Friday, September 15, 2017

மாவட்ட செய்திகள்
வக்கீல் உள்ளிட்ட 3 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு


போர் நினைவு சின்னம் அருகே போலீஸ்காரரை தாக்கிய வக்கீல் உள்ளிட்ட 3 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செப்டம்பர் 15, 2017, 03:45 AM
சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேசன் (வயது 39). வக்கீலான இவர் ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்கள் குமார் (45), விக்னேஷ் (19) ஆகியோருடன் 2 மோட்டார் சைக்கிளில் புளியந்தோப்பு பகுதியில் இருந்து மயிலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கொடிமரச்சாலையில் சென்றபோது, போர் நினைவு சின்னம் அருகே கோட்டை போக்குவரத்து போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த லிங்கேசன் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தர்மஅடி

உடனே போலீசார் அவர்களை கண்டித்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது லிங்கேசனுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் லிங்கேசன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, சதீஷ்குமார் என்ற போலீஸ்காரரை தாக்கியதாக தெரிகிறது. உடனே சதீஷ்குமார் அடி தாங்க முடியாமல், அருகே உள்ள அன்னை சத்யா நகருக்கு ஓடிச்சென்று சத்தமிட்டார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிலர் போலீசை தாக்கிய 3 பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர். அதில் அவர்கள் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டரை தாக்கினர்

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்கள் 3 பேரையும், போலீஸ்காரர் சதீஷ்குமாரையும் மீட்டு கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் போலீஸ்காரர் சதீஷ்குமாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, மற்ற 3 பேரையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லிங்கேசன் உள்ளிட்ட 3 பேரும் பணியில் இருந்த பிரபு(27) என்ற பயிற்சி டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கினர். தகவல் அறிந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

டாக்டர்கள் போராட்டம்

தாக்கப்பட்ட போலீஸ்காரர் சதீஷ்குமார், கோட்டை போலீஸ் நிலையத்திலும், பயிற்சி டாக்டர் பிரபு பூக்கடை போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பணியில் இருந்த பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் மற்றும் டாக்டர்கள் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மருத்துவமனை டீன் நாராயணபாபு பேச்சுவார்த்தை நடத்தி, பணியின்போது உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024