கார்டனில் ஒருமையில் அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் ஓ.பி.எஸ்.: ஆதங்கத்தைக் கொட்டும் ஆதரவாளர்கள்
போயஸ் கார்டனில் ஓ.பன்னீர் செல்வத்தை ஒருமையில் அழைத்து அவமானப்படுத்தியதாக அவரது நெருக்கமான ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அமைதி வடிவமாக இருந்த ஓ.பி.எஸ்., கடந்த இரண்டு நாட்களாக மீடியாக்களிடம் மனம் திறந்து அதிரடியாய் சொல்லும் கருத்துக்கள் தமிழக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டது பற்றி பேசி வரும் ஓ.பன்னீர்செல்வம், ‘‘சொன்னது 10 சதவீதம் தான்; சொல்லாதது 90 சதவீதம் இருக்கிறது’’ என சஸ்பென்ஸ் வைக்கிறார்.
ஜெயலலிதா இல்லாத போயஸ் தோட்டத்தில் ஓ.பி.எஸ். நடத்தப்பட்ட விதம் குறித்தும் கடந்த சில தினங்களாக அவர் எத்தகைய கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டு வந்தார் என்பது குறித்தும் அவருக்கு நெருக்கமான வட்டத்தினர் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் கூறியதில் இருந்து…
‘‘முதலமைச்சர் பதவி தனக்கு நிரந்தரம் இல்லை என்பதும், சசிகலா அந்த இடத்துக்கு வருவார் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஜல்லிக்கட்டு, கிருஷ்ணா நதி நீர் விவகாரம் உள்ளிட்டவைகளை திறம்பட அவர் சாதித்ததை போயஸ் தோட்டத்தில் இருப்பவர்கள் ரசிக்கவில்லை.
இதற்கிடையில், எப்படியாவது அதிமுக-வுக்குள் குழப்பத்தை விளைவிக்க நினைத்துக் கொண்டி ருந்தது திமுக. இதற்காகவே, சட்டமன்றத்துக்குள் ஓ.பி.எஸ். நுழைந்த போது, ஸ்டாலின் உள் ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினார் கள். ஓ.பி.எஸ். காருக்கு வழிவிட்டு தனது காரை ஓரம் கட்டினார் ஸ்டாலின். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘‘தேவைப்பட்டால் ஓ.பி.எஸ்-ஸுக்கு நாங்கள் சக்தியளிப் போம்’’ என்றார் துரைமுருகன்.
இவை எல்லாமுமே, போயஸ் தோட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ஓ.பி.எஸ்-ஸை வேண்டுமென்றே சிறுமைப்படுத்த ஆரம்பித்தார்கள். 66 வயதான ஓ.பி.எஸ்-ஸை போயஸ் தோட்டத்தில் இருக்கும் சிலர், ’நீ.. வா.. போ..,’ என ஒருமையில் அழைத்து அவமானப்படுத்தினர்.
திமுக-வுக்கும் அவருக்கும் மறைமுக தொடர்புகள் இருப்பதாக சந்தேகித்தார்கள். இதையடுத்து, ஓ.பி.எஸ்-ஸை யார் யாரெல்லாம் சந்திக்க வருகிறார்கள், அவரது அசைவுகள் என்ன என்பதை தனியார் ஏஜென்ஸி மூலமாக உளவு பார்த்தனர்.
கடந்த 5-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் பற்றிய தகவல்கூட ஓ.பி.எஸ்-ஸுக்கு முறையாக சொல்லப்பட வில்லை. கூட்டம் குறித்த விவரம் முறையாக தனக்கு தெரிவிக்கப்படாததால் கடலில் கச்சா எண்ணெய் அள்ளப்படும் இடத்தை பார்வையிடுவதற்காக ஓ.பி.எஸ். மணலி சென்றுவிட்டார். அங்கிருந்து கோட்டைக்கு துறை முக பொறுப்புக்கழக அதிகாரி களுடனான சந்திப்புக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு அலை பேசியில் அழைப்பு வர, கோட்டைக்குப் போகாமல் கார்டனுக்கு போயிருக்கிறார். அங்கு போன பிறகுதான் சசிகலா அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.எல்.ஏ-க்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷயத்தை அவருக்கு தெரிவித்துள்ளனர்.
‘‘சசிகலா முதலமைச்சராக வருவதை இப்போதைக்கு கட்சித் தொண்டனும் தமிழக மக்களும் ஏற்கும் மனநிலையில் இல்லை. அந்த மனநிலைக்கு அவர்களை தயார்படுத்தும் வரை இந்த முடிவை ஒத்திப்போடலாம்’’ என்று அவர் சொன்னதை அங்கிருந்த மூத்த அமைச்சர்களும் சசிகலாவின் உறவுகளும் ஏற்கவில்லை. ‘‘அதையெல்லாம் நாங்க பார்த்துக் கொள்வோம். நீ ராஜினாமா எழுதிக்கொடு’’ என்று நெருக்கடி கொடுத்து ராஜினாமா கடிதத்தை வாங்கி உள்ளனர்.
கடந்த 7-ம் தேதி காலை 8.45 மணிக்கு சசிகலா தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. புதிதாக அமைச்சர்கள் பட்டியலில் கடந்த காலங்களில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட சிலரது பெயர்கள் இருந்துள்ளன. இதுகுறித்து ஓ.பி.எஸ்.ஸிடம் ஒப்புக்குக்கூட கலந் தாலோசிக்கவில்லை. கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஓ.பி.எஸ். தன் மனக்குமுறலை கொட்டியுள்ளார். அடுத்த சில நாட்களில் மிச்சத்தையும் அவர் கொட்டுவார்’’ என்று ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமான வட்டத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment