டிக்கெட் பரிசோதகராக இருந்த நினைவுகளுடன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி மீண்டும் ரயில் பயணம்
டிக்கெட் பரிசோதகராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய முன்னாள் கேப்டன் தோனி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயிலில் பயணம் செய்தார்.
விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக, கொல்கத்தா செல்வதற்காக 22 ஜார்கண்ட் வீரர்களுடன் ஹதியாவிலிருந்து ஹவுராவுக்குச் சென்ற கிரிய யோகா விரைவு ரயிலில் தோனி பயணம் மேற்கொண்டார். சனிக்கிழமையன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
எதிர்பார்ப்புக்கு இணங்க தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தோனி அணியினர் பாதுகாப்பாக பயணம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது.
ராஞ்சியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க 7 கிமீ தள்ளியுள்ள ஹதியா ரயில் நிலையத்தில் தோனியும் ஜார்கண்ட் வீரர்களும் கிரிய யோகா ரயிலைப் பிடித்தனர்.
நேற்று இரவு 9.10 மணியான பிறகும் கூட தோனி ரயில் பயணம் செய்யும் செய்தி பரவ ஹதியா ரயில் நிலையத்தில் பெண்கள் உட்பட தோனியின் ரசிகர்கள் பலர் குழுமினர்.
கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் தோனி 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ரயில் பயணம் மேற்கொண்ட நிலையில் 2-ம் வகுப்பு ஏ/சி பெட்டி ஜார்கண்ட் அணிக்கு ஒதுக்கப்பட்டது. 2001 முதல் 2005 வரை தோனி டிக்கெட் பரிசோதகராக இருந்துள்ளார்.
தோனி டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றிய காரக்பூர் ஜங்ஷனை ரயில் இன்று கடக்கும் போது தோனி விழித்திருந்தாரா என்பது தெரியவில்லை, ஆனால் தென்கிழக்கு ரயில்வே பொதுத்துறை அதிகாரி சஞ்சய் கோஷ் கூறும்போது, “எங்கள் முன்னாள் ஊழியர், இந்திய கிரிக்கெட் வீரராக கொடிகட்டி பறந்து வரும் நிலையில் மீண்டும் எங்கள் ரயிலில் பயணம் செய்வது நெகிழ்ச்சியான தருணமாக உள்ளது” என்றார்.
ஹவுரா ரயில் நிலையத்திற்கு தோனி பயணம் செய்த எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தது, அங்கிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தோனி நகர விடுதிக்கு பேருந்தில் சென்றார்.
No comments:
Post a Comment