ஜெ. சமாதியில் கையால் ஓங்கி அடித்து சசிகலா சபதம்; சரணடைய பெங்களூரு புறப்படுகிறார்!
படம்: ஆ.முத்துக்குமார்
நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா காரில் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, சமாதி மேல் மூன்று முறை கையை அடித்து சபதம் செய்தார்.
மறைந்த ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நான்கு பேருக்கும் நான்காண்டு சிறைத்தண்டனையும், பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்ததோடு, உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனிடையே, நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரி சசிகலா தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிராகரித்து உச்சநீதிமன்றம், உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், போயஸ் கார்டனில் இருந்து காரில் சசிகலா, இளவரசி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது, பூ தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார்.
ராமாபுரத்தில் தியானம்
இதைத் தொடர்ந்து ராமாபுரம் சென்ற சசிகலா, அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் வீட்டில் இருந்த எம்ஜிஆர் படத்துக்கு கீழே அமர்ந்து சசிகலா சிறிது நேரம் தியானம் செய்தார். இதையடுத்து, அங்கிருந்து பெங்களூரு நீதிமன்றத்துக்கு காரில் சசிகலா, இளவரசி ஆகியோர் சென்றனர்.
No comments:
Post a Comment