த விவசாயி அசோகனின் படத்துக்கு அருகே சோகத்துடன் அமர்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர். 

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அவரது மூத்த மகன் கலைவாணன் விவரிக்கிறார். “அது டிசம்பர் மாதம் 1-ம் தேதி. அப்பா நகையை எடுத்துச் சென்று இங்குள்ள ஐ.ஓ.பி. வங்கியில் ரூ.14 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். அந்த பணத்தை கொண்டு வயலுக்கு உரம் வாங்கி வந்து விடலாம் என்ற எண்ணத்தில் நீண்ட நேரம் வங்கியில் வரிசையில் நின்றிருக்கிறார். மாலை வரை பணம் கிடைக்கவில்லை. நகையை அடகு வைத்ததற்கான ரசீது மட்டும் கொடுத்த வங்கி அதிகாரிகள், வங்கியில் பணம் இல்லை என்றும், மறுநாள் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறும் கூறி விட்டனர்.
ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அப்பா, இரவு முழுவதும் தூங்காமல் மறுநாளாவது பணம் கிடைத்து விடுமா என்பது பற்றியும், வயலில் ஈரம் காய்வதற்குள் உரம் போட்டுவிட முடியுமா என்பது பற்றியும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை சாப்பிட கூட இல்லாமல் 8 மணிக்கெல்லாம் வங்கியின் முன்னே வரிசையில் போய் நின்றார். நீண்ட நேரம் வரிசையிலேயே காத்திருந்தார். சுமார் 10.30 மணி அளவில், நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்த அவர் அதே இடத்தில் சரிந்து கீழே விழுந்திருக்கிறார். அந்த இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். அப்பா சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் கருகி, சாகுபடியே அழிந்து விட்டது. பயிர்கள் மட்டும் சாகவில்லை. பயிர்கள் சாகும் முன்னே எங்கள் அப்பாவும் செத்து விட்டார்” என்று கண்ணீருடன் கூறினார் கலைவாணன்.
வறட்சியின் கோரம் 56 வயதில் அசோகனின் உயிரை பறித்து சென்று விட்டது. மூத்த மகன் விவசாயத்தை கவனிக்கிறார். இளைய மகனும், மகளும் கல்லூரியில் படித்து வருகின்றனர். யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அடுத்து என்ன செய்வது என எதுவும் புரியாமல் தவித்து வருகிறார் அசோகனின் மனைவி வேதவல்லி. 

வங்கிக்கு கோரிக்கை
இந்த சம்பவம் பற்றி மேலும் பல தகவல்களை தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் பி.பரந்தாமன், “அசோகன் எந்த நோக்கத்துக்காக நகையை அடகு வைத்தாரோ அதற்கு பணம் கிடைக்க வில்லை. இன்று வரை அந்த குடும்பத்துக்கு பணம் கிடைக்காததோடு, நகையும் இப்போது வங்கியில் உள்ளது. இனி இறப்புச் சான்று, வாரிசுச் சான்று என பல சம்பிரதாயங்கள் முடிந்து தான் வங்கியில் இருந்து நகையை பெற முடியும். 

இதற்கிடையே பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் அசோகனின் இளைய மகன் பிரவீனுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. கல்விக் கடன் பெறுவதற்கு உரிய தகுதி இருந்தும், உள்ளூரில் இருக்கும் அதே வங்கியிடம் கல்விக்கடன் கேட்டு எவ்வளவோ மன்றாடியும் கூட கடன் வழங்க மறுத்து விட்டார்கள். தங்கள் வங்கியின் வாசலில் கீழே விழுந்து உயிரை துறந்த ஏழை விவசாயியின் மகன் என்ற மனிதாபி மான அடிப்படையில், இப்போதாவது அசோக னின் மகனுக்கு கல்விக் கடன் வழங்க அந்த வங்கி நிர்வாகம் முன்வர வேண்டும்” என்றார். 

அசோகனின் மரணம் ஒரு உதாரணம் மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதுபோல தினமும் பல மரண செய்திகள் வந்து கொண்டே இருக் கின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருவாரூர் பகுதிகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலும் வறட்சி பெருமளவில் பாதித்துள்ளது. 

முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ஊராட்சி தர்க்காஸ் கிராமத்துக்கு சென்றபோது, கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து விரிந்திருந்த வயல்வெளியில் எங்கும் பச்சை நிறம் தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது நெற்பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பது போல இருந்தது. ஆனால் அந்த வயல்களில் கூட்டம் கூட்டமாக கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ஊராட்சி தர்க்காஸ் கிராமத்தில் வயல்களில் மண்டிக் கிடக்கும் புல், களைகளைக் காட்டும் விவசாயிகள்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, “பருவ மழை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் நேரடி விதைப்பில் நெல் விதைகளை தெளித்தோம். விதைத்த நெல் முளைத்து, பயிரும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. 

பிள்ளைகளைப் போல வளர்த்தோம்.. 
 
எங்கள் பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரித்து விட்டது. அந்த நீரை வயலுக்கு இறைத்தால், பயிர்கள் கருகி விடும். ஆகவே, ஆற்று நீர் அல்லது மழை நீர்தான் எங்களுக்கான பாசன ஆதாரம். இந்த சூழலில் ஆற்று நீரும் வராமல், பருவமழையும் பொய்த்ததால், நிலம் வறண்டுபோய் எங்கள் கண்ணெதிரே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்கள் கருகி அழிந்து விட்டன. 

அப்போதெல்லாம் பெய்யாத மழை கடந்த வாரம் திடீரென இரண்டு நாட்கள் கொட்டித் தீர்த்தது. ஏற்கெனவே பயிர்கள் அழிந்து விட்டதால் இந்த மழையால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த மழையால் வயல்களில் புல்லும், களையும் நன்கு செழித்து வளர்ந்து இப்போது பச்சைப் பசேலென உள்ளது. இந்த புல்தான் தூரத்தில் இருந்து பார்க்கும்போது நெற்பயிர்களைப் போல தெரிகிறது” என்றார். 

அந்த கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள், “பிள்ளைகளைப் போல வளர்த்த நெற்பயிர் கண்ணுக்கெதிரே அழியும்போது அதை தாங்கிக் கொள்ள மனதில் பெரும் தெம்பு வேண்டும். அழிந்து போன வயல்களைப் பார்த்து குடும்பம் குடும்பமாக கூடி அழுகிறோம். அழுது புலம்பி எங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம். இந்த அளவுக்கு கூட மனத்திடம் இல்லாத பலர் அதிர்ச்சி யாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரை விடுகின்றனர். இந்த நிலைமை இன்னும் எங்கு கொண்டு போய் விடும் என தெரியவில்லை” என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். 

சாகுபடியே இல்லாத ஆண்டு 
 
“எனக்கு 80 வயதாகிறது. என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு வறட்சியை பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை” என்கிறார் காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன். 

“ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் டெல்டாவில் குறுவையும், தாளடியும் சாகுபடி நடக்கும். ஒருவேளை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் தாமதமாகத் திறக்கப்பட்டால் சம்பா நெல் சாகுபடி நடைபெறும். ஆனால் ஒரு பருவம் கூட நெல் சாகுபடி இல்லாத ஒரு ஆண்டை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சாகுபடி செலவை ஈடுகட்டும் அளவுக்கு கூட மகசூல் இல்லை.
இதனால் மனமுடையும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், ‘அய்யோ எல்லாம் போச்சே’ என்ற அதிர்ச்சியில் உயிரைத் துறப்பதும், எங்களை மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்த்துகிறது. 

உச்ச நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துங்கள்.. 
 
நம்பிக்கை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அரசு போர்க்கால நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். விவசாயிகளின் மரணங்களை அலட்சி யப்படுத்தாமல், முறைப்படி பதிவு செய்து, உச்ச நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு உண்மை நிலைமையை தெரியப்படுத்தினால்தான் எதிர்காலத்திலாவது காவிரியில் உரிய நீர் பெற்று நமது சாகுபடியை உறுதி செய்ய முடியும்” என்றார் ரங்கநாதன். 

மன்னார்குடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வை.சிவபுண்ணியம் கூறும்போது, “நாட்டுக்கே உணவு படைத்த பெருமை மிக்க மண் இது. ஆனால் இன்று அதே மண்ணில் கவுரத்துடன் வாழ வழியில்லை என்ற மோசமான நிலைமையை தற்போதைய வறட்சி ஏற்படுத்தி விட்டது. இதனால் நம்பிக்கை இழந்த விவசாயிகள் தினமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு காலத்தில் ஆற்று நீர் வராவிட்டால் கூட, மழை நீரையும், நிலத்தடி நீரையும் நம்பி சாகுபடி செய்து விட முடியும் என்ற நம்பிக்கை திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்தது. ஆனால் இன்று மாவட்டத்தின் பெரும்பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விட்டதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. 

இந்த மாவட்டத்தில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்ற நிலைமை விரைவிலேயே வரப் போகிறது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் உட னடியாக தனி கவனம் செலுத்தி டெல்டா மக்க ளைக் காப்பாற்ற முன்வர வேண்டும்” என்றார். 

தொலைநோக்கு திட்டம் அவசியம் 
 
“டெல்டா மாவட்டங்களை பெரும் அழிவி லிருந்து காப்பாற்ற வேண்டுமானால், தொலை நோக்கு பார்வையிலான திட்டமிடல் அவசியம்” என்கிறார் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன். 

“பாசனம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் வேண்டும். அது மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், ஆறு, கால்வாய்களையும் தூர்வாரி நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான தனிப்பெரும் திட்டம், மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டுடன் உருவாக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ செல்வந்தர்களும், பெரும் தொழில் நிறுவனங்களும், சேவை அமைப்புகளும் முன்வர வேண்டும். 

எந்தவொரு விவசாயியும் தனது மனைவி யையும், குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்ள துணிய மாட்டான். ஆனாலும் டெல்டாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர் என்றால் இங்குள்ள நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் போதிய நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் பாண்டியன். 

இதற்கிடையே உயிரிழந்த விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் சில அமைச்சர்கள் பேசியுள்ளது விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், “வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்திய அமைச்சர்களை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என்றார். 

ஓரிரு நாளில் வரவுள்ள உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை வரவேற்க எவ்வித தயாரிப்பும் இன்றி, வாழ்வாதாரத்தையே இழந்த துக்கமான மன நிலையில் டெல்டா விவசாயிகள் உள்ளனர். ஊருக்கெல்லாம் உணவு தந்த அந்த உழவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் அரசு தற்போது எடுக்கும் நடவடிக்கைகள், இனி வரும் காலத்தில் உழவுத் தொழிலில் நம்மால் நீடித்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024