Thursday, September 14, 2017

வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடிவு 100 சிறிய பேருந்துகள் 2 மாதங்களில் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

Published : 14 Sep 2017 09:42 IST

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மாதங்களில் 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடிவடைந்துள்ளது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லாத பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் சுமார் 200 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5, அதற்கு மேல் ரூ.6, ரூ.8 ரூ.9 என வசூலிக்கப்படுகிறது.

இந்த பேருந்துகளில் 27 பேர் அமர்ந்து செல்லலாம். இந்த பேருந்துகள் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதையடுத்து மேலும், 100 சிறிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தினமும் ரூ. 3,500 வசூல்

சென்னையில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. ஆட்டோ மற்றும் கால்டாக்சியை நம்பியிருந்த மக்கள், தற்போது சிறிய பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். சிறிய பேருந்துகள் மூலம் தினமும் தலா ரூ.3,500 வசூலாகிறது.

இதற்கான பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருவாய் பெற உதவியாக இருக்கிறது. அடுத்தகட்டமாக 100 சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான வழித்தடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 20 சிறிய பேருந்துகள் இயக்கப்படும். உட்புறம், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் 80 சிறிய பேருந்துகளும் அடுத்த 2 மாதங்களில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024