Thursday, January 12, 2017

கவனம் தேவை!

By ப. இசக்கி  |   Published on : 12th January 2017 01:30 AM  
 
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை நம்பி அப்பாவி பொதுஜனம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் வங்கிகளில் செலுத்தியாகி விட்டது.

பிரதமரின் அதிக மதிப்பு செலாவணி செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, நாட்டில் புழக்கத்தில் இருந்த 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூ.1000 மற்றும் 500-இல் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கு வந்தாயிற்று.
இப்போது பொதுமக்கள் கையில் பணம் இல்லை; ஆனால் வங்கிகளின் கையில் பணப் புழக்கம் ஏராளம்.

வங்கிகள் என்பவை பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், மேட்டுக்குடி மக்களுக்குமே கைகட்டி சேவையாற்றி வந்த நிலையில்தான் 1969 ஜூலை 19 நள்ளிரவில் அவற்றை தேசியமயமாக்கி
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அன்று அவர் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றிய உரையில், வங்கிகளை குறிப்பிட்ட நபர்களின் பிடியில் இருந்து விடுவித்தல், விவசாயிகளுக்குத் தேவையான கடன் வழங்குதல் உள்ளிட்ட ஐந்து முக்கிய நோக்கங்களை அறிவித்தார்.
ஆனால் அரை நூற்றாண்டு காலம் ஆகியும் அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இன்னமும்கூட வங்கிகள் பெரிய தொழிலதிபர்களுக்கும், வணிக கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் சேவை செய்வதில்தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிர சாமானிய ஏழை, எளிய மக்களின் தேவையை பூர்த்தி செய்வதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அரசின் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் கூட ஏகப்பட்ட அழுத்தங்களுக்கு பிறகுதான் அரைகுறை மனதுடன் சம்மதம் தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட 49 வங்கிகளின் கடந்த மார்ச் 2016 வரை வாராக் கடன் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 929 கோடி. கடந்த 10 மாதங்களில் இந்த தொகை மேலும் அதிகரித்திருக்கும். இந்த வாராக் கடன் பட்டியலில் உள்ள முதல் 20 பெரிய நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் சுமார் ரூ.1.54 லட்சம் கோடி. அவற்றை வழங்கியவை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்தான்.
இதற்கு காரணம், கடன் வழங்கும்போது கவனக் குறைவு, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு முக்கியமானவை. இந்த வாராக் கடன்களால் வங்கிகளின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அதுமட்டுமன்றி வங்கிகளின் நம்பகத்தன்மையே கேள்விக் குறியாகியது.
கடந்த 2000-ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 2010-ஆம் ஆண்டு வரை உலகில் பல நாடுகளை அச்சுறுத்திய பொருளாதார மந்தநிலையில் கூட இந்திய பொருளாதாரமும், வங்கிகளும் தாக்குப் பிடித்தன. அதற்கு காரணம், நம் நாட்டு மக்களின் பாரம்பரிய பண சேமிப்பு முறைதான் என்பது நிபுணர்களின் கருத்து.
இப்போது அந்த சேமிப்பு எல்லாம் செலாவணி செல்லாததாக்கிய அறிவிப்பால் வங்கிகளின் கஜானாவில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றின் சொந்தக்காரர்கள் இனிமேல் அவ்வளவு எளிதில் அவற்றை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது.

அப்படியானால் அந்த பணத்தை வங்கிகள் என்ன செய்யப் போகின்றன? கடன்தான் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கடன் யாருக்கு போய்ச் சேரும் என்பதுதான் சமானிய மக்களின் அச்சமாக உள்ளது.

முழுக்கால் சட்டை, புறச்சட்டை (கோட்), கழுத்துப்பட்டை அணிந்து குளிரூட்டப்பட்ட அறையில் வங்கி மேலாளருடன் கோடிக்கணக்கில் கடன் கேட்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பார் ஒருவர். விவசாயக் கடனுக்காக தங்க நகையை கையில் வைத்துக் கொண்டு கண்ணாடிக் கதவுக்கு வெளியே கால் கடுக்க நின்று கொண்டிருப்பார் ஒரு ஏழை விவசாயி. இது வங்கிகளில் அன்றாட காட்சி.

பெரிய தொழில் நிறுவனங்களுக்குக் கொடுத்த கடனை வசூலிக்க வங்கிகளுக்கு திராணி இருக்காது. ஏழை விவசாயி வாங்கிய கடனுக்காக அவரது புகைப்படத்தையும், விலாசத்தையும் அம்பலப்படுத்தி அவமானப்படுத்துவார்கள்.

இந்த நிலை இனிமேலும் தொடருமா, அல்லது சாமானிய ஏழை, எளிய மக்களின் சேமிப்பு, தேவையுள்ள ஏழை, எளிய மக்களுக்கே கடனாக கிடைக்குமா என்பதுதான் கேள்வி.
வாராக் கடன்களால் வங்கித் துறை சீரழிந்து கொண்டிருந்த நேரத்தில் பிரதமரின் அறிவிப்பு அவற்றுக்கு புதுரத்தம் பாய்ச்சியுள்ளது. வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் சுமார் ரூ.15 லட்சம் கோடியில் எந்த வகையில் பார்த்தாலும் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இப்போது உரியவர்களால் வெளியே எடுக்க முடியாது. அந்த நிதி என்பது வங்கிகளின் இதுவரையிலான வாராக் கடன் தொகைக்கு நிகரானது.

எனவே, இனிமேல் வங்கிகள் வாராக் கடன் நிதி பற்றாக்குறையால் தள்ளாட வேண்டியது இருக்காது. இந்த உபரி நிதியைக் கொண்டு மீண்டும் புதுக் கடன்களை கொடுப்பார்கள்.

புதுக் கடன் கொடுப்பதில் அரசும், வங்கிகளும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தொழில் நிறுவனம் அல்லது தொழிலதிபர் நாட்டில் எந்த ஒரு வங்கியிலாவது வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பச் செலுத்தவில்லை என்றால் அவருக்கு இனிமேல் புதுக் கடன் வழங்க முடியாது.

தொழில் நிறுவனத்தின் பெயரில் கடன் பெறும் அதன் உரிமையாளரே அந்த கடனுக்கு முழுப் பொறுப்பு. தொழிலில் இழப்பு ஏற்பட்டாலும் அவரது பிற சொத்துகள் அல்லது தொழில் மூலம் பணம் ஈட்டி கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.

மேலும், பெரிய தொழில் நிறுவனங்களின் கடனை வசூலிப்பதில் உள்ள சட்டப் போராட்டங்களைத் தவிர்க்க தேவையான மாற்றங்களையும் உடனே அரசு கொண்டு வந்தால்தான் சமானிய மக்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி உண்மையுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024