Friday, February 10, 2017

'ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்  #VikatanExclusive


தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்டப் பதற்றத்தில் இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க, அரசியல் ஜல்லிக்கட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்துக்கொண்டிருக்கிறார் சசிகலா. 'பீச் ரிசாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. பல எம்.எல்.ஏக்கள் கதறியடியே கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிய கணத்தில் இருந்து, அவருக்கான ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. நேற்று மதியம் அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு கொடுத்ததை கார்டன் நிர்வாகிகளால் நம்ப முடியவில்லை. தமிழக அரசியல் சூழல் குறித்து, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். கட்சி அதிகாரமும் கையை விட்டுப் போகும் பதற்றத்தில் இருக்கும் மன்னார்குடி உறவுகள், எம்.எல்.ஏக்களைக் குளிர்விக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘கோல்டன் பே பீச் ரிசாட்டில்’ நடக்கும் காட்சிகளை கலவரத்தோடு கவனித்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். "கோல்டன் பே ரிசார்ட் அமைந்துள்ள கூவத்தூரைச் சுற்றிலும், வயல் வெளிகளுக்கு வேலைக்குப் போகும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணிக்குச் செல்லும் மக்களை மன்னார்குடி முகாம் நியமித்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். கூவத்தூரைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் தூரத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். இந்த 1 கிலோமீட்டர் எல்லைக்குள் அவர்கள் அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. கல்லூரி, பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்களையும் அச்சுறுத்துகின்றனர். 150 குண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டள்ளனர். பேன்ட், சட்டை அணிந்து நவநாகரிமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளே அவர்கள் யார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. ரிசாட்டில் தமிழ்நாட்டுப் பதிவுள்ள வண்டிகளைக் காண முடியவில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரள பதிவெண் வண்டிகள்தான் அதிகளவில் சென்று வருகின்றன" என விவரித்த, கூவத்தூர் பகுதி அரசியல் பிரமுகர் ஒருவர்,

"எம்.எல்.ஏக்களின் சத்தமும் ஆட்டம் பாட்டமும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் நேற்று திரண்டு போய், மன்னார்குடி முகாம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்களிடம் தகராறு செய்துள்ளனர். ' நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. அதைப் பத்தி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்க கட்சி விவகாரம். எங்களை ஏன் டார்ச்சர் பண்றீங்க?' எனச் சத்தம் போட்டுள்ளனர். ' இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு எம்.எல்.ஏக்கள் கிளம்பிவிடுவார்கள்' என சமாதானப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு ஆளுநரை சசிகலா சந்தித்த பிறகும், எம்.எல்.ஏக்கள் கிளம்பவில்லை. மூன்று நாட்களாக ரிசார்ட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் 25 பேர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு மனநிலையில் உள்ளவர்களாம். தலைமைச் செயலகத்திலும் அவரோடு நெருக்கத்தைக் காட்டி வந்தவர்கள். இவர்களை மட்டும் தனியாகப் பிரித்து, பல மணி நேரம் வகுப்பு எடுத்துள்ளனர்.

'நீங்கள் என்ன மனநிலையில் இருந்தாலும், ஆட்சி கையைவிட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றால், சின்னம்மாவைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லையென்றால், ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள். மறுபடியும் நீங்கள் போட்டியிட்டாலும், வெற்றி பெற வாய்ப்பில்லை. இப்படியொரு நிலைமைக்கு ஆளாக வேண்டாம். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறோம்' என அன்பான குரலில் அதட்டியுள்ளனர். இதை ஏற்காத சில எம்.எல்.ஏக்கள், 'எங்களை ஏன் அடைச்சு வச்சு அடிமை மாதிரி நடத்தறீங்க. ஆஸ்பத்திரியைவிட மோசமா இருக்கு. யார்கிட்டயும் பேச முடியல. வெளியில என்ன நடக்குதுன்னே தெரியலை' எனக் கதறியுள்ளனர். 'நிலைமை சுமூகமாகற வரைக்கும் நீங்க இங்கதான் இருக்கணும்' என மிரட்டியுள்ளனர் மன்னார்குடி கோஷ்டியினர். ரிசார்ட்டில் இருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டவர்கள் அடிக்கடி வெளியில் போய் வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் நடக்கின்றன" என விவரித்து முடித்தார்.

"நேற்று எம்.எல்.ஏக்களில் சிலர் அதீத உற்சாகத்தில் ஆட்டம் போட்டுள்ளனர். ரிசார்ட்டில் நீச்சல் குளத்தில் குதித்து ஆட்டம் போட்டதில், இரண்டு எம்.எல்.ஏக்கள் தவறி விழுந்துவிட்டனர். அவர்களின் நிலையைப் பார்த்துப் பதறிப் போய், நடிகர் கருணாஸ் தண்ணீரில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளார். அவரோடு சில எம்.எல்.ஏக்களும் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமாக நீச்சல் குளத்துத் தண்ணீரை அவர்கள் குடித்துவிட்டனர். விடிந்தும் பல எம்.எல்.ஏக்களுக்கு உற்சாகம் குறையவில்லை. நேற்று இரவே ஊருக்குக் கிளம்பும் மனநிலையில் பல எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். ஆனால், சுமூக சூழ்நிலை திரும்ப இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று இரவு நண்பர் ஒருவருக்குப் போன் செய்த எம்.எல்.ஏ, 'மிக சந்தோஷமாக இருக்கிறோம்' எனப் பேசிக் கொண்டிருந்தபோதே கதறி அழுதிருக்கிறார். மன்னார்குடி டீம் இங்கிருந்து செல்லும் வரையில் கூவத்தூர் மக்களுக்கும் விடுதலை இல்லை" என ஆதங்கத்தோடு பேசினார் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர்.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar  TIMES NEWS NETWORK 12.01.2025 Bhopal : Two more crocodiles were rescued on Satu...