Monday, September 4, 2017

அனிதாவின் தற்கொலையைக் கோழைத்தனம் என்பவர்களுக்கு ஈரோடு மகேஷ் அளித்துள்ள பதில்!

By பவித்ரா முகுந்தன் | Published on : 04th September 2017 02:25 PM |

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தனது மருத்துவர் கனவு பறிபோனதை எண்ணி தற்கொலை முடிவெடுத்த மாணவி அனிதாவை கோழை என்று விமர்சிப்பவர்களுக்குத் தமிழ் பேச்சாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஈரோடு மகேஷ் அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இன்று காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் பலரது கேள்விகளுக்கான பதில்களைக் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

“அன்பு தங்கை அனிதாவுடைய மரணம் அனைவராலும் தாங்க முடியாத ஒரு மிகப் பெரிய இழப்பு. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் யார் இந்த மரணத்திற்குக் காரணமோ அவர்களே இதற்கு அழுவதும், புலம்புவதும்தான் பெரிய கொடுமை நமது நாட்டில். ஒரு கட்சி சின்னத்தைக் காப்பாற்ற போராடிய உங்களால், ஒரு கட்சியை காப்பாற்றப் போராடிய உங்களால், எம்எல்ஏ-க்களை காப்பாற்றப் போராடிய உங்களால், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாதா?

தற்கொலை செய்வது கோழைத்தனம் என்று கூறும் அத்தனை பேருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், என்றாவது வாழ்க்கையுடைய கனவா இருந்த ஒன்று கிடைக்காமல் போன சோகம் உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? மழை அதிகமா பெய்தாலே அந்த வீடு இடிந்து விழுந்துவிடும், அந்தக் குழந்தை அதில் படித்திருக்கா. ஒவ்வொரு பாடத்திற்கும் அத்தனை டியூஷன் வெச்சு படித்த மாணவர்களே 800, 900 மதிப்பெண்களைத் தாண்டுவதில்லை, ஆனால் இந்தக் குழந்தை 1176 மதிப்பெண் எடுத்திருக்கு, எப்படி அந்தக் குழந்தையால் இந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியும்?

ரொம்ப அழகா சொன்னார் டாக்டார்.அப்துல் கலாம் அவர்களுடைய அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள், மத்திய அரசு நடத்துற ஏய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு தேவை இல்லையாம், மாநில அரசுக்குத்தான் தேவையாம், ஏனா இங்க மாநில அரசு ஒண்ணுமே இல்லை பாத்திகளா, அதனால் இங்கதான் தேவையாம்.

இங்க பாருங்க நீங்க நீட் தேர்வு வையுங்க நான் வேண்டாம்னே சொல்லலை, ஆனால் எங்கள் குழந்தைகள் எந்தக் கல்வியில் படிக்கிறதோ அந்த அடிப்படையில் வினாத்தாள்கள் தயார் செய்யுங்கள், குழந்தைகள் எழுத போராங்க. தமிழகத்தில் இருந்து நல்ல மருத்துவர்கள் வரக்கூடாது என்பது உங்களது லட்சியம், ஏழைகள் மருத்துவர்கள் ஆகக் கூடாது என்பது உங்களது லட்சியம் அவ்வளவுதான? இதற்கெல்லாம் நாங்கள் சும்மாவே இருக்க மாட்டோம்.

நீங்க அடிப்பதற்கும், அழ வைப்பதற்கும் ஆட்கள் நாங்கள் கிடையாது. கண்டிப்பா ஒரு மிகப் பெரிய போராட்டம் வெடிக்கத்தான் போகிறது. அடுத்த முறை நீட் தேர்வு வராமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் நாம் செய்ய வேண்டும் நண்பர்களே. இது நம் தங்கையினுடைய இழப்பு, இது நம் வீட்டுப் பெண் பிள்ளையினுடைய இழப்பு.


அந்தக் குழந்தை ஒரு வீடியோ பண்ணியிருப்பா, கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் பேசியிருப்பா, அந்த வீடியோவை பாருங்கள், அந்தக் குழந்தையோடு கண்களில் எப்படியாவது மருத்துவ படிப்பை படிப்பதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துவிடும் என்கிற ஒரு ஆசை, இலக்கை அடைந்து விடுவோம் என்கிற நம்பிக்கை தெரியும். வருத்தமா இருக்கு, இப்படியொரு மானங்கெட்ட தேசத்தில் இருக்கோமேனு வருத்தமா இருக்கு.

இப்போது அத்தனை பேரும் அறிவிக்கிறார்கள் இந்த உதவி, அந்த உதவி, இவ்வளவு நஷ்டயீடு அப்படி இப்படினு, ஏன் எத்தனையோ அரசியல்வாதிகளுடைய மருத்துவக் கல்லூரி இங்க இருக்கே, அதுல யாராவது ஒருத்தர் ஒரு சீட் கொடுத்திருக்கலாமே? உங்களுக்குத் தேவை என்றால் சட்டத்தை மாற்ற முடியும் என்றால், எங்களுக்குத் தேவை என்றாலும் நீங்கள் சட்டத்தை மாற்ற வேண்டும். இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!!”


No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2025