வானவில் பெண்கள்: பல்துறை வித்தகி!
இளமைப் பருவம் கற்பதற்கு ஏற்றது. பல கலைகளிலும் திறமைகளை வளர்த்துக்கொள்ள உகந்த பருவம். பலரும் பத்தாம் வகுப்புக்கு வந்ததுமே, இந்தக் கற்றுக் கொள்ளும் பழக்கத்துக்குத் தடைபோட்டுவிடுவார்கள். ஆனால், இப்படிப்பட்ட தடை எதுவும் இல்லாமல் நடனம், படிப்பு, நாடகம் எனப் பல துறைகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் அர்ச்சனா சர்மா. காரணம் கேட்டால், “பல துறைகளிலும் நான் முறையான பயிற்சிபெற்றதும் பட்டை தீட்டப்பட்டதும் என்னுடைய பள்ளி இறுதியாண்டுக்குப் பிறகுதான். அதிலும் பிஹாரின் குக்கிராமத்தைச் சேர்ந்த என்னுடைய தந்தையின் கல்வி அறிவும், தன்னம்பிக்கையும்தான் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் என்னுடைய படிப்பைத் தொடரவைத்தது” என்கிறார் அர்ச்சனா.
பஞ்ச பாண்டவிகள்
பிஹாரின் உள்ளொடுங்கிய கிராமம் ஹஸிபூர். இந்த ஊரில் இன்றைக்கும் ஒரு பெண்ணுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால், அந்தப் பெண்ணின் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்துவிடுவார்களாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பஞ்ச பாண்டவிகளாக, அர்ச்சனாவும் அவருடைய சகோதரிகளும் பிறந்தனர். ஹஸிபூரில் ஆட்டோ மெக்கானிக் தொழில்நுட்பம் படித்து, பிரபல மோட்டார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அர்ச்சனாவின் தந்தை பல ஆண்டுகள் அனுபவத்துடன் மத்தியப் பிரதேசம், பெங்களூரு எனப் பயணித்து இறுதியாக சென்னையில் குடும்பத்துடன் குடியேறினார். சென்னை செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்தவுடன் கணினி அறிவியலில் பொறியாளர் பட்டத்தையும் எம்.பி.ஏ. பட்டத்தையும் பெற்றார் அர்ச்சனா.
சில்லு முதல் அவுரங்கசீப்வரை
“என்னுடைய தேடலுக்கும் முடிவுக்கும் என்றைக்குமே என் பெற்றோர் குறுக்கே நின்றதில்லை. அதனாலேயே பல துறைகளிலும் முழு மனதோடு என்னால் ஈடுபட முடிந்தது. படித்து முடித்தவுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. ஆனால் என்னால் அதில் முழுதாக ஈடுபட முடியவில்லை; விலகிவிட்டேன்.
நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்தேன். இப்படி ஒரு டிவி கமர்ஷியலில் நடிக்கும்போதுதான், தீபா ராமானுஜம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவரது முயற்சியால்தான் இரா.முருகன் எழுதிய ‘சில்லு’ என்னும் அறிவியல் நாடகத்தில் நடித்தேன். இந்த நாடகத்தில் நடித்த சில நாட்களில் ஆனந்த் ராகவின் ‘சதுரங்கம்’ நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்தேன். இந்த நாடகம் பல மேடைகளைக் கண்டது.
நடித்துக்கொண்டிருக்கும் போதே, மூன்றாண்டுகளுக்கும் மேலாக தனஞ்ஜெயன், சாந்தா தனஞ்ஜெயன் இவர்களிடம் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். என்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்தையும் கடந்த ஆண்டு நடத்தினேன். எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறேன்.
ஷ்ரத்தா அரங்கேற்றிய இந்திரா பார்த்தசாரதியின் ‘அவுரங்கசீப்’ நாடகத்தில் நான் ஏற்ற ரோஷனாரா பேகம் எனும் எதிர்மறை பாத்திரம் எனக்குப் பாராட்டை பெற்றுத் தந்தது. தற்போது அரசியல் அறிவியல் துறையில் ஆய்வு மாணவியாக இருக்கிறேன். படிப்பு, நடனம், நாடகம் எதுவாக இருந்தாலும், அதில் என்னுடைய நூறு சதவீத உழைப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
உன்னுடைய துறை எது என்பதை முடிவு செய்துகொள்… இரண்டு குதிரையில் சவாரி செய்ய முடியாது என்று என்னிடம் சிலர் அறிவுரை சொல்வார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான். என்னைப் பொறுத்தவரை இரண்டு அல்ல, அதற்கும் மேற்பட்ட குதிரைகளிலும்கூட சவாரி செய்யலாம். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான், எல்லாக் குதிரைகளையும் ஒரே வண்டியில் பூட்ட வேண்டும். அவற்றின் லகான் நம் கையில் இருக்க வேண்டும்” என்கிறார் வெற்றிப் புன்னகையோடு!
No comments:
Post a Comment