ஆட்சியரானார் விவசாயியின் மகள்!
By DIN | Published on : 06th September 2017 12:34 PM |
மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் பாண்டுரங்க பாஜிபகரே. இவர் ஒரு விவசாயி.
வானமும் மண்ணும் கை விரித்து விட்டதால் வறுமை வீட்டுக்குள் வந்து உட்கார்ந்துவிட்டது. அரசு விவசாயிகளுக்கு தரும் நிவாரண உதவி பெற அரசு அலுவலகங்களில் பல அதிகாரிகளைக் கண்டு மனு கொடுத்து கெஞ்சிக் கூத்தாடியதுதான் மிச்சம். ஒரு பலனும் இல்லை.
சோர்ந்து களைத்து வீடு திரும்பும் அப்பாவைப் பார்த்து மகளுக்கு கண்கள் பனிக்கும். "இப்படி தினமும் அலைகிறீர்கள்... அரசு தருவதாகச் சொன்ன உதவி நிவாரணம் கிடைத்தபாடில்லை.. இந்த உதவிகளை வழங்க பொறுப்பான அதிகாரி யார்' என்று அப்பாவிடம் கேட்க.. "மாவட்ட ஆட்சியர்தான் இந்த உதவிகளை செய்து தர வேண்டும்' என்று அந்த விவசாயி மகளிடம் சொன்னார். மகளின் மனதில் அது பதிந்தது. இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விவசாயியின் மகள் தன்னை மாவட்ட ஆட்சியராக மாற்றிக் காட்டி இருக்கிறார். அவர்தான் ரோகிணி. சேலம் மாவட்ட ஆட்சியர்.
"அப்பா அரசு அலுவலங்களில் நிவாரணம் பெற ஏறி இறங்கி கஷ்டப்பட்டதுதான்' ஒரு பொறுப்பான அரசு அதிகாரியாகி மக்களுக்குப் பொறுப்பான முறையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது'' என்கிறார் ரோகிணி. இவர் சேலத்திற்கு வருமுன் கூடுதல் ஆட்சியராகவும், சில சம பொறுப்புகளிலும் எட்டு ஆண்டுகள் மதுரையில் பணியாற்றியுள்ளார். அதனால் சகஜமாக மதுரைத் தமிழ் பேசுகிறார். ரோகிணியின் கணவர் விஜயேந்திர பிதாரி ஒரு ஐபிஎஸ் அதிகாரி.
"நான் பள்ளிப் படிப்பினை அரசு பள்ளியில்தான் படித்தேன். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, அரசு பொறியியல் கல்லூரியில்தான் படித்தேன். ஐஏஎஸ் தேர்விற்காக சுயமாக பயிற்சிகளை மேற்கொண்டு என்னைத் தயார் படுத்திக் கொண்டேன். எந்த பயிற்சி நிறுவனங்களிலும் சேரவில்லை.
அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். நன்றாகப் பாடங்களை சொல்லித் தருகின்றனர். இது நான் என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தது. ஆனால் அரசுப் பள்ளிகளில் போதுமான வசதிகள் இருப்பதில்லை. சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் போதுமான வசதிகளை செய்து தருவதில் கவனம் செலுத்துவேன். அப்பாவுக்கு இப்போது அறுபத்தைந்து வயதாகிறது. "அப்பா.. நான் சேலம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கிறேன்'' என்று தெரிவித்தேன். "பொது மக்களுக்கு முக்கியத்துவம் கொடும்மா'' என்று வலியுறுத்தினார். அதில் எத்தனை அர்த்தங்கள் உண்டு என்பதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்'' என்கிறார் ரோகிணி நெகிழ்ச்சியுடன்.
- அங்கவை
- அங்கவை
No comments:
Post a Comment