ரேஷனில் பொருட்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம் : பதிவு செய்ய ஜூன் 30 வரை அவகாசம்
இதுகுறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மானிய விலையில் ரேஷனில் பொருட்களை வாங்குபவர்கள், தங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்குவதற்கான ஒதுக்கீடு, இதை பொருத்தே முடிவு செய்யப்படும்.ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்படும். அதன் பின், ஆதார் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளுக்கு, மானிய விலை உணவு பொருட்கள் ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிக்கை, பிப்ரவரி 8ல் வெளியிடப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களை தவிர, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இந்த உத்தரவு கட்டாயம் பொருந்தும். புதிதாக ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். சமையல், 'காஸ்' மானியம், ரயில் பயண சலுகை என பலவற்றிக்கும், ஆதார் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ரேஷனில் பொருட்கள் வாங்கவும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு தயாராகும் ரேஷன் கடைகள் : மத்திய உணவுத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில், 17 ஆயிரத்து, 250 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில், வாடிக்கையாளர்களின் ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி, ரேஷன் பொருட்களை பெறலாம். ரேஷன் பொருட்களுக்கான தொகையை, 'ஏடிபி' என்னும் 'ஆதார் கார்டு பேமென்ட்' முறையில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 'ஏடிபி' மூலம் ரயில், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், எல்.ஐ.சி., தவணையை செலுத்தும் வசதியும் உள்ளதால் பொதுமக்கள் ரொக்கமற்ற பரிவர்த்தனை செய்ய முடியும். மார்ச் 31ம் தேதிக்குள், மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும், ஏடிபி திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அதனால் உணவுப் பொருள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment