விசாரணை கமிஷன் பற்றி கவலையில்லை; முதல்வராக பதவியேற்பேன்: சசிகலா
விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை. தமிழக முதல்வராக நிச்சயம் பதவியேற்பேன் என அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சி சேனலுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு எங்கள் கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அன்றைய தினம் ஊட்டியில் இருக்கிறார் என அறிந்தோம். அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நான் தேர்வு செய்யப் பட்டது தொடர்பான கடிதத்தின் நகலை ஃபேக்ஸ் மூலம் ஊட்டியில் உள்ள ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு அனுப்பினோம்.
அதன்பிறகு ஆளுநர் மும்பைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பினோம். இது வரை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எனினும், என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்வ தற்கு ஏதேனும் அரசியல் பின்னணி இருக்கும் என நான் நினைக்க வில்லை. அரசியலமைப்புச் சட்டப் படியும், ஜனநாயக மரபுகளை பாதுகாக்கும் வகையிலும் ஆளுநர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அதிமுகவின் பெரும்பான்மை யான சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்னை கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்திருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
திமுக எதிரிக் கட்சி
சட்டப்பேரவையில் உங்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கி றோம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து திமுக உறுப்பினர்கள் பேசினர். அப் போது, ‘‘நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கி றோம். உங்கள் தயவு தேவை யில்லை’’ என்று பன்னீர்செல்வம் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்.
அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த முதல்வர் என்றே திமுகவி னர் நினைக்கவில்லை. உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறியதிலிருந்தே திமுகதான் பன்னீர்செல்வத்தின் பின்னால் இருக்கிறது என்பது தெளி வாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் என்னை முதல்வராக்க வேண்டும் என்ற தீவிரமான முடிவுக்கு எங்கள் கட்சி உறுப்பினர்கள் வந்தார்கள்.
திமுகவின் நிலைப்பாடு எப்போ துமே அதிமுகவை எதிர்ப்பதுதான். ஜெயலலிதாவை சேலையைப் பிடித்து இழுத்தவர்கள். அவர்கள் எங்களின் எதிரிக் கட்சி. திமுக விஷயத்தில் ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ, அப்படித்தான் நானும் செயல்படுவேன்.
பொய்ப் பிரச்சாரம்
மருத்துவமனையில் ஜெய லலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி திமுகவினர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான கருத்தை பரப்பி வருகின்றனர். 75 நாட்கள் மருத்துவ மனையில் ஜெயலலிதாவை நான் எப்படி பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை அங்குள்ள டாக்டர்கள் அறிவார்கள். வெளியில் பலர் சொல்வதைக் கேட்டு வருத்தப் படவில்லை. மனசாட்சிப்படி செயல் படுகிறேன். ஜெயலலிதாவைப் பிரிந்து வாடும் வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்.
ஆனால், இவ்வளவு நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பன்னீர் செல்வம், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறுவதைக் கேட்டுதான் வருத்தப் படுகிறேன். பச்சைத் துரோகியாக இருந்திருக்கிறாரே என நினைத்து வருத்தப்படுகிறேன்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை என்பது ஒரு திறந்த புத்தகம். எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தனர். லண்டன் டாக்டர் வந்தார். சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் வந்தார்கள். மாரடைப்பு ஏற்பட்ட அந்த நாளில்கூட பிசியோதெரபி செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் அவர் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். டிசம்பர் 29-ம் தேதி வீட்டுக்கு அழைத்து வரலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. விசாரணைக் கமிஷன் அமைப்பேன் என பன்னீர்செல்வம் கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவர் ஜெயலலிதாவுக்கு செய்யும் பச்சைத் துரோகம் பற்றிதான் வருத்தப்படுகிறோம்.
தமிழகத்தின் முதல்வராக நிச்சயமாக பதவி ஏற்பேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஜெயலலிதாவின் ஆசியோடு, அவர் தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்பட்டாரோ, அதே வழியில் நானும் தொடர்ந்து செயல்படுவேன்.
இவ்வாறு சசிகலா கூறினார்.
‘‘உங்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் ஒரு வார காலத்தில் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதற்கும், உங்களின் பதவி ஏற்பு விழா தாமதம் ஆவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளது என கருதுகிறீர் களா?’’ என்று கேட்டபோது, “நீதிமன்றங்களை மதிக்கிறேன். ஒரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுபற்றி கருத்து கூறுவது சரியில்லை’’ என்று பதிலளித்தார் சசிகலா.
No comments:
Post a Comment