சென்னை:கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ௧௮ பேரை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள், இன்று நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வருகின்றன.
இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம், என்ன தீர்ப்பு கூறுமோ என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னரை சந்தித்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,19 பேர், கடிதங்கள் அளித்தனர். இதையடுத்து, அரசு கொறடா அளித்த புகாரில், 19 எம்.எல்.ஏ.,க்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார்; நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்; பின், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். அதே நேரத்தில், சபாநாயகர் முன், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், வழக்கறிஞர், என்.ராஜா செந்துார் பாண்டியன் ஆஜராகி, சில ஆவணங்களை கோரினர்.
மனு தாக்கல்
இந்நிலையில், பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் உத்தர விடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.இம் மனுவை,நீதிபதி எம்.துரைசாமி விசாரித்தார். விசாரணையின் போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், 'நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் விதத்தில், தகுதி நீக்கம் செய்யக் கூடும்; எனவே, அதுகுறித்து நாங்கள் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டும்' என்றார்.
இவ்வழக்கு விசாரணையை, ௨௦ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி துரைசாமி, 'அதுவரை, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது' என, உத்தரவிட்டார். ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவும், வெற்றிவேல் மனுவும், நீதிபதி துரைசாமி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளன.
இதற்கிடையில், 18 எம்.எல்.ஏ.,க்களையும்
தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தர விட்டுள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18
எம்.எல்.ஏ.,க்களும் மனு தாக்கல் செய்கின்றனர். நேற்று மாலை வரை, வெற்றிவேல் உள்ளிட்ட எட்டு, எம்.எல்.ஏ.,க்கள், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
உத்தரவு செல்லாது
மனுக்களில், 'எங்களுக்கு பதில் அளிக்க, உரிய சந்தர்ப்பம் தரப்படவில்லை; கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வில்லை. சபாநாயகரின் உத்தரவு செல்லாது. 'விசாரணை முடியும் வரை, சபாநாயகரின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிபதி எம்.துரைசாமி முன், வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி, ''எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்படும் மனுக்களை, அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என்றார். அதற்கு, நீதிபதி துரைசாமி, ''வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில், நாளை விசாரணைக்கு எடுக்கிறேன்,'' என்றார்.
சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜர் ஆகின்றனர். எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்புக்கு முழுமையான தடை விதிக்கப்படுமா; நிபந்தனைகளுடன் கூடிய தடை இருக்குமா அல்லது எதிர் தரப்பில் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்பப்படுமா என்பது, இன்று தெரிய வரும்.
No comments:
Post a Comment