Wednesday, September 20, 2017

தலையங்கம்  அவிழ்க்க சிரமப்படும் சட்டசிக்கல்


தமிழ்நாட்டில் 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன், தி.மு.க.வில் யார் முதல்–அமைச்சராக வருவது குறித்து தொடக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை.

செப்டம்பர் 20 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன், தி.மு.க.வில் யார் முதல்–அமைச்சராக வருவது குறித்து தொடக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை. ஒன்றாகவே செயல்பட்டனர். 1972–ல்தான் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க. என்ற தனிக்கட்சியை உருவாக்கினார். 1987–ல் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன், ஜா–அணி, ஜெ–அணி என்று பிளவு ஏற்பட்டாலும், சிறிது காலத்தில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து ஜெயலலிதா தலைமையில் கட்சி வலுவுடன் செயல்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன், முதலில் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று உருவெடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பு நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அப்போது, அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி.தினகரன் அணி என மூன்று அணிகளாக பிளவுப்பட்டிருந்தது. அதன்பிறகு ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தது. டி.டி.வி.தினகரன் அணி தனியாகவே இருந்தது.

தினகரன் ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏ.க்கள், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சராக செயல்பட ஆதரவு அளிக்கவில்லை என்று கடிதம் கொடுத்தனர். இந்த 19 பேரில், ஒருவரான ஜக்கையன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்து, தான் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக சபாநாயகருக்கும், கவர்னருக்கும் தெரிவித்துவிட்டார். ‘கவர்னரிடம் போய் இவ்வாறு கடிதம் கொடுத்தது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாங்களாகவே முன்வந்து வெளிவந்ததாக கருதப்படுகிறது’ என்ற அடிப்படையில், இந்திய அரசியல் சட்டம் 10–வது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மை ஆக்குதல்) விதியின்கீழ் மீதமுள்ள 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை தகுதியிழக்க செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இப்போது சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடமுடியும் என்றநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது சட்டப்படி செல்லுமா? என்பதில்தான் கடுமையான சட்டசிக்கல் ஏற்பட்டுவிட்டது.

எதிர்கட்சிகள் எல்லாம், இது ஜனநாயக படுகொலை என்று கூறுகிறார்கள். அரசியல் சட்டத்தில் 102, (2) (ஏ) பிரிவின்கீழ் ஒருவர் அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே தகுதி இழக்கும் நிலையை அடைகிறார் என்றும், 102(2) (பி)–ன் கீழ் தன்கட்சி பிறப்பித்த கட்டளையை மீறி சட்டமன்றத்தில் ஓட்டுப்போட்டாலோ, ஓட்டுப்போடாமல் இருக்கும் வகையில் அவைக்கு வராமல் இருந்தாலோ தன்பதவியை இழக்கும்நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், உத்தரகாண்டில் இதேபோல் 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்–மந்திரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி கவர்னரை சந்தித்ததையொட்டி அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுத்தது சரியே என்று உறுதிசெய்தது. ஆனால், உத்தரகாண்டில் இந்த 9 எம்.எல்.ஏ.க்களும், 27 எதிர்கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து கவர்னரை சந்தித்தனர். இதனால் அதுவும், இதுவும் ஒன்றாக வராது என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில், தகுதிநீக்கம் செல்லுமா?, செல்லாதா? என்பது இனி நீதிமன்றங்களின் தீர்ப்புகளில்தான் இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக இன்றுவரும் வழக்கில் நிச்சயமாக ஒரு பதில் கிடைக்கும் என்றாலும், இந்தப்பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை இழுத்துக்கொண்டேதான் போகும். இந்த சிக்கலுக்கான முடிவை நீதிமன்றங்கள்தான் தரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024