எண்ணெய்க் கசிவு விபத்து கற்றுத்தருமா பாடம்?
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து, எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அழிவுகளும் மிகுந்த கவலை அளிக்கின்றன. கப்பலிலிருந்து பெரிய அளவில் வெளியேறிய கச்சா எண்ணெய், கடல்வாழ் உயிரினங்களைக் கடுமையாகப் பாதித்திருப்பதுடன், கரையோரப் பகுதி மக்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜிபிஎஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் துணையுடன் பாதுகாப்பான பயணங்கள் சாத்தியப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், துறைமுகத்துக்கு இவ்வளவு அருகில் இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவது ஆச்சரியம் தருகிறது. விபத்தில் சிக்கிய கப்பல்களில் ஒன்று, திரவ பெட்ரோலிய வாயு சுமந்துவந்தது. மற்றொரு கப்பலில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் இருந்தன.
ஆபத்து மிக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த விபத்து தொடர்பாக, முதல்கட்டமாக வந்த எதிர்வினைகள் மிக மோசமானவை. இந்த விபத்தால் சுற்றுச்சூழலில் குறிப்பிடும்படியான எந்த சேதமும் ஏற்படவில்லை என்றே தொடக்கத்தில் துறைமுகத்தின் சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், ஏராளமான ஆமைகளும், மீன்களும் செத்துக் கரையொதுங்கிய பின்னர்தான், ஒரு பேரழிவே நிகழ்ந்தது தெரியவந்தது. இத்தனை சேதம் விளைவதற்கு முன்னரே அதைத் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பதோடு, அபாயத்தின் தீவிரத்தை மக்களிடமிருந்து மறைக்க முயன்ற நடவடிக்கைகளும் மிகுந்த கண்டனத்துக்கு உரியவை. தேசிய எண்ணெய்க் கசிவு பேரழிவு எச்சரிக்கைத் திட்டத்தின்படி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில், கடலிலும் கடற்கரையிலும் படிந்திருக்கும் எண்ணெய்ப் படலத்தை நீக்கும் பணியில் தன்னார்வலர்கள் பலர் வாளிகள் மூலம் ஈடுபட்டதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழலில் பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள், சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து தனியே விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற விபத்துகள் முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது எதை என்றால், பிரம்மாண்ட திட்டங்களுக்குத் தயாராக இருக்கும் அளவுக்கு, இடர்களை எதிர்கொள்ளும் திறனுக்கு மூன்றாம் உலக நாடுகள் என்றைக்கும் தயாராக இருப்பது இல்லை என்பதையே. மேலும், எளிய மக்களின் வாழ்வாதாரம் எவ்வளவு துச்சமாக அணுகப்படுகிறது என்பதையும் இது காட்டுகிறது. விபத்தின் தொடர்ச்சியாக, ஒரு வாரத்துக்கும் மேலாகக் கடல் உணவு வியாபாரம் முற்றிலுமாக முடங்கியிருப்பதும் கடலோடிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும் அதிகாரத் தரப்பு உட்பட, எவரையும் உலுக்காதது கவனிக்க வேண்டியது. உண்மையில், பேரிடர்களுக்கு நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம் எனும் கேள்விக்கான பதிலும் இது தொடர்பில் நம்முடைய அரசின் அமைப்புகள் காட்டும் அக்கறையின்மையும் நம்மை மிகுந்த அச்சத்திலும் ஆயாசத்திலுமே ஆழ்த்துகின்றன.
No comments:
Post a Comment