எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகிய இருவரது அரசியல் வாழ்வுக்கும் அடிப்படை அமைத்துக்கொடுத்த படங்களில் ‘அடிமைப் பெண்’ணுக்குத் தனியிடமுண்டு. இருவருமே இரட்டை வேடம் ஏற்ற இந்தப் படம் வெளியாகி 48 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கடந்து சென்றிருக்கும் இந்தநேரத்தில் இந்தப் படத்தை டிஜிட்டல் முறையில் மீள் உருவாக்கம் செய்து வெளியிட இருக்கிறது தி ரிஷிஸ் மூவீஸ் நிறுவனம்.
பிரம்மாண்டமான முறையில் தனது சொந்தத் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். பார்த்துப் பார்த்து உருவாக்கிய இந்தப் படம், 25 வாரங்கள் ஓடி வசூல் சாதனை செய்தது. முதலில் சரோஜாதேவியை முதன்மைக் கதாநாயகியாகவும் மற்ற இரு கதாநாயகியராக ரத்னா, ஜெயலலிதா இருவரையும் ஒப்பந்தம் செய்திருந்தார். பல காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையில் சரோஜாதேவியின் திடீர் திருமணத்தால் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பை நிறுத்த வேண்டிவந்தது.
மீண்டும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பைத் தொடங்கியவர், சரோஜாதேவிக்கு பதிலாக ஜெயலலிதாவை முதன்மைக் கதாநாயகி ஆக்கினார். ஒரு கதாபாத்திரத்துக்காக மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவருக்கு சவாலான இரண்டு வேடங்களை ஒதுக்கினார். அந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா இந்தப் படத்துக்காக உண்மையாகவே கத்திச் சண்டை கற்றுக்கொண்டு அசத்தினார். படத்துக்காக ‘அம்மா என்றால் அன்பு’ பாடலைப் பாடிப் பாடகி அவதாரமும் எடுத்தார்.
புகழ்பெற்ற அந்தப் பாடலோடு எம்.ஜி. ஆருக்காக ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் தமிழ்த் திரையிசையின் காற்றில் கலந்தது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். கே.வி.மகாதேவன் இசையும் சொர்ணம் எழுதிய புரட்சிகரமான வசனங்களும் இடம்பெற, கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆரின் திரைமகுடத்தில் வைரமாக ஜொலிக்கும் படமாக மாறியது. விரைவில் ‘அடிமைப் பெண்’ணின் டிஜிட்டல் அழகைக் கண்டுகளிக்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தயாராகலாம்.
- ரசிகா
No comments:
Post a Comment